full screen background image
Search
Thursday 21 November 2024
  • :
  • :
Latest Update

பாகுபலி 2 – விமர்சனம்

பாகுபலி 2 ரிலீஸ்க்கான ஆர்வமும், எதிர்பார்ப்பும் பாகுபலி முதல் பாகம் ரிலீஸ் ஆன முதல் நாளில் இருந்தே தொடங்கி விட்டது. கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார்? என்ற ட்ரண்டிங் கேள்விக்கு விடையை பாகுபலி-2ல் விஷூவல் ட்ரீட்டாக கொடுத்திருக்கிறார் ராஜமெளலி.

பல கோடி ரூபாய் பட்ஜெட், உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 9000 திரையரங்குகளில் திரையிடல் என்று பாகுபலி-2 யின் பிரமாண்டம் இந்தியாவுக்கு ரொம்பவே புதிது.

அந்த பிரமாண்டத்தின் தொனி, திரையில் படத்தின் டைட்டில் கார்டு போடுவதில் இருந்தே தென்பட்டு திரையரங்குகளை தெறிக்கவிடுகிறது. டைட்டில் கார்டில் அப்படி என்ன பிரமாண்டம்?… பாகுபலி முதல் பாகத்தில் அப்லாஸ் அள்ளிய காட்சிகளை 3டி மோசன் போஸ்டராக உலவ விட்டு உற்சாகத்தில் ஆழ்த்தி இருக்கிறார்கள்.

பார்வையாளர்களுக்கு, படத்தின் முதல் காட்சியில் ஏற்படும் பிரமிப்பு, படம் முழுவதும் தொடர்கிறது. டெக்னிகல் விசயங்களில், ராஜமெளலி எடுத்துக் கொண்ட மெனக்கெடல், கதையோடு நம்மை ஒன்றி விடச் செய்யும் தத்ரூபமான காட்சிகளில் தெரிகிறது.

முந்தைய பாகத்தைவிட, இந்த பாகத்தில் பிரபாஸ் ரொம்பவும் விறு விறு. படத்தில் இவருக்கான மாஸ் காட்சிகள் ஏராளம். காட்சிக்கு காட்சி இவருடைய நடிப்பை பார்த்து நமக்கு வியப்பு ஏற்படுகிறது. இந்த படத்திற்காக அவர் கஷ்டப்பட்டது வீண் போகவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

முந்தைய பாகத்தில் அழுக்குத் துணியுடன் ஒருசில காட்சிகள் வந்த அனுஷ்கா, இந்த பாகத்தில் அழகான யுவராணியாக வந்து அனைவரையும் கவர்கிறார். கைதேர்ந்த வாள் சண்டை வீரர் போல் நடித்திருக்கிறார். வீரம், காதல், பாசம், கருணை என எல்லாவற்றையும் தனது வித்தியாசமான முகபாவனைகளை கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார். வசனங்களிலும் துணிச்சலான பெண்ணுக்குண்டான நடிப்புடன் அழகாக நடித்திருக்கிறார்.

நாசரும், சத்யராஜூம் எதிரெதிர் துருவங்களாக மிரட்டியிருக்கிறார்கள். கம்பீரமான ராஜமாதாவாக, பாசமுள்ள ஒரு தாயாக உணர்வுகளை கனகச்சிதமாக வெளிப்படுத்தியிருக்கிறார் ரம்யா கிருஷ்ணன். மதன் கார்க்கியின் வசனங்கள் படத்திற்கு ரொம்பவும் பக்கபலமாக அமைந்திருக்கிறது. ஒவ்வொரு வசனங்களும் ஆழமாகவும், அழுத்தமாகவும் அமைந்திருப்பது சிறப்பு. பின்னனியில் மிரட்டிய மரகதமணி, பாடல்களில் வசீகரிக்கத் தவறியிருக்கிறார்.

எஸ்.எஸ்.ராஜமௌலியின் திரைக்கதை முந்தைய பாகத்தைப் போலவே, இந்த பாகத்திலும் சிறப்பு. சரித்திர கதையிலும், கமர்ஷியலுக்குண்டான அம்சங்களையும் பொருத்தி அனைவரும் ரசிக்கும்படியான ஒரு படத்தை கொடுக்க முடியும் என காட்டியிருக்கிறார்.
மொத்தத்தில் ’பாகுபலி 2’ மக்களின் மன்னன்.