full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

அந்தகன் திரைவமர்சனம்

அந்தகன் திரைவமர்சனம் 

அந்தகன் நடிகர் பிரசாந்த் அவர்களுக்கு நீண்ட இடைவெளிக்கு பின் வெளியாகியிருக்கும் படம் இது இந்த படம் அவருக்கு மீண்டும் தமிழ் திரையில் வாழ்வு கொடுக்குமா இல்லை மீண்டும் ஒய்வு எடுக்க வைக்குமா என்று பார்ப்போம். அவரின் திரை வாழ்வுக்கு முற்று புள்ளி வைத்த அவர் அப்பாவின் இயக்கத்தில் தான் மீண்டும் இந்த படம் அரங்கேறியிருக்கு.

அந்தகன் இதில் பிரசாந்த்,சிம்ரன்,ப்ரியாஆனந்த்,கே.எஸ்.ரவிக்குமார் நவரச நாயகன் கார்த்திக்,ஊர்வசி,வணிதாவிஜய்குமார்,யோகிபாபு,பூவையார் மற்றும் பாளை நடிப்பில் சந்தோஷ் நாராயணன் இசையில் நடிகரும் இயக்குனருமான தியாகராஜன் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் அந்தகன்

சரி கதைக்குள் போகலாம்:

பார்வையற்றவரான பிரஷாந்த் பியானோ இசைக்கலைஞர். லண்டனில் நடைபெறும் இசைப் போட்டியில் பங்கேற்க வேண்டும் என்பது அவரது லட்சியம். அதற்காக பியானோ வகுப்பு எடுத்து பணம் சேர்ப்பவருக்கு, மதுபானக்கூடம் ஒன்றில் பியானோ வாசிக்கும் வேலை கிடைக்கிறது. அதன் மூலம் நடிகர் காத்திக்கின் நட்பு கிடைக்க, அவரது அழைப்பின் பேரில் அவரது வீட்டில் சிறு இசை நிகழ்ச்சி நடத்த செல்கிறார். ஆனால், அங்கு சென்றதும் பல அதிர்ச்சிகரமான சம்பவங்கள் பிரஷாந்த் கண் முன் நடக்கிறது. அது என்ன?, பார்வையற்றவராக இருக்கும் பிரஷாந்த் கண் முன் நடக்கும் சம்பவங்களால் அவருக்கு எப்படிப்பட்ட சிக்கல் ஏற்படுகிறது?, அதில் இருந்து அவர் தப்பித்தாரா? இல்லையா? என்பதை காட்சிக்கு காட்சி திருப்பங்களோடு சொல்வது தான் ‘அந்தகன்’.

சிறு இடைவெளிக்குப் பிறகு பிரஷாந்தை நாயகனாக பார்த்தாலும், அதே இளமையோடும், புத்துணர்ச்சியோடும் திரையில் தோன்றுகிறார். பார்வையற்றவர் கதாபாத்திரத்தில் மிக இயல்பாக நடித்திருப்பவர் சிறு சிறு அசைவுகளை கூட மிக நுணுக்கமாக செய்திருக்கிறார். எதிர்பார்க்காத சம்பவங்கள் தன் கண் முன் நடப்பதை பார்த்து பதற்றமடையும் பிரஷாந்த், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருப்பது, தன்னை கொலை செய்ய வருபவரிடம் இருந்து தப்பிப்பது, பார்வையற்ற தன்னை சுற்றி இருக்கும் ஆபத்துகளை நினைத்து பயப்படுவது என அனைத்து இடங்களிலும் பிரஷாந்தின் நடிப்பு கைதட்டல் பெறுகிறது. குறிப்பாக மொத்த திரைக்கதைக்கும் சுவாரஸ்யம் சேர்ப்பதில் பிரஷாந்தின் நடிப்பு முக்கிய பங்கு வகிப்பதோடு, இனி கோலிவுட்டின் டாப் இடத்திற்கு அவர் செல்வதை உறுதி செய்திருக்கிறது.

பலமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிம்ரன், கிடைக்கும் இடங்களில் தனது நவசர நடிப்பை வெளிக்காட்ட முயற்சித்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். சில இடங்களில் அவரது முகத்தில் வயது முதிர்வு தெரிவது சிமி கதாபாத்திரத்தின் மீதான ஈர்ப்பை குறைத்தாலும், அவரது அதிரடியான நடிப்பு அந்த குறையை மறைத்துவிடுகிறது.

தேவதை போல் பிரஷாந்த் வாழ்க்கையில் திடீர் எண்ட்ரி கொடுக்கும் பிரியா ஆனந்த், அழகாக இருக்கிறார். பிரஷாந்துடன் அன்பாக உறவாடுகிறார். தான் ஏமாற்றப்பட்டது தெரிந்தவுடன் தனது கோபத்தை வெளிப்படுத்தும் காட்சியில் அழகாக நடித்திருக்கிறார்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்திருக்கும் சமுத்திரக்கனி, சூழலுக்கு ஏற்ப முகத்தை மாற்றி ரியாக்‌ஷன் கொடுக்கும் காட்சிகள் அசத்தல். அவரது மனைவியாக நடித்திருக்கும் வனிதா விஜயகுமார், சில காட்சிகளில் வந்தாலும் தனது வழக்கமான அதிரடி மூலம் திரையில் சரவெடியாக வெடித்திருக்கிறார்.

நடிகர் கார்த்திக்காகவே நடித்திருக்கும் நவரச நாயகன் கார்த்திக், பூவையார், ஊர்வசி, யோகி பாபு, இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் திரைக்கதையின் திருப்பங்களுக்கு ஏற்ப சிறப்பாக பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

சந்தோஷ் நாராயணின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஒரு இனிமையான இசை நிகழ்ச்சி அனுபவத்தை கொடுக்கிறது. பின்னணி இசையில் சுழலுக்கு ஏற்ப வித்தியாசத்தை காட்டியிருப்பவர், படத்தில் முக்கிய பங்கு வகிக்கும் பியானோ உள்ளிட்ட மென்மையான இசைக்கருவிகள் மூலம் பின்னணி இசையை ஒரு கதாபாத்திரமாக பயணிக்க வைத்திருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் ரவி யாதவின் கேமரா காட்சிகள் அனைத்தையும் கலர்புல்லாகவும், பிரமாண்டமாகவும் படமாக்கி கண்கலங்கு விருந்து படைத்திருக்கிறது. கதாபாத்திரங்களை மிக அழகாக காட்டியிருப்பவர், ஒவ்வொரு காட்சியிலும் பயன்படுத்திய வண்ணங்கள் ரசிகர்களை ஈர்க்கிறது.

படத்தொகுப்பாளர் சதீஷ் சூர்யா திரைக்கதையில் இடம்பெறும் திருப்பங்களை எந்தவித குழப்பமும் இன்றி ரசிகர்களிடத்தில் கடத்தியிருக்கிறார்.

இந்தியில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘அந்தாதுன்’ படத்தின் ரீமேக் என்றாலும், தமிழுக்கு ஏற்றபடி பல மாற்றங்களுடன் இப்படத்தை இயக்கியிருக்கும் தியாகராஜன், படம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே நம்மை திரைக்குள் இழுத்துவிடுகிறார்.
சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர் என்றாலும், மனோபாலா, யோகி பாபு மற்றும் சமுத்திரக்கனி – வனிதா விஜயகுமார் ஆகியோர் மூலம் அவ்வபோது சிரிக்கவும் வைத்திருகின்றனர்.

மொத்தத்தில், ‘அந்தகன்’ வசீகரன்