நீட் தேர்வு அச்சத்தால் தமிழகத்தில் ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். இந்தச் சம்பவங்கள் தமிழ்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் “கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது” என குறிப்பிட்டிருந்தார்.
இதை பார்த்த நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி தலைமை நீதிபதி ஏ.பி. சாஹிக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில், நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் இன்று விசாரணை நடைபெற்றது. விசாரணைக்கு பின் சூர்யா மீது நடவடிக்கை தேவையில்லை என தலைமை நீதிபதி அமர்வு முடிவு செய்துள்ளது. மேலும் சூர்யாவுக்கு சில அறிவுரைகளையும் நீதிமன்றம் வழங்கி உள்ளது. அவை,
பொது விவகாரங்கள் குறித்து பேசும்போது கவனம் தேவை.
நீதி மன்றத்தையோ, நீதிபதிகளையோ விமர்சிக்கும் வகையில் கருத்துகளை தெரிவிக்க கூடாது.
விமர்சனங்கள் நியாயமாக இருக்க வேண்டுமே தவிர எல்லை மீறக் கூடாது.
நடிகர் சூர்யா முழுமையாக அறிந்து கொள்ளாமல் விமர்சித்தது தேவையற்றது. கொரோனா காலத்திலும் நீதிமன்றங்கள் முழுமையாக செயல்பட்டு 42,233 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன.