1996 இல் உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் மனீஷா கொய்ராலா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் இந்தியன். சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இந்தப்படம் லஞ்ச, ஊழலுக்கு எதிராக கமல் போராடுவதாக எடுக்கப்பட்டிருக்கும். ஏ.ஆர்.ரகுமானின் இசையில் அனைத்து பாடல்களுமே சூப்பர்ஹிட் ஆனது.
கிட்டத்தட்ட 21 ஆண்டுகள் கழித்து, இந்தியன் பாகத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பது குறித்து தீவிர கமலும், சங்கரும் ஆலோசனையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தினந்தோறும் ஒரு தகவல் வந்தவண்ணமே உள்ளது. தற்போது 2.0 படத்தை எடுத்து முடித்திருக்கிற சங்கர் விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக தெரிவிப்பார் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் சங்கர், தனது ஆஸ்தான இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமானை இந்தியன் இரண்டாம் பாகத்தில் ஒப்பந்தம் செய்யாமல் மாற்றியிருப்பதாக பேசப்படுகிறது. ஏற்கனவே சங்கர் அந்நியன், நண்பன் ஆகிய படங்களில் ஏ.ஆர்.ரகுமானின் ஜெராக்ஸ் என்றழைக்கப்படும் ஹாரீஸ் ஜெயராஜையே பயன்படுத்தியிருப்பார். ஆனால் இந்தமுறை ஏ.ஆர்.ரகுமான், ஹாரீஸ் ஜெயராஜ் என இருவரையும் தவிர்த்துவிட்டு, இளம் இசையமைப்பாளர் அனிருத்தை ஒப்பந்தம் செய்திருப்பதாகத் தெரிகிறது.
2.0 படத்தின் இரண்டு பாடல்களுக்கு தமிழகத்தில் சரியான வரவேற்பு கிடைக்காத நிலையில், ஒருவேளை இந்த தகவல் உண்மைதானோ என நம்பப்படுகிறது. மேலும் இந்தியன் முதல் பாகத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னமே இரண்டாம் பாகத்தையும் தயாரிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.