நாயகன் கிஷன் மனதத்துவ நிபுணர். இவர் கனவு தொல்லையால் பாதிக்கப்படும் ஸ்ரீதா சிவதாஸுக்கு சிகிச்சை அளித்து வருகிறார். இந்நிலையில், பேய் இருக்கா இல்லையா என்ற டி.வி. ஷோவில் கலந்துக் கொள்கிறார். அப்போது பேய் இல்லை என்று கூறும் கிஷனை ஒரு வீட்டில் தங்கும் படி கேட்கிறார்கள். கிஷனும் அதற்கு சம்மதம் தெரிவிக்கிறார்.
பேய் இருப்பதாக கூறப்படும் வீட்டிற்கு செல்லும் கிஷனுக்கு அனுமதி மறுக்கிறது. இறுதியில் பேய் இருக்கும் வீட்டில் கிஷன் தங்கினாரா? கிஷனுக்கு அனுமதி மறுக்க காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.நாயகனாக நடித்திருக்கும் கிஷன், கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். நாயகன் என்ற அந்தஸ்து இல்லாமல் கொடுத்த வேலையை செய்திருக்கிறார். கிஷனுக்கு உதவியாளராக வரும் நாயகி நந்தினி ராய், பதட்டமான நடிப்பை கொடுத்திருக்கிறார். மற்றொரு நாயகியாக வரும் ஸ்ரீதா சிவதாஸ், பல இடங்களில் நடிப்பில் ஸ்கோர் செய்ய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அவரும் ஓரளவிற்கு பயன்படுத்தி இருக்கிறார்.
செய்வினை, சூனியம் வைப்பதை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் விஜய் தமிழ்செல்வன். திகில் படங்களுக்கு உண்டான திரைக்கதை ஓரளவிற்கு இருந்தாலும், இது பேய் படமா… மந்திரவாதி படமா… என்ற குழப்பம் ஏற்படுகிறது. கதாநாயகனுக்கு முக்கியத்துவம் இல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்தது சிறப்பு. ஆனால், திரைக்கதையில் கவனம் செலுத்தி இருந்தாலும் கூடுதலாக ரசித்திருக்கலாம்.முத்து கணேஷ் இசையில் ஒரேயொரு புரமோ பாடல் மட்டுமே படத்தில் உருவாக்கி இருக்கிறார்கள். டி.ராஜேந்தர் பாடிய அந்த பாடல் தாளம் போட வைக்கிறது. பின்னணி இசையில் ரசிகர்களை பயமுறுத்த முயற்சி செய்திருக்கிறார். குரு தேவின் ஒளிப்பதிவு நன்று.