காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், மரபணு மாற்றப்பட்ட விதைகளின் மூலம் விவசாயம் செய்வதை தடைசெய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் நூறுநாள் விழிப்புணர்வு பிரச்சார பயணம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டம் கம்பம் பகுதிக்கு வந்தனர். பொதுமக்கள் அதிகம் கூடும் காய்கறி சந்தை, வயல் வெளிகள் மற்றும் நகர் பகுதி முழுவதும் விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கினர்.
கம்பம் சந்தைக்கு வந்திருந்த பொது மக்களிடமும், வியாபாரிகளிடமும் மரபணு மாற்றப்பட்ட விதைகளின் மூலம் விவசாயம் வேண்டாம். மரபணு மாற்றப்பட்ட விதையிலிருந்து உற்பத்தி செய்த உணவை சாப்பிடாதீர்கள் எனக்கூறி விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கினர்.
பின்னர் அய்யாக்கண்ணு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, எல்லா கிராமங்களுக்கும் சென்று மக்களுக்கு நோட்டீஸ் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். மரபணு மாற்றப்பட்ட விதைகளை நான்கு ஆண்டுகள் உண்டால் வாலிபன் ஆண்மையை இழந்து விடுவான், பெண்கள் கருத்தரிக்கும் சக்தியை இழந்து விடுவார்கள். இதனால்தான் மரபணு மாற்றப்பட்ட விதைகளை இந்தியாவில் இறக்குமதி செய்யக்கூடாது என்று பிரதமருக்கு கோரிக்கை வைக்கிறோம்.
ஆனால் இந்த விழிப்புணர்வு செய்வதற்கு பிஜேபி, ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி எங்களுக்கு கருப்புக்கொடி காட்டுகின்றனர். அடிக்க வருகிறார்கள், அடித்தும் விட்டனர், நோட்டீஸ் கொடுப்பதை இவர்கள் தடுப்பது ஜனநாயகத்துக்கு விரோதமான ஒன்று.
கெமிக்கல் பூச்சிமருந்து அடித்ததால் தான் விவசாய நிலம் பாழ்பட்டுபோனது. மறுபடியும் இந்த நிலத்தை மாற்ற முடியும். மரபணு மாற்றப்பட்ட விதைகளை இந்தியாவில் இறக்குமதி செய்ய விடமாட்டோம் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் எவ்வளவு மழை பெய்துள்ளது, கர்நாடகா எவ்வளவு சாகுபடி செய்துள்ளது என்பது தெரிந்துவிடும் அதனால் தான் கர்நாடகா காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கின்றனர்.
தமிழகத்தில் எத்தனை விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டாலும் பிரதமருக்கு கவலையில்லை. கர்நாடகாவில் ஓட்டுவாங்கவேண்டும் ஆட்சியை பிடிக்கவேண்டும் என்பதற்காக தமிழகத்தை வஞ்சிக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.