சைவமும், வைணவமும் இணைந்து கொண்டாடும் விழா மதுரை சித்திரை திருவிழா. மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குதல் ஆகியவையே மதுரையின் புகழ் பெற்ற சித்திரை திருவிழா.
இந்த விழாவில் தமிழகம் மட்டுமல்ல பிற மாநிலங்கள், வெளிநாடுகளில் வசிப்பவர்களும் கலந்து கொள்வார்கள். மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா கடந்த 12 நாட்களாக விமரிசையாக நடைபெற்றது.
மீனாட்சி பட்டாபிஷேகம், திக்குவிஜயம், திருக்கல்யாணம், தேரோட்டம் என மதுரை விழாக்கோலம் பூண்டது. மீனாட்சி அம்மன் – சுந்தரேசுவரர் வீதி உலாவின்போது சிறுவர்-சிறுமிகள் பல்வேறு தெய்வங்களின் வேடமணிந்து கோலாட்டம் ஆடினர். மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா முடிந்து மறுநாள் தொடங்கியது கள்ளழகர் சித்திரை திருவிழா.
அழகர் மலையில் வீற்றிருக்கும் சுந்தரராஜ பெருமாள் அங்கிருந்து கடந்த 26-ந்தேதி தோளுக்கினியான் வேடத்தில் கோவிலின் திருக்கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருளினார். 28-ந்தேதி பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவிலுக்கு வந்த அழகருக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.
பதினெட்டாம்படி கருப்பண சாமியிடம் காவல் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு கள்ளர் திருக்கோலத்தில் தங்கப்பல்லக்கில் மதுரை புறப்பட்ட அழகரை நேற்று மூன்றுமாவடியில் பக்தர்கள் எதிர்கொண்டு வரவேற்றனர்.
தொடர்ந்து அங்கிருந்து புதூர் மாரியம்மன், ரிசர்வ்லைன் மாரியம்மன் கோவில்களுக்கு சென்ற அழகர் பல்வேறு மண்டகப் படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இரவு 9 மணிக்கு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் அழகர் பிரசன்னமானார். அங்கு வந்த அவரை பக்தர்கள் நாட்டுசர்க்கரை நிரப்பப்பட்ட செம்பில் சூடம் ஏற்றி வரவேற்றனர்.
இரவு சிறப்பு அலங்காரத்திற்கு பின்பு கள்ளழகருக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த சுடர்மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
இரவு முழுவதும் பக்தர்களுக்கு தரிசனம் தந்த கள்ளழகர் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் தங்கக்குதிரை வாகனத்தில் வைகை ஆறு நோக்கி புறப்பட்டார். அவருக்கு முன்னதாகவே பக்தர்கள் தல்லாகுளம் முதல் வைகை ஆற்று பாலத்தையும் தாண்டி சிம்மக்கல் வரை அணிவகுத்து நின்றனர்.
தல்லாகுளம் கருப்பணசாமி கோவிலுக்கு வந்த கள்ளழகர் அங்கு பாரம்பரியமிக்க ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளினார். அதன் பிறகு பச்சை பட்டு உடுத்தி அதிகாலை 3 மணிக்கு கள்ளழகர் புறப்பட்டார்.
தங்க குதிரை வாகனத்தை சுமந்து வந்த சீர்பாத தூக்கிகள் உள்ளங்கைகளில் தாங்கி தூக்கிப்பிடித்தபடி இருபுறமும் அசைத்தனர். இதனை பார்ப்பவர்களுக்கு அழகர் குதிரையில் துள்ளி வருவது போன்ற பரவசமான நிலை ஏற்பட்டது.
சரியாக காலை 5.55 மணிக்கு கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். அவரை வீரராகவ பெருமாள் எதிர்கொண்டு வரவேற்றார். பின்னர் வீரராகவபெருமாளை கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் 3 முறை சுற்றி வந்தார்.
அப்போது அங்கு திரண்டிருந்த 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அழகரை தரிசனம் செய்தனர். நாராயணா…. கோவிந்தா… என பக்திக் கோஷம் எழுப்பினர்.
வைகை ஆற்றில் அமைக்கப்பட்டிருந்த மண்டகப்படிகளில் கள்ளழகருக்கு சிறப்பு தீபாராதனைகள் நடந்தது.
அதன்பிறகு கள்ளழகர் மதிச்சியம் ராமராயர் மண்டகப்படிக்கு சென்றார். நீண்ட தொலைவு பயணம் செய்து வந்த அழகரை குளிர்விக்கும் வகையில் கள்ளழகர் வேடம் அணிந்த திரளான பக்தர்கள் தோல் பையில் இருந்த துருத்தி நீரை அழகர் மீது பீய்ச்சி அடித்தனர். இது கண் கொள்ளா காட்சியாக இருந்தது.
அழகர் ஆற்றில் இறங்கியதும் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடனாக முடி காணிக்கை செலுத்தினர். கள்ளழகர் வேடம் அணிந்த பக்தர்கள் கம்பத்தடி வைத்துக்கொண்டு மேளதாளம் முழங்க நேர்த்தியாக ஆட்டம் போட்டனர்.
அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியை முன்னிட்டு மதுரை நகர் பக்தர்கள் வெள்ளத்தில் தத்தளித்தது. பக்தர்களின் பாதுகாப்புக்காக 5 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்