அரண்மனை 4 – திரைவிமர்சனம்
அரண்மனை 4 தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்ப்பார்த்து கொண்டு இருந்த படம் இந்த படத்தில் சுந்தர்.சி, தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, சந்தோஷ் பிரதாப், விடிவி கணேஷ், ராமசந்திர ராஜு, கே.எஸ்.ரவிக்குமார், ஜெயப்பிரகாஷ், சிங்கம் புலி மற்றும் பலர் நடிப்பில் ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையில் இ.கிருஷ்ணமூர்த்தி ஒளிப்பதிவு வில் சுந்தர்.சிஇயக்கத்தில் இந்த படத்தை குஷ்பு சுந்தர் மற்றும் ஏசிஎஸ் அருண் தயாரித்துள்ளனர்.
அரண்மனை இதுவரை மூண்டு பாகங்கள் வெளியாகி மிக பெரிய வெற்றியை கண்டுள்ளது விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி கண்டுள்ளது அந்த வரிசையில் இன்று நான்காம் பாகம் அரண்மனை 4 வெளியாகியுள்ளது இந்த அரண்மனை 4 ரசிகர்களிடம் வரவேற்பை பெறுமா என்று பார்க்கலாம்.
பழைய அரண்மனையில் சில பராமரிப்பு பணிகளை செய்து அதை விற்பனை செய்யும் முயற்சியில் ஈடுபடும் சந்தோஷ் பிரதாப், தனது மனைவி தமன்னா மற்றும் இரண்டு குழந்தைகளுடன் அந்த அரண்மனையில் வசித்து வருகிறார். அரண்மனையின் உரிமையாளரான ஜமீன்தார் டெல்லி கணேஷ், அவரது பேத்தி ராஷி கண்ணா ஆகியோரும் அதே இடத்தில் வசிக்கிறார்கள்.
இதற்கிடையே தீய சக்தி ஒன்றின் மூலம் சந்தோஷ் பிரதாப் கொல்லப்படுகிறார். அவர் ரூபத்தில் அந்த அரண்மனைக்குள் செல்லும் அந்த தீய சக்தி அவரது குழந்தைகளை கொலை செய்ய முயற்சிக்கிறது. அதனிடம் இருந்து குழந்தைகளை காப்பாற்ற போராடும் தாய் தமன்னா கொடூரமாக கொலை செய்யப்படுகிறார். ஆனால், அவரது மரணத்தை தற்கொலையாக காவல்துறை பதிவு செய்கிறது.
விசயம் அறிந்து அந்த கிராமத்துக்கு வரும் தமன்னாவின் அண்ணன் சுந்தர்.சி தனது தங்கை மற்றும் மாப்பிள்ளை மரணத்திற்கு பின்னணியில் மர்மங்கள் நிறைந்திருப்பதை அறிந்துக் கொள்வதோடு, அதை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். அந்த சமயத்தில், கிராமத்தை சேர்ந்த மேலும் சில கொலை நடக்கிறது . இந்த கொலைகளுக்கான காரணத்தை கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டும் சுந்தர்.சி-க்கு பாக் என்ற தீய சக்தி பற்றி தெரிய வருவதோடு, அந்த பாக் தீய சக்தி, தனது தங்கை, மாப்பிள்ளை மற்றும் சில கிராம மக்கள் வரிசையில் தனது தங்கையின் மகளையும் கொலை செய்ய முயற்சிப்பதையும் அறிந்துக் கொள்கிறார். அதனிடம் இருந்து சிறுமியை காப்பாற்ற போராடும் சுந்தர்.சி, அந்த தீய சக்தியை எப்படி அழிக்கிறார். என்பது தான் மீதி கதை.
இந்தப்படத்திலும் நாயகனாகவும் இயக்குனராகவும் அவதாரம் எடுத்து இருக்கிறார் சுந்தர்.சி தான் ஏற்று நடித்து இருக்கும் கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்த்து இருக்கிறார். படத்தின் யோயக்குனரும் அவரே என்பதால் தான் நடித்து இருக்கும் பாத்திரத்துக்கு மிக அருமையான நடிப்பின் மூலம் அசத்தி இருக்கிறார். நாயகன் என்பதற்க்காக தேவை இல்லாமல் டூயட் எல்லாம் இல்லாமல் தேவைக்கு அதிகமான சண்டை காட்சிகளும் இல்லாமல் தேவை என்னவோ அதை மிக கனகச்சிதமாக செய்துள்ளார்.
படத்தின் மிக பெரிய பலம் என்றால் அது தமன்னா என்று தான் சொல்லவேண்டும் இரண்டு பிள்ளைகளுக்கு தாயாக நடித்திருக்கும் தமன்னா, அழுகை, பதற்றம், கோபம், ஆக்ரோஷம், பிள்ளைகள் பாசம் அனைத்துவிதமான உணர்ச்சிகளையும்காட்சிக்கு காட்சி அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். தாயாகவும், சரி பேயாகவும் தனது பணியை மிக நேர்த்தியாக செய்திருக்கிறார்.
படத்தின் கதாநாயகியாக இருந்தாலும் ராஷி கண்ணாவுக்கு அதற்கான அங்கீகாரம் கொடுக்கப்படவில்லை கவர்ச்சியில் மட்டும் மின்னுகிறார்.
யோகி பாபு, கோவை சரளா, விடிவி கணேஷ் ஆகியோரது காமெடி அனைத்தும் மெய் மறந்து சிரிக்க வைக்கிறது. இவர்களுடன் அவ்வபோது இணையும் மறைந்த சேசுவின் கோவை சரளா காதல் காட்சிகள் நம்மை கவருகிறது.
சந்தோஷ் பிரதாப், ராமசந்திர ராஜு, டெல்லி கணேஷ், ஜெயப்பிரகாஷ், சிங்கம் புலி, சஞ்சய், கே.எஸ்.ரவிகுமார் என படத்தில் நடித்திருக்கும் மற்ற நட்சத்திரங்கள் திரைக்கதையோட்டத்திற்கு பயன்பட்டிருக்கிறார்கள்.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் இசையில் பாடல்கள் படத்தின் வேகத்திற்கு ஈடுகொடுக்கும் விதத்தில் அமைந்திருக்கிறது. ஒளிப்பதிவாளர் இ.கிருஷ்ணமூர்த்தி கதையின் தன்மை அறிந்து மிக அருமையான ஒளிப்பதிவை கொடுத்து இருக்கிறார். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சிகளில் நம்மை கவருகிறார்.
இயக்குனர் சுந்தர்.சி கடந்த மூன்று பாகங்களை விட இந்த பாகத்தில் நம்மை கவருகிறார் குறிப்பாக குழைந்தைகளை மிகவும் கவரும் வகையில் காட்சிகளை அமைத்துள்ளார். கடந்த மூன்று பாகங்களின் கிளைமாக்ஸ் காட்சிகளை விட இந்த படம் நமக்கு ஆச்சிரயத்தை கொடுக்கிறது. இந்த கோடைவிடுமுறைக்கு குடும்பத்துடன் திரையரங்கிற்கு சென்று கொண்டாகுடிய ஒரு திரைப்படம் அரண்மனை 4
மொத்தத்தில் லாஜிக் இல்லாதா மேஜிக் தான் அரண்மனை 4
அரண்மனை 4 – திரைவிமர்சனம் கோடை கொண்டாட்டம்