கையை வெட்ட வேண்டும்.. கொந்தளித்த அனுஷ்கா!

News

ஐதராபாத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் நடிகை அனுஷ்கா, பாலியல் தொந்தரவு தரும் நபர்களின் கையை வெட்ட வேண்டும் எனத் தோன்றுவதாக பேசியுள்ளார்.

அந்த பேட்டியில் அனுஷ்கா கூறியிருப்பதாவது,

“பெண்கள் அனைத்து துறைகளிலும் பாலியல் தொல்லைகளை சந்திக்கின்றனர். இந்தியாவில் 60 சதவீதம் பெண்களுக்கு அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மூலமே பாலியல் தொந்தரவுகள் ஏற்படுவதாக புள்ளி விவரம் சொல்கிறது.

குடும்பத்தினர் மீது பழிபோடவும் அவர்களை சமூகத்தில் குற்றவாளிகளாக நிறுத்தவும் பயந்து பல பெண்கள் இந்த கொடுமைகளை வெளியில் சொல்வது இல்லை.

இதில் இருந்து அவர்கள் மீள வேண்டும். பெற்றோர்கள், குழந்தைகளுக்கு இதுபோன்ற வன்மங்கள் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? என்று சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும். அப்போதுதான் வளர்ந்ததும் தைரியம் வரும்.

‘பாகுபலி-2’ படத்தில் என்னை தொடுபவர் கையை நான் வெட்டி எறிவதுபோன்று ஒரு காட்சி வரும்.

நிஜ வாழ்க்கையில் எந்த பெண்ணுக்கு அப்படி ஒரு நிலை ஏற்பட்டாலும் கைகளை வெட்ட வேண்டும் என்றுதான் தோன்றும். வக்கிரபுத்திக்காரர்களை சும்மா விடக்கூடாது. மிருகத்தை வெட்டி நாமும் மிருகமாக மாறலாமா? என்ற எண்ணம் வரலாம். நமது கவுரவத்தை காப்பாற்ற வேண்டியது முக்கியம்.

பெண்களை தவறான எண்ணத்தோடு தொடும் ஆண்களின் மனதில் அகங்காரம் இருக்கிறது. அதை முதலில் ஒழிக்க வேண்டும். சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஒருவன் பாகுபலி-2 படத்தில் நடந்த மாதிரியே என்னை அத்துமீறி தொட்டான். அவனை கொல்ல வேண்டும் என்று எனக்கு கோபம் வந்தது.

அப்படி செய்ய முடியாமல் ஓங்கி அவனை அறைந்தேன். அந்த சம்பவம் நடந்த அன்று இரவு எனக்கு தூக்கமே வரவில்லை. ஒரு பெண்ணை யாராவது தொட்டால் அதில் அன்பு இருக்க வேண்டும். ஆதரவு இருக்க வேண்டும். பாதுகாப்பை உணர வைக்க வேண்டும். கௌரவமாகவும் இருக்க வேண்டும். அந்த உணர்ச்சி ஒரு தைரியத்தை கொடுக்கும். அதற்கு மாறாக அந்த தொடுதலில் ஆசை இருந்தால் அந்த மாதிரி செய்பவன் கைகளை வெட்ட வேண்டும் என்றுதான் தோன்றும்”.

இவ்வாறு அனுஷ்கா கூறினார்.