தயாரிப்பாளர் அசோக்குமார் – கடைசி கடிதம்!

News
0
(0)

சூழ்ச்சிக்காரர்களிடம் உன்னைவிட்டுப் போகிறேன்; மன்னித்துவிடு சசி என்று தற்கொலை செய்துகொள்வதற்கு அசோக்குமார் உருக்கத்துடன் கடிதம் எழுதியிருக்கிறார்.

நடிகர், இயக்குநர் சசிகுமாரின் உறவினர் அசோக் குமார். இவர் திரைப்பட இணை தயாரிப்பாளராகவும், கம்பெனி புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலக நிர்வாகியாகவும் பணிபுரிந்து வந்தார். கடன் கொடுத்த பிரபல பைனான்சியர் ஒருவர் மிரட்டியதன் காரணமாக இன்று சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை குறித்து அசோக்குமார் எழுதிய கடிதத்தில், ”என்னை கோழை, சுயநலக்காரன் என்று எதுவேண்டுமானாலும் சொல்வீர்கள். எனக்கு இரண்டு வழிகள்தான் இருந்தன. கொலை மற்றும் தற்கொலை. கொலைகாரன் ஆகும் தைரியம் இருந்தாலும், கொலை செய்யப்படுபவர் குடும்பம் பாவம். நல்ல பெற்றோர், நல்ல உடன் பிறந்தோர், நல்ல மனைவி, நல்ல குழந்தைகள் இருந்தும், நான் அவர்களுக்கு நல்ல மகனாகவோ, சகோதரனாகவோ, கணவனாகவோ, தகப்பனாகவோ இல்லை.

எனக்கு சசிகுமார் கடவுளைவிட சிறந்த முதலாளியாக இருந்தார். எனக்கு எல்லா சுதந்திரமும், அதிகாரம் கொடுத்தார். நான் கம்பெனியை கடனில் நிறுத்தியுள்ளேன். சசிக்கு நல்லது மட்டுமே செய்யத் தெரியும், ஆனால், அவருக்கு யாரும் நல்லது செய்யவில்லை.

இதுவரை பத்து ஆண்டுகளில் எங்கள் எல்லா தயாரிப்புப் படங்களையும் சரியான தேதியில் வெளியிட்டோம், நாங்கள் செய்த பெரிய பாவம் அன்புச்செழியனிடம் கடன் வாங்கியது. வட்டி, வட்டிக்கு மேல் வட்டி என்று கடந்த ஏழு வருடங்கள் வாங்கியவர். கடந்த ஆறு மாதமாக மிகவும் கீழ்த்தரமாக நடத்த ஆரம்பித்தார். என் குடும்பத்தினரை தூக்கி விடுவதாக மிரட்டினார். யாரிடம் உதவி கேட்பது? அதிகாரவர்க்கம், அரசாங்கம் ஆள்வோரின் பெரும்புள்ளிகள், சினிமா அமைப்பின் தலைவர் என சகலரும் அவர் கையில். அவரை ஒன்றும் செய்ய முடியாது. கடவுளுக்கு அவரை தண்டிப்பது மட்டும் வேலை இல்லையே.

எனது உயிரினும் மேலான சசிகுமார், உன்னை இவர்கள் எல்லாம் சித்ரவதை பண்ணுவதை என்னால் சசிக்க முடியவில்லை. என்னை அவர்களிடமிருந்து மீட்பதற்கு திராணி இல்லாததால்தான் என் உயிரை மாய்த்துக் கொள்கிறேன். என்னை மன்னித்துவிடு, நீ ரொம்ப நல்லவன், நீ நல்லா இருக்கணும். என் சாவை வைராக்கியமாக எடுத்துக் கொள். என்னைப் போல் நீ கோழை ஆகிவிடாதே. எத்தனையோ பேரை வாழவைத்த நீ கண்டிப்பாக நல்லபடியாக வாழ வேண்டும். இந்த சூழ்ச்சிக்காரர்களிடம் உன்னைவிட்டுப் போகிறேன். மன்னித்துவிடு சசி. என்னை நினைத்துப் பார்க்காதே. நீ நிறைய உழைத்திருக்கிறாய், நீ சுயம்பு என்னைக் காப்பாற்றாத கடவுள் உன்னையும் நமது குடும்பத்தையும் காப்பாற்றுவான். என்னால் சூழ்ச்சிக்காரர்களையும், ஈவு இரக்கமற்றவர்களையும் எதிர்கொள்ள முடியவில்லை.

எனக்கு வாழத் தகுதியில்லையா, வாழ வழி இல்லையா என்று தெரியவில்லை. அதனால் எனது சாவை நானே தற்கொலை மூலம் தேடிக் கொள்கிறேன். அப்பா, அம்மா, சின்னத்தாயி, ராஜப்பா, வனிதா, அர்ச்சனா, சக்தி, பிராத்தனா, சித்து, சாத்விக் நீங்கள் அனைவரும் என்னை மன்னிக்க வேண்டாம். சட்டென்று மறந்துவிடுங்கள். இதுவரை உங்களுக்கு எதுவும் செய்யாத என்னை உங்கள் நினைப்பில் இருந்து தூக்கி எறியுங்கள்.

43 வருடம் யாருக்கும் பயன் இல்லாத ஒரு ஜந்து போவதைப் பற்றி கவலைப்படாதீர்கள். சசியை பார்த்துக் கொள்ளுங்கள். அவன் பாவம், அவன் குழந்தை. எதிலும் ஜெயிக்காத நான் எனது தற்கொலையில் தோற்கமாட்டேன் என்று நம்புகிறேன்” என்று அசோக்குமார் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.