சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஸ்ரீநகரில் நடைபெறும் பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரி குறித்த கூட்டத்தில் கலந்து கொள்ள செல்கிறேன். மாநில உரிமை மற்றும் நிதி தன்னாட்சி பாதுகாப்பு இருக்க வேண்டும் என்று மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா உறுதியாக நின்றதின் அடிப்படையில் அது ஏற்றுக் கொள்ளப்பட்டு இந்த கூட்டம் நடைபெறுகிறது.
திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் என்னை வெளியேற்றினால்தான் இணக்கமான பேச்சுவார்த்தை நடைபெறும் என மதுசூதனன் கூறி இருப்பது, “அமாவாசை இருட்டில் பெருச்சாளி போவதெல்லாம் வழி” என்ற பழமொழி மதுசூதனனுக்கு பொருந்தும்.
பிரிந்து போன சகோதரர்கள் மீண்டும் வந்து இணைந்து ஒற்றுமையாக செயல்படுவோம். வாருங்கள் பேசுவோம், கட்சியிலும், ஆட்சியிலும் உரிய மரியாதை முக்கியத்துவம் கொடுப்போம் என்றுதான் கூறி உள்ளோம்.
ஓ.பி.எஸ். அணியினர் தான் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கருத்தை சொல்கிறார்கள். நிபந்தனை விதிக்கிறார்கள். எங்களை பற்றிய விமர்சனங்களை ஓரளவுதான் பொருத்துக் கொள்ள முடியும்.
ஆனால் நாங்கள் அவர்களைப் போல தரம் தாழ்ந்து பேச மாட்டோம். பேச்சுவார்த்தைக்கு முட்டுக் கட்டையாக இருப்பது அவர்களே.
இவ்வாறு அவர் கூறினார்.