புதுமாப்பிள்ளை போல உணர்வதாக சொன்ன ஏ ஆர் முருகதாஸ்

News

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு, ரகுல் ப்ரீத் சிங், எஸ் ஜே சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ஸ்பைடர்.

இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகியுள்ள இந்த படம் இன்னும் சில தினங்களில் திரைக்கு வரவுள்ளது. சிறு இடைவெளிக்கு பிறகு தமிழில் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் படம் என்பதாலும், மகேஷ் பாபு நேரடியாக தமிழில் நடிக்கும் படம் என்பதாலும் இத்திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் திரைப்படக் குழுவினருடனான பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இயக்குநர் முருகதாஸ், மகேஷ் பாபு, ரகுல் ப்ரீத் சிங், எஸ் ஜே சூர்யா, நடிகர் பரத், சந்தோஷ் சிவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய முருகதாஸ், “திருமணம் நெருங்க நெருங்க மாப்பிள்ளைக்கு ஒரு வித படபடப்பும், பதற்றமும் இருக்கும். அது திருமணத்தன்று அந்த பதட்டம் மேலும் அதிகரித்திருக்கும். அது போன்ற ஒரு மனநிலை தான் தற்போது எனக்கும் இருக்கிறது. படம் இன்னும் மூன்று நாட்களில் வெளியாக இருக்கிறது. என் இதயத்துடிப்பு எனக்கே கேட்கிறது. என் சக்திக்கு இயன்ற அளவு உழைப்பைக் கொடுத்து இந்த படத்தை உருவாக்கியுள்ளேன்.

இப்போதெல்லாம் ஒவ்வொரு காட்சித் தொகுப்புக்கும் என்ன விமர்சனம் வரும் என்று யோசித்து செய்ய வேண்டியதாய் இருக்கிறது. அதற்காக கூடுதல் பொறுப்புணர்வோடு பணியாற்றி இருக்கிறோம்.

மகேஷ் பாபு ஹீரோயிஸத்தை வெகு இயல்பாக காட்டக்கூடியவர். அது எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடன் பணியாற்ற வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை.

இந்த படத்தை ஒரே நேரத்தில் 2 மொழிகளில் உருவாக்குவது மிகவும் சவாலான ஒன்றாக இருந்தது. வாய்ப்பு கிடைத்தால் விஜய், மகேஷ்பாபு இருவரையும் ஒரே படத்தில் இயக்குவதற்கு தயாராக இருக்கிறேன். ” என்றார்.

மேலும், படத்தில் பணியாற்றிய நடிகர்களுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும், தயாரிப்பாளருக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்தார்.

இவரைத் தொடர்ந்து பேசிய மகேஷ் பாபு, “முருகதாஸ் கூறியது போன்ற பதட்டம் எனக்குள்ளும் இருக்கிறது. என்னுடைய நடிப்பில் உருவான நேரடித் தமிழ்ப்படம் முருகதாஸ் அவர்களின் கூட்டணியில் அமைந்தது ஒரு கனவு நிறைவேறியது போன்ற உணர்வைத் தருகிறது. என்னுடன் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி.” என்றார்.