பாகுபலி’ நாயகன் பிரபாஸ் நடிக்கும் மும்மொழித் திரைப்படம்! வைஜயந்தி மூவிஸ் தயாரிப்பில் ‘நடிகையர் திலகம்’ புகழ் பிரபல இயக்குனர் நாக் அஷ்வின் இயக்குகிறார்
பாகுபலி நாயகன் பிரபாஸ் நடிப்பில் உருவாகவிருக்கும் அடுத்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் மும்மொழித் திரைப்படமாக அமைகிறது. இப்படத்தை வைஜயந்தி மூவிஸ் தயாரிக்க, ‘நடிகையர் திலகம்’ தந்த பிரபல இயக்குனர் நாக் அஷ்வின் இயக்குகிறார்
‘ரெபல் ஸ்டார்’ பிரபாஸ் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் பெரும் புகழ் சேர்த்த பாகுபலி திரைப்பட வரிசைகளின் பிரம்மாண்டமான வெற்றியைத் தொடர்ந்து, ஒரு உண்மையான சர்வதேச திரை நட்சத்திர அந்தஸ்தை பெற்றிருக்கிறார் என்றார் அது மிகையில்லை.
திரையுலகில் ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கும் மேலாக, வெற்றிமுகமாகவும் உத்வேகத்தோடும் திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் முன்னணி நிறுவனமான வைஜயந்தி மூவிஸ், பல்வேறு மகத்தான வெற்றிப் படங்களையும், மகோன்னதமான கலைஞர்களையும், தொழில்நுட்ப வல்லுனர்களையும் அறிமுகப்படுத்தியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
என் டி ஆர், கிருஷ்ணா, சிரஞ்சீவி, சோபன் பாபு, கிருஷ்ணம் ராஜூ உள்ளிட்ட ஜாம்பவான்கள் நடிப்பில் பல வெற்றிப் படங்களை தயாரித்த இந்நிறுவனம், ஜூனியர் என் டி ஆர், மகேஷ் பாபு, ராம் சரண், நாரா ரோஹித் மற்றும் அல்லு அர்ஜுன் உள்ளிட்ட பல சமகால கதாநாயகர்களையும் அறிமுகப்படுத்திய பெருமைக்கும் உரியது.
பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் அஸ்வானி சி தத் நிறுவிய வைஜயந்தி மூவிஸ், நடிகர் பிரபாஸ்-ன் அடுத்த படத்தை தயாரிக்கிறது.
‘நடிகையர் திலகம்’ என தமிழிலும், ‘மகாநடி’ என தெலுங்கிலும் பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கைப் பயணத்தை தத்ரூபமாக படம் பிடித்து, சாதனைப் படைத்த இயக்குனர் நாக் அஷ்வின், அடுத்ததாக வைஜயந்தி மூவிஸ் தயாரிபில் நடிகர் பிரபாஸ் நடிக்கும் மும்மொழிப் படத்தை இயக்குகிறார். 2019ல் வெளியான இத்திரைப்படம், மூன்று தேசிய விருதுகளையும், பல்வேறு சர்வதேச விருதுகளையும் வென்று அனைவரின் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.