தமிழக கவர்னராக இருந்த ரோசய்யாவின் பதவி காலம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 30-ந்தேதி முடிவடைந்தது.
இதைத்தொடர்ந்து மராட்டிய மாநில கவர்னராக பணியாற்றி வரும் வித்யாசாகர் ராவ், தமிழகத்துக்கு கூடுதல் பொறுப்பை ஏற்றார். கடந்த செப்டம்பர் 2-ந்தேதி அவர் கூடுதல் கவர்னராக பதவி ஏற்றார்.
ஜெயலலிதா மரணம், தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள ஸ்திரத்தன்மை ஆகியவற்றின் காரணமாக தமிழ்நாட்டுக்கு முழுநேர கவர்னரை நியமிக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.
ஒரு ஆண்டுக்குப் பிறகு தமிழ்நாட்டுக்கு முழுநேர கவர்னரை நியமித்து கடந்த 30-ந்தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அறிவித்தார். அசாம், மேகாலய மாநில கவர்னராக இருந்த பன்வாரிலால் புரோகித் தமிழகத்தின் புதிய கவர்னராக நியமிக்கப்பட்டார்.
புதிய கவர்னரான பன்வாரிலால் நாளை பிற்பகல் சென்னை வருகிறார். நாளை மறுநாள் (6-ந்தேதி) கிண்டியில் உள்ள ராஜ்பவனில் நடைபெறும் விழாவில் அவர் புதிய கவர்னராக பதவி ஏற்கிறார். அவருக்கு சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
பொறுப்பு ஆளுநராக இருக்கும் வித்யாசாகர்ராவ் நாளை மும்பை புறப்பட்டு செல்கிறார்.