full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

5 மணி நேரம் அசையாமல் இருந்த அதர்வா

உச்சத்தை தொடும் விஷயங்கள் மிக எளிதில் அடையக்கூடியவை அல்ல, அதற்கு கடின உழைப்பும், பரீட்சார்த்த முயற்சிகளில் இறங்கும் பேரார்வமும், தைரியமும் வேண்டும். குறிப்பாக நடிகர்களுக்கு தங்களது சாதகமான எல்லையை விட்டு புதிய விஷயங்களில் இறங்க நிறைய தைரியம் வேண்டும். அதர்வா முரளி போன்ற நிறைய பொறுப்புகளை கொண்டிருக்கும் நடிகர்கள் நல்ல திறமையான இயக்குனர்களுடன் வேலை செய்யும் போது அந்த சூழல் இன்னும் மாறி விடுகிறது. இயக்குனர் கண்ணன் அவர்களுடன் அதர்வா இணையும் பூமராங் படம் அப்படி ஒரு விஷயம் தான்.

இந்த படத்தில் மூன்று வெவ்வேறு விதமான தோற்றங்களில் நடிக்கிறார் அதர்வா. அதற்காக பல மணி நேரம் கஷ்டப்பட்டு ப்ரோஸ்தடிக் மேக்கப் செய்து கொள்கிறார். அதை பற்றி இயக்குனர் கண்ணன் கொஞ்சம் விளக்கமாக கூறும்போது, “இந்த கதையும், அதர்வாவின் கதாபாத்திரமும் உருவான போது அதற்கு மூன்று வெவ்வேறு தோற்றங்கள் தேவைப்பட்டது. எனவே விருது பெற்ற மேக்கப் துறையில் வல்லுனர்களான கலைஞர்கள் ப்ரீத்திஷீல் சிங், மார்க் ட்ராய் டிஸோசாவை அணுகினோம். படத்திற்கு தேவையான தோற்றங்களை இறுதி செய்ய மும்பைக்கு சென்றோம். அதர்வாவின் கடுமையான ஷூட்டிங்கினால் அவர்களை இங்கு வரவழைக்க வேண்டியிருந்தது. சென்னையில் இரண்டு நாட்கள் தங்கி 12 மணி நேரம் உழைத்து எங்களுக்கு தேவையான தோற்றத்தை உருவாக்கி கொடுத்தார்கள். அதர்வாவின் கண்கள், மூக்கு தவிர அவரின் வாய் உட்பட சின்ன சின்ன அளவுகளை தனித்துவமான முறையில் அளவெடுத்து சென்றனர். ஒரு வகையான மாவை அதர்வாவின் மீது பூசி விடுவார்கள். அதர்வா ஐந்து மணி நேரம் சிலை போல அசையாமல் இருப்பார். அந்த நிலையில் மூச்சு விடுவது மிகவும் சிரமமான விஷயம், மூச்சு விடுவதற்கு ஒரு சிறு குழாய் அவர் மூக்கில் பொருத்தப்பட்டது.

அதை தொடர்ந்து ப்ரோஸ்தடிக் கேஸ்ட் செய்ய 30 நாட்கள் தேவைப்பட்டது, அதன் பிறகு தான் தொடர் படப்பிடிப்புக்கு செல்ல முடியும். அதர்வா இந்த செயல்களின் நடுவே சில நேரங்களில் என்ன நடந்தது என்று எனக்கு தெரியவில்லை, ஆனால் இந்த மாதிரி விஷயங்களை முதன்முறையாக செய்வதால் மகிழ்ச்சி அடைகிறேன் என கூறினார்” என்றார்.

பத்மாவத், நவாசுதீன் சித்திக் நடித்த மாம், அமிதாப் பச்சன், ரிஷி கபூர் நடித்த 102 நாட் அவுட் ஆகிய படங்களில் தங்களது சிறப்பான ப்ரோஸ்தடிக் மேக்கப்பால் புகழ்பெற்றவர்கள் ப்ரீத்திஷீல் சிங் மற்றும் மார்க் ட்ராய் டிஸோசா. ஆக்‌ஷன் திரில்லரான இந்த பூமராங் படத்தில் மேகா ஆகாஷ், ஆர்ஜே பாலாஜி, சுஹாசினி மணிரத்னம், உபென் படேல் ஆகியோர் நடிக்கிறார்கள். பிரசன்ன எஸ் குமார் ஒளிப்பதிவு செய்ய, அர்ஜுன் ரெட்டி படத்துக்கு இசையமைத்த ரதன் இசையமைக்கிறார். படத்தை இயக்குவதோடு மசாலா பிக்ஸ் பேனர் சார்பில் படத்தை தயாரிக்கிறார் ஆர் கண்ணன். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான எல்லையைத் தொடும் முனைப்போடு உழைக்கும் அதர்வாவுக்கு, பூமராங் படமும் அப்படி அமையும் என்ற உறுதியோடு இருக்கிறார்கள் படக்குழுவினர்.