full screen background image
Search
Friday 22 November 2024
  • :
  • :
Latest Update

அன்னபூரணி – திரைவிமர்சனம்

அன்னபூரணி – திரைவிமர்சனம்

அன்னபூரணி நயன்தாரா, ஜெய், சத்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி அச்சுதகுமார்,குமாரி சச்சு,ரேணுகா,கார்த்திக் குமார், சுரேஷ் சக்கரவர்த்தி,மற்றும் பல நடிப்பில் தமன் இசையில் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் அன்னபூரணி

நயன்தாரா முழுக்க முழுக்க ஒரு குடும்ப பாங்கான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் படம்

ஸ்ரீரங்க பிராமண குடும்பத்து பெண்ணான நயன்தாரா, சிறு வயதில் இருந்தே இந்திய அளவில் புகழ் பெற்ற சமையல் கலை நிபுணராக வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால், தங்களது ஆச்சாரமான குடும்பத்திற்கு அது சரிபட்டு வராது என்று கூறி அவரது தந்தை ஆரம்பத்திலேயே தடை போடுகிறார். தந்தையின் தடையை மீறி அவருக்கு தெரியாமல் சமையல் கலை படிப்பு படித்து வரும் நயன்தாரா, தனது லட்சியப் பாதையில் பல்வேறு தடைகளை எதிர்கொள்ள நேரிடுகிறது. அதிலும் முக்கியமாக உடல் ரீதியாக அவருக்கு ஏற்படும் பாதிப்பால் இனி அவரால் சுவையாக சமைக்கவே முடியாது என்ற நிலை ஏற்படுகிறது. அதில் இருந்து அவர் மீண்டு வந்து சாதித்தாரா?, இல்லையா? என்பது தான் ‘அன்னபூரணி’-யின் கதை.

 

திகில், திரில்லர், ஆக்‌ஷன் போன்ற கதையம்சம் கொண்ட படங்களில் கதையின் நாயகியாக நடித்து வந்த நயன்தாரா, முதல் முறையாக ஒரு உணர்வூப்பூர்வமான கதையம்சம் கொண்ட படத்தில் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். ஆனால், லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் அவருடைய அன்னபூரணி கதாபாத்திரம் அமையவில்லை என்பது பெரும் வருத்தம். தனது வேடத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நயன்தாரா நடித்திருந்தாலும், அவருடைய வேடம் ரசிகர்களிடத்தில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது அவருக்கு மட்டும் அல்ல படத்திற்கும் பலவீனமாக அமைந்திருக்கிறது.

நயன்தாராவின் சிறுவயது தோழனாக தொடங்கி அவரது வாழ்க்கை இணையாகும் ஒரு கதாபாத்திரத்தில் ஜெய் நடித்திருக்கிறார். நயன் கூடவே இருந்தாலும் தன் காதலை சொல்ல தடுமாறுவது, தூரமாக இருந்து அவரை ரசிப்பது, அவர் துவண்டு போகும் நேரத்தில் அவருக்கு தைரியம் சொல்வதோடு, அவர் தனியாக இருக்க நினைப்பதை அறிந்துக்கொண்டு அவரை விட்டு விலகுவது என்று நயன்தாராவின் கதாபாத்திரத்தை தாங்கிப் பிடிக்கும் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நன்றாகவே நடித்திருக்கிறார் ஜெய்.

இந்தியாவின் சிறந்த சமையல் கலை நிபுணராக நடித்திருக்கும் சத்யராஜின் கதாபாத்திரம் மற்றும் அவரது அனுபவமான நடிப்பு படத்திற்கு பலமாக பயணித்திருந்தாலும், தனது பழைய ”தகடு தகடு” வாக்கியம் பாணியில், இந்த படத்திலும் “கேக்கு…கேக்கு…” என்று சொல்லி ரசிகர்களை சிரிக்க வைக்கிறார்

நயன்தாராவின் தந்தையாக நடித்திருக்கும் அச்யுத் குமார், அலட்டிக்கொள்ளாமல் இயல்பாக நடித்திருக்கிறார்.

கே.எஸ்.ரவிக்குமார் தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் என்று சொல்லும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். அதை மிகவும் சிறப்பாக செய்துள்ளார். .

கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கும் கார்த்தி குமார், வில்லத்தனத்தை சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பதோடு, சத்யராஜையே வில்லத்தனத்தில் மிரட்டவும் செய்திருக்கிறார்.

ரெடின் கிங்ஸ்லி பல இடங்களில் வந்தாலும் ரசிகர்களுக்கு சிரிப்பு கொடுத்து இருக்கிறார் . சுரேஷ் சக்ரவர்த்தி, ரேணுகா, குமாரி சச்சி என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கதை ஓட்டத்திற்கு பயன்பட்டிருக்கிறார்கள்.

சத்யன் சூரின் ஒளிப்பதிவு களத்திற்கு ஏற்ப பயணித்திருக்கிறது. நயன்தாராவின் வயது முதிர்வை மறைக்க அதிகம் மெனக்கெட்டிருப்பது பல இடங்களில் தெரிந்தாலும், அவர் மிக நேர்த்தியாக சமாளித்திருக்கிறார்.

தமன்.எஸ் இசையில் பாடல்கள் அனைத்தும் இனிமை. ”உலகை வெல்ல போகிறாள்” பாடல் திரும்ப திரும்ப கேட்க வைக்கிறது. பின்னணி இசை படத்திற்கு பலமாக பயணித்திருக்கிறது.

எளிமையான கதைக்கருவுக்கு மிக எளிமையான திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கும் இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா, காட்சிகளை கூட மிக எளிமையாக வடிவமைத்திருப்பது படத்தை தொய்வடைய செய்துவிடுகிறது. படத்தில் வரும் திருப்பங்கள் அனைத்தும் ரசிகர்கள் யூகிக்கும்படி இருப்பது, நயன்தாரா படம் என்பதையும் மறந்து ரசிகர்களை சோர்வடைய செய்துவிடுகிறது.

 

மொத்தத்தில், இந்த ‘அன்னபூரணி’-சுவையோ சுவை

அன்னபூரணி – திரைவிமர்சனம்