ஒரு படத்தை இயக்குவதில் மிகவும் சவலான விஷயம் என்ன? ஒரு நல்ல கருத்தை கதையாக்குவது, நல்ல நடிகர்களை படத்திற்குள் கொண்டு வருவது? வேறென்ன? இயற்கையாகவே இந்த அம்சங்கள் எல்லாம் ஒரு திறமையான இயக்குனரிடம் இருப்பவை. இவையெல்லாம் தாண்டி மிகவும் முக்கியமான ஒரு விஷயம், படத்தின் செலவை அதிகரித்து ஆடம்பரமாக மாற்றாமல், தயாரிப்பாளரை பாதுகாப்பு வளையத்தில் வைத்திருப்பது. இயக்குனர் கண்ணன் அந்த மாதிரி ஒரு அரிதான இயக்குனர் தான். தன்னுடைய கேரியரில் அதை தொடர்ந்து நிரூபித்து எடுத்துக்காட்டாக இருப்பவர். அத்தகைய பண்புகள் தான் அவருக்கு, அதர்வா, மேகா ஆகாஷ், இந்துஜா நடிக்க, அவரின் தயாரிப்பில் உருவாகும் “பூமராங்” படத்திலும் கைகொடுத்திருக்கிறது.
பூமராங் படத்தின் திரைக்கதையை எழுதி முடித்தவுடனேயே, படத்தை முடிக்க 90 நாட்கள் தேவைப்படும் என்று தெளிவாக தெரிந்தது. மேலும் மிக அதிகமான முன் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டோம். 4 வெர்சன் திரைக்கதை இருந்தது, ஒரு நாளைக்கு 2 காட்சிகளை எடுக்க திட்டமிட்டிருந்தோம். அதர்வா, மேகா ஆகாஷ், இந்துஜா ஆகியோரின் ஒத்துழைப்பு இல்லாமல் இருந்திருந்தால் 45 நாட்களில் படப்பிடிப்பை முடிப்பது சாத்தியமில்லாத ஒன்றாக மாறியிருக்கும்” என்றார் இயக்குனர் கண்ணன்.
அதர்வாவை பாராட்டி பேசும் இயக்குனர் கூறும்போது, “முழு படமும் அதர்வாவை சார்ந்தது. அவரிடம் இருந்து 3 வித்தியாசமான தோற்றங்கள் இந்த படத்துக்கு தேவைப்பட்டது. புரோஸ்தடிக் மேக்கப் செயல்முறையின் போது மிகவும் சுறுசுறுப்பாக இருந்தார். மிகச்சிறந்த புரோஸ்தடிக் ஒப்பனை கலைஞர்களான ப்ரீத்தி ஷீல் சிங் மற்றும் மார்க் ட்ராய் டிஸோசா 12 மணி நேர உழைப்பிற்கு பிறகு அதர்வாவுக்கு சிறந்த, சரியான தோற்றத்தை கொண்டு வந்தனர்.
ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள இந்த படம் சென்னை, அருப்புக்கோட்டை, விருதுநகர் மற்றும் அந்தமான் தீவில் ஒரு சில பகுதிகளில் ஒரு பாடல் காட்சியும் படமாக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் இயக்குனர் கண்ணன் தன் வழக்கப்படி, தனக்கு நெருக்கமான ஒரு தமிழ் தலைப்பை வைக்க தான் திட்டமிட்டிருந்தார். பின் பூமராங் என்ற தலைப்பு படத்துக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்து இந்த தலைப்பை வைத்திருக்கிறார். பாலிவுட் நடிகர் உபென் படேல் இந்த படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். அவருக்கும், அதர்வாவுக்கும் இடையில் நடக்கும் மோதல் காட்சிகள் மிக சிறப்பாக இருக்கும்.
போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் 60 நாட்கள் கால அளவில் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது, ஆகஸ்ட் மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருக்கிறார்கள்.
ஆர் ஜே பாலாஜி, சதீஷ், சுஹாசினி மணிரத்னம் மற்றும் பல முக்கியமான நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். படத்தை மசாலா பிக்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பதோடு படத்தை இயக்கி வருகிறார் கண்ணன்.