அயோத்தியில் வசிக்கும் பல்ராம் குடும்பம் தெய்வ நம்பிக்கையும், சாஸ்திரம், சடங்கு இவற்றில் ஊறிப்போனவர்களாக இருக்கிறார்கள். பல்ராம் தன் குடும்பத்தினர் மீது எரிந்து விழும் நபராக இருக்கிறார். மனைவியை எந்நேரமும் அடக்கி, ஒடுக்கி மகள், மகன் இருவரிடமும் பாசம் காட்டாமல் மிரட்டிக் கொண்டிருக்கிறார்.ஒரு தீபாவளி நாளில் இவர்கள் ராமேஸ்வரத்திற்கு புனிதப்பயணம் மேற்கொள்கிறார்கள். மதுரை ரெயிலில் வந்து அங்கிருந்து ராமேஸ்வரத்திற்கு காரில் பயணம் மேற்கொள்கிறார்கள். பல்ராமின் முரட்டுத்தனமான நடவடிக்கையால் கார் ஓட்டுனர் தமன் கவனம் தவறிவிட கார் பெரிய விபத்தில் சிக்குகிறது. இதில் அந்தக்குடும்பமே கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் சேர்க்க நாயகன் சசிகுமார் மற்றும் புகழ் இருவரும் வருகிறார்கள்.
இறுதியில் விபத்தில் சிக்கிய பல்ராம் குடும்பம் என்ன ஆனது? மீண்டும் சொந்த ஊரான அயோத்திக்கு சென்றார்களா? பல்ராம் குடும்பத்தை சசிகுமார் காப்பாற்றினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.நாயகன் சசிகுமார் இயல்பான குணத்தோடு படத்தில் வருகிறார். அவருடைய தோற்றம் இந்தக்கதைக்கு கச்சிதமாகப் பொருந்திப் போகிறது. பல இடங்களில் நடிப்பால் உருக வைக்கிறார் சசிகுமார். படத்தில் கனமான பாத்திரத்தை ஏற்று போகிற போக்கில் நடித்து அசத்தியிருக்கிறார். ஷிவானி பாத்திரம் ஏற்றிருக்கும் பிரீத்தி அஸ்ராணி தாரை தாரையாக கண்ணீர் வடித்துக்கொண்டே நடுங்கும் குரலில் வசனம் பேசி ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.
அப்பா பல்ராமாக யஷ்பால் ஷர்மா கோபத்தின் எல்லா கோணங்களையும் காட்டுகிறார். பாக்கு மெல்லும் வாயுடன் கடு கடு முகத்துடனும் இருந்தவரை, அழத்தெரியாத ஒருவன் அழுவதைக் காட்டும் இன்னொரு முகம் பார்த்து, தியேட்டரில் கைதட்டல் கேட்கிறது. கொடுத்த வேலையை செய்து இருக்கிறார் புகழ். மனைவியாக வரும் அஞ்சு அஸ்ராணி, மகன் அத்வைத் ஆகியோர் நெஞ்சில் நிறைகிறார்கள்.உணர்ச்சிப்பூர்வமாக படமாக்கியிருக்கிறார் இயக்குனர் மந்திரமூர்த்தி. கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். படத்தில் லாஜிக் மீறல்கள் இருந்தாலும் பெரியதாக தெரியவில்லை. என்.ஆர்.ரகுநந்தன் பின்னணி இசை படத்திற்கு பெரிய பலம். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு அருமை.