படத்தில் நடித்திருந்த அனைவருமே புதியவர்கள் என்றாலும், இயக்குநர் புதியவர் என்றாலும் தமிழ் சினிமாவின் செல்லக் குழந்தையாக மாறியவள் “அருவி”. படத்தில் சில குறைகள் இருந்தாலும், அருவியை அனைவருமே மனதார ஏற்றுக் கொண்டார்கள்.
ஆனால் சிலர், அருவி காப்பியடித்து எடுக்கப்பட்டத் திரைப்படம் என்று சமூக வலைதளங்களில் எழுதி வருகிறார்கள்.
“அஸ்மா” என்ற அரேபிய படத்தைத் தான் அருவியாக எடுத்திருகிறார்கள் என்பது தான் அவர்களது குற்றச்சாட்டு.
இந்நிலையில் ‘அஸ்மா’ படத்தின் தழுவலா ‘அருவி’ என்பதற்கு இயக்குநர் அருண்பிரபு புருஷோத்தமன் கூறியிருப்பதாவது:
பல ட்வீட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளதைக் கண்டு ‘அஸ்மா’ திரைப்படத்தை நான் பார்த்தேன். ஒரே மாதிரியான களனைக் கொண்டுள்ள
இரண்டு படங்களைஒப்பிட்டு விவாதிப்பது கண்டிப்பாக சினிமா ஆர்வலர்கள் செய்ய வேண்டியதே. ஆனால் இரண்டு படங்களையும்
முழுதாகப் பார்த்துவிட்டு அவர்கள் பார்வையை வெளிப்படுத்த வேண்டும்.
‘அஸ்மா’ திரைப்படத்தைப் பார்க்க ‘அருவி’ ஒரு நல்ல வாய்ப்பு தந்ததில் எனக்கு மகிழ்ச்சி. ‘அருவி’ மற்றும் ‘அஸ்மா’ இரண்டையும் பார்த்தபின்,
இரண்டும் முற்றிலுமாக வெவ்வேறானது என்றும், ஒன்றுக்கொன்று வேறுபட்டது என்பதும் தெரியும். விக்கிப்பீடியாவில் கதையின் சாராம்சத்தை படிப்பதில் எந்தப் பயனும் இல்லை.
மணமான ஒரு பெண்ணைப் பற்றியும், குடும்பத்தில் அவள் ஒவ்வொரு நாளும் அனுபவிக்கின்ற கஷ்டங்கள் பற்றியும் ‘அஸ்மா’ பேசுகிறது. அருவியில்,
வெறும் முதல் 15 நிமிடங்கள் மட்டுமே அருவியின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் வளர்ப்பைப் பற்றி பேசுகிறது. பிறகு, மொத்தமாக சமூகத்தில் இருக்கும், மக்களுக்கு இருக்கும் பிரச்சினையைப் பற்றி அருவி பேச ஆரம்பிக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.