full screen background image
Search
Friday 8 November 2024
  • :
  • :
Latest Update

அருவம்; விமர்சனம் 3/5

சித்தார்த், கேத்ரின் தெரசா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் ‘அருவம்’.

கதைப்படி,

Food Safety Asst.. commissioner ஆக வருகிறார் சித்தார்த். தமிழகத்தில் உள்ள பல உணவு மற்றும் உணவு பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களில் நடக்கும் மோசடிகளை களைகிறார் சித்தார்த். அந்நிறுவனங்களுக்கு சீலும் வைக்கிறார்.

எந்த ஜீவனுக்கும் எந்த துன்பத்தையும் இழைக்கக் கூடாது என்ற மனப்பாங்கோடு சமூக சேவை ஒன்றை குறிக்கோளாக வைத்துக் கொண்டு இயலாதவர்கள் பலருக்கு தன்னால் இயன்ற சேவையை செய்து வருகிறார் நாயகி கேத்ரின் தெரசா. இவருக்கு உணர்வு திறன் இல்லாததால், எந்த மணத்தையும் இவரால் உணர முடியாது.

இவரின் சேவை மனப்பாண்மையை பார்த்து நாயகன் சித்தார்த் காதலில் விழுகிறார். சேவையையே தனது காதலாக நினைத்து வாழும் கேத்ரின், சித்தார்த்தின் காதலை நிராகரிக்கிறார். ஒரு கட்டத்தில் சித்தார்த்தின் மனம் புரிந்து அவரை திருமணம் செய்து கொள்ள நினைக்கிறார் கேத்ரின்.

இந்நிலையில், தரமற்ற உணவுப் பொருட்களை தயாரிக்கும் கம்பெனியின் முதலாளிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து சித்தார்த்தின் அந்த போக்கிற்கு அவரை கொலை செய்து விடுகின்றனர்..

உருவமாக வந்து கேத்ரினோடு வாழ நினைத்த சித்தார்த், அருவமாக மாறி கேத்ரின் உடலுக்குள் ஆவியாக சென்று வில்லன்களை எப்படி பழி வாங்குகிறார் என்பது தான் படத்தின் மீதிக் கதை.

சித்தார்த் தனது கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு விறைப்போடு நடித்தாலும், அனைத்து காட்சிகளிலும் அதே விறைப்போடு சுற்றித் திரிந்தது சற்று எரிச்சலை கொடுத்து விடுகிறது. ஆங்காங்கே சில காட்சிகளில் ஓவர் ஆக்டிங்கை கொடுத்திருக்கிறார் சித்தார்த்.

வித்தியாசமான கதாபாத்திரமாக இருந்தாலும், அதை பேசி பேசியே கொலை செய்திருக்கிறார் கேத்ரின் தெரசா.

ஒரு சில காட்சிகளில் மட்டும் எட்டி பார்த்து நகைச்சுவை என்ற பெயரில் கடுப்பேற்றும் சதீஷ், வில்லன்கள் போர்வையில் வந்த கபீர் துகான் சிங், ஸ்டண்ட் சில்வா, மதுசூதனன் ராவ், என அனைவருமே தாமரை மேல் ஒட்டாத நீர் போல், கதாபாத்திரத்திற்குள் ஒட்டாமலே வந்து செல்கின்றனர்.

எஸ் தமன் இசையில் பாடல்கள் ஓகே ரகம் தான், காட்சிளுக்கு மீறிய பின்னனி இசை…
(பின்னனி இசை நன்றாக இருந்தாலும் அதற்கான காட்சிகள் இல்லை)

ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு கலர்புல்.

உணவுப் பொருட்களில் நடக்கும் முறைகேடுகளை திரையிட்டு காண்பித்ததற்காக இயக்குனர் சாய் சேகரை பாராட்டலாம். தரமான உணவு பொருட்களுக்கான ஒரு சிறிய விழிப்புணர்வாக மட்டுமே இந்த ‘அருவம்’ படத்தை பார்க்கலாம்.

அருவம் – அறைகுறையாக வேக வைத்த உணவு…