எப்படி இருக்கிறது “அழகிய கண்ணே” திரைப்படம் – திரை விமர்சனம்!
தமிழ் சினிமாவில் எளிய மனிதர்களின் வாழ்க்கையை யதார்த்தமாக படம் பிடிப்பவர் சீனு ராமசாமி. அவரது தம்பி விஜயகுமார் முதல்முறையாக இயக்கியுள்ள படம் அழகிய கண்ணே. பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் நாயகனாக அறிமுகமாகியுள்ளார். இப்படத்தின் கதையை பற்றி பார்க்கலாம்.
லியோ சிவக்குமார் அம்மா, தங்கையுடன் வாழ்ந்து வருகிறார். இவரது எதிர்வீட்டில் பிராமண பெண்ணான சஞ்சிதா ஷெட்டி அப்பா, சித்தி, சித்தியின் தம்பியுடன் வாழ்ந்து வருகிறார். நாயகனுக்கு சினிமாவில் இயக்குனர் ஆக வேண்டும் என்பது ஆசை. ஊரில் இருக்கும் போது நாயகன் நாயகி இருவருக்கும் காதல் மலர்கிறது. நாயகன் சென்னையில் இயக்குனர் பிரபு சாலமனிடம் உதவி இயக்குனராக சேர்கிறார். நாயகியும் படிப்பை முடித்துவிட்டு சென்னையில் பணியில் சேர்கிறார். இவர்களது காதலுக்கு நாயகியின் சித்தியும் அவரது தம்பியும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இறுதியில் இவர்கள் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா என்பதுதான் அழகிய கண்ணே.
நாயகன் லியோ சிவக்குமார் நன்றாக நடித்துள்ளார். காதல் காட்சிகளிலும் ஆக்ஷனிலும் பாஸ் மார்க் வாங்குகிறார். வசனம் பேசும்போது மட்டும் சற்று கூடுதல் கவனம் செலுத்தினால் நலம். நாயகி சஞ்சிதா ஷெட்டி பிராமண பெண்ணாக அடக்க ஒடுக்கமாக நடித்துள்ளார். காதல், சோகம் என கொடுத்த வேலையை செய்துள்ளார். இயக்குனர் பிரபு சாலமன் இயக்குனராகவே வருகிறார். விஜய் சேதுபதி சிறப்பு தோற்றம். படம் ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரே தொய்வாக செல்கிறது. வலுவான கதையோ அதற்கு ஏற்ற திரைக்கதையோ இல்லை. இக்கதை எல்லாம் முழு நீள படத்துக்கு ஏற்றதல்ல. சென்னை வாழ்க்கை இப்படித்தான் இருக்கும். அது ஏதோ பெரிய பிழை போல காட்டுகின்றனர். ரகுநந்தனின் இசையில் பாடல்கள் ஓகே. அசோக் குமாரின் ஒளிப்பதிவில் கிராமத்து காட்சிகள் அழகு. முன்பெல்லாம் சென்னை என்றால் எல்ஐசி கட்டிடத்தை காட்டுவார்கள். இப்போது கத்திப்பாரா பாலத்தை காட்டுகிறார்கள். சென்னையில் நிறைய இடம் இருக்குப்பா.. சங்கத்தமிழனின் கத்தரி இன்னும் வேலை செய்திருக்கலாம். சிங்கம் புலி, அமுதவானன், ஆண்ட்ரூஸ் ஆகியோர் கதை ஓட்டத்திற்கு உதவி உள்ளனர். இயக்குனர் விஜயகுமார் இன்னும் வலுவான கதையை எடுத்திருக்கலாம். அல்லது திரைக்கதையில் எதாவது புதுமை செய்திருக்கலாம். கிளைமாக்ஸ் திணிக்கப்பட்டதாக உள்ளது. மொத்தத்தில் அழகிய கண்ணே.. நிறைவில்லை.