சமூக வலைத்தளங்களில் பிரபலமானவர் ‘ப்ளூ சட்டை’ மாறன். இவர் ‘ஆன்டி – இண்டியன்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார்.இந்து தாய்க்கும், முஸ்லிம் தந்தைக்கும் பிறந்தவர் பாட்ஷா. இவரை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கொலை செய்கிறார்கள். பாட்ஷா உடலை பள்ளிவாசலில் நல்லடக்கம் செய்ய எடுத்துச் செல்கிறார்கள். ஆனால், பாட்ஷா உண்மையான முஸ்லிமாக வாழவில்லை என்று கூறி முஸ்லிம் மதத்தினர் அவரது உடலை அடக்கம் செய்ய மறுத்து உடலை திருப்பி அனுப்புகிறார்கள்.இதன் பிறகு வீட்டுக்கு திருப்பி எடுத்துச் செல்லப்பட்ட பாட்ஷாவின் உடலுக்கு இந்து முறைப்படி சடங்குகள் செய்யப்பட்டு இந்து மக்களின் உடல்களை அடக்கம் செய்யும் மயான பூமிக்கு எடுத்து செல்கிறார்கள். அங்கு இறந்தவரின் பெயர் பாட்ஷா என்பதால் அங்கும் அடக்கம் செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது.
இன்னொருபுறம் பாட்ஷா உடலை வைத்து அரசியல் செய்கிறார்கள். இறுதியில் பாட்ஷாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டதா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.படத்தில் பாட்ஷா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் இளமாறன் என்னும் புளு சட்டை மாறன். ஆரம்பம் முதல் இறுதிவரை பிணமாக இருப்பதால் இவரது நடிப்பை பார்க்க முடியவில்லை. ஆனால், கதை இவரை சுற்றியே நடக்கிறது. சடலம், அடக்கம் செய்ய மறுக்கும் மதத்தினர், அதை சுற்றி நடக்கும் அரசியல் என படத்தை இயக்கி இருக்கிறார். முதல் பாதி விறுவிறுப்பாகவும், இரண்டாம் பாதி மெதுவாகவும் திரைக்கதை நகர்கிறது. ஒரு சில இடங்களில் வசனங்கள் ‘நச்’ என்றும் சில இடங்களில் ‘ச்சே’ என்றும் இருக்கிறது.
தேவையில்லாத காட்சிகள் வேண்டுமென்றே திணித்தது போல் இருக்கிறது. அதுபோல் நீண்ட காட்சிகளும் படத்திற்கு பலவீனமாக அமைந்திருக்கிறது. மதவாதிகள், காவல்துறை, அரசியல் கட்சிகள், மீடியா என அனைவரையும் சாடியிருக்கிறார். மதங்களுக்கிடையே உண்டாகும் சில பிரச்சனைகளையும், சலசலப்பையும் காட்டியதற்கும், மதத்தால் சில அதிகார வர்க்கமும், அரசியல்வாதிகளும் செய்யும் சூழ்ச்சியை வெளிப்படுத்தியதற்கும் பாராட்டுகள்.இளமாறனே இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். ஆனால், அதிகம் கவனம் பெறவில்லை. கதிரவனின் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.மொத்தத்தில் இத்திரைப்படம் இன்னும் சுவாரசியமாக திரைக்கதை அமைத்திருந்தால் படத்திற்கு பலம் சேர்த்திருக்கும்