full screen background image
Search
Sunday 24 November 2024
  • :
  • :

சவாலான கதாபாத்திரங்களை ஏற்று தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முத்திரை பதிக்க தயாராகும் ‘அவந்திகா மிஸ்ரா’

வெற்றிகரமான மாடலாக இருந்து மின்னும் திரை நட்சத்திரமானது வரை, அவந்திகா மிஸ்ராவின் பயணம் கடின உழைப்பு, திறமை மற்றும் வசீகர தோற்றத்தால் கட்டமைக்கப்பட்டது எனலாம்.புது தில்லியை பூர்வீகமாகக் கொண்டு பெங்களூருவில் தனது கல்வியை கற்ற இவர், நீலகண்டா இயக்கிய தெலுங்கு படமான மாயா மூலம் தனது திரையுலக பயணத்தை தொடங்கினார். பின்னர் இவர் தருண் ஷெட்டியுடன் இணைந்து
மீகு மீரே மாகு மேமே எனும் திரைப்படத்தில் முதன்மை பாத்திரத்தில் நடித்தார்.

வியாஷகம், மீகு மாத்திரமே செப்தா மற்றும் பீஷ்மா உள்ளிட்ட தெலுங்கு திரைப்படங்களில் தொடர்ந்து நடித்த அவந்திகா மிஸ்ரா, டிரைடென்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் புதுமுக இயக்குநர் ஹரிஹரன் இயக்கத்தில் அஸ்வின்குமார் லட்சுமிகாந்தன் நடிக்கும் என்ன சொல்ல போகிறாய் படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.இது தவிர, நெஞ்சமெல்லாம் காதல் மற்றும் டி பிளாக் ஆகிய தமிழ் திரைப்படங்களிலும் இவர் நடித்து வருகிறார். தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் இன்னும் சில திரைப்படங்களில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விஜய்குமார் ராஜேந்திரன் இயக்கி வரும் கல்லூரியை பின்னணியாகக் கொண்ட டி பிளாக் படத்தில் அருள்நிதியுடன் அவந்திகா நடித்து வருகிறார்.

“நல்ல கதாபாத்திரங்களை எனக்கு வழங்கி வரும் சுவாரசியமான திரைப்படங்களில் நடிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். எனது திறமையை வெளிப்படுத்த வாய்ப்பளிக்கும் சவாலான வேடங்களையே நான் எதிர் நோக்குகிறேன். தெலுங்கு ரசிகர்களின் அன்பை பெற்றதற்கு அவர்களுக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். திறமைகளை அங்கீகரிப்பதில் முன்னணியில் உள்ள தமிழ்நாட்டு ரசிகர்களிடம் இருந்தும் அதே அன்பை நான் எதிர்பார்க்கிறேன். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் நான் தொடர்ந்து நடிப்பேன்,” என்று அவந்திகா கூறுகிறார்.தென்னிந்திய மொழிகளில் நடிக்கும் போது மொழி சிக்கல் ஏதேனும் அவர் எதிர்கொண்டாரா என்று கேட்டபோது, “கட்டாயமாக இல்லை. கலைக்கு மொழியும், எல்லைகளும் கிடையாது. ஒரு நடிகையாக மொழிக்கு அப்பாற்பட்டு ரசிகர்களை திருப்திப்படுத்துவதே எனது கடமை,” என்று அவந்திகா நம்பிக்கையோடு தெரிவித்தார்.