நாயகன் இஷான் கபடி வீரர். இவருக்கும் ஆதரவற்ற இல்லத்தில் வளர்ந்த நாயகி பிரணாலிக்கும் காதல் மலர்கிறது. அதே சமயம் வில்லன் டேனியல் பாலாஜி சில இளைஞர்கள் மூலம் இளம் பெண்களை காதல் என்ற போர்வையில் ஏமாற்றி படுக்கையில் நாசம் செய்து வீடியோ எடுத்து மிரட்டுகிறார்.அந்த கும்பலிடம் பிரணாலியின் தோழியும் சிக்கி தற்கொலைக்கு முயல்கிறார். இதிலிருந்து காப்பாற்றும் பிரணாலி, வில்லன் கும்பலிடம் இருந்து ஆபாச வீடியோக்களை மீட்க இஷானை நாடுகிறார்.
இறுதியில் வில்லன் டேனியல் பாலாஜியிடம் இருந்து ஆபாச வீடியோக்களை இஷான் மீட்டாரா? பாதிக்கப்பட்ட பெண்களை இஷான் காப்பாற்றினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.புதுமுக நாயகன் இஷான் ஆர்ப்பாட்டம் இல்லாத யதார்த்த நடிப்பை வழங்கி இருக்கிறார். வில்லன்களை அடித்து நொறுக்கும் சண்டை காட்சிகளில் மிரட்டி இருக்கிறார். படத்திற்காக கடின உழைப்பை கொடுத்து இருக்கிறார். கபடி, காதல், ஆக்ஷன், சென்டிமென்ட் என அனைத்திலும் தன்னால் முடிந்த அளவு நடிப்பு திறனை வெளிப்படுத்தியுள்ளார்.நாயகி பிரணாலிக்கு நடிப்பு திறமையை வெளிப்படுத்த வாய்ப்புள்ள கதாபாத்திரம். அதை நன்றாக பயன்படுத்தி சிறப்பான நடிப்பை கொடுத்து இருக்கிறார். காதல் காட்சிகளில் கவனிக்க வைத்து இருக்கிறார்.வில்லனாக வரும் டேனியல் பாலாஜி தன்னுடைய வழக்கமான ஸ்டைலிஷ் வில்லத்தனத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். ரமா, சுப்ரமணி, சத்யன் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.
வழக்கமான கதையை, வித்தியாசமான திரைக்கதை கொண்டு படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் மித்ரன் ஜவகர். கதாபாத்திரங்கள், காட்சி அமைப்பு என வித்தியாசப்படுத்தி விறுவிறுப்பாக காட்சிகளை நகர்த்தி இருக்கிறார். பெண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் படம் இருப்பது சிறப்பு. எதிர்ப்பாத்திராத கிளைமாக்ஸ் படத்திற்கு பலம்.வி.வி.யின் பின்னணி இசையும், விஷ்ணு ஸ்ரீயின் ஒளிப்பதிவும் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.