full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

வளரும் நடிகரை சூப்பர் ஸ்டாராக வாழ்த்திய பாக்யராஜ்..!

கடந்த வருடம் வெளியான ‘பட்டதாரி’ படம் மூலம், ரசிகர்கள் மனதில் பளிச்சென இடம்பிடித்தவர் தான் நடிகர் அபி சரவணன். வழக்கம்போல இவரும் ஒரு சாதாரண புதுமுகமாகத்தான் கடந்துபோயிருப்பார். ஆனால் சமூக நிகழ்வுகளில் இவர் தொடர்ந்து காட்டிவரும் அக்கறையும் அர்ப்பணிப்பு உணர்வும் ரசிகர்களிடம் இவரை இன்னும் நெருக்கமாக்கி விட்டன என்பதே உண்மை.

மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்டதோடு, மதுரை, அலங்காநல்லூர், புதுக்கோட்டை என அந்த மண்ணுக்கே நேரடியாக சென்று போராட்டங்களில் கலந்துகொண்டவர் சரவணன். நெடுவாசலுக்கு சென்று மீத்தேன் திட்டத்தை எதிர்த்து குரல் கொடுப்பதாகட்டும், விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு அளிப்பதாகட்டும் அனைத்து நிகழ்வுகளிலும் அபி சரவணனை முதல் ஆளாக பார்க்க முடிந்தது.

விவசாயிகளுக்கான போராட்டங்களில் முன்னின்று பங்கேற்று வருகிறார். டெல்லியில் ஒரு மாதத்திற்கும் மேலாக போராடிய விவசாயிகளுக்கு, திரையுலகப் பிரபலங்கள் மூலமாக சிறுசிறு உதவிகளையும் செய்து கொடுத்து வந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ‘சதுர அடி 3500’ பட விழாவில் கலந்துகொண்ட அபி சரவணன், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர் பார்த்திபன் என்பவரின் மகளுக்கு ஒரு லட்ச ரூபாய்க்கான நிதி உதவியை விழாவில் கலந்துகொண்ட கே பாக்யராஜ் முன்னிலையில் வழங்கினார்.

இதுபற்றி பாராட்டிப் பேசிய இயக்குனர் பாக்யராஜ், “நடிகர் அபி சரவணன் இந்த மேடையினை நெகிழ்ச்சியாக மாற்றிவிட்டார். வளரும் போதே முகம் தெரியாதவர்களுக்கு இவ்வளவு உதவிகளை செய்யும் இவரல்லவா சூப்பர் ஸ்டாராக வேண்டும். என்னுடைய வாய் முகூர்த்தம் பலிக்கும் என்பார்கள். அபி சரவணன் விசயத்தில் நடந்தால் சந்தோஷம்.” என அபி சரவணனை புகழ்ந்து தள்ளிவிட்டார்.

இத்தனைக்கும் தற்போது ‘லுலு கிரேஷன்ஸ்’ தயாரிப்பில் மனோ இயக்கத்தில் ‘வெற்றி வேந்தன்’ என்கிற படத்தில் நடித்துவரும் அபி சரவணன், முதல்நாள் இரவு படப்பிடிப்பில் கழுத்தில் அடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். ஆனால் மறுநாள் தயாரிப்பாளர் பார்த்திபன் வந்துவிட்டார் என தகவல் தெரிந்ததும் உடனே ‘சதுர அடி 3500’ பட விழாவிற்கு வந்து அந்த உதவி தொகையை வழங்கிவிட்டு, அதன்பின்னர் மீண்டும் மருத்துவமனை சிகிச்சைக்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி அபி சரவணன் அவரது முகநுால் பதிவில், “தயாரிப்பாளர் என்பவர் சினிமாவில் கடவுளைப் போன்றவர். படியளக்கும் பகவானின் கஷ்டத்தில் பங்கெடுப்பது எனது கடமை. வறுமையில் வாடுபவர்களுக்கு உதவிகள் செய்யவேண்டும். ஆனால் தயாரிப்பாளராக பலருக்கு வேலை தந்து சம்பளம் கொடுத்த தயாரிப்பாளர் தன் மகளின் சிகிச்சைக்கு உதவியின்றி நிதியில்லாமல் வேதனைப்பட்டது தெரியவந்தது. உடனடியாக ஒரே நாளில் நண்பர்கள் மூலமாக ஒரு லட்சம் ரூபாய் திரட்டினேன். அதுவும் கோபி மற்றும் ராகுல் அவர்கள் வெளியிடும் சதுரஅடி இசை வெளீயீடு மூலமாக இது சாத்தியமாயிற்று.

கேட்டவுடன் நிதி அளித்த மதுரை சுதாகரன், இயக்குனர் ‘சாயம்’ ஆண்டனி, இயக்குனர் ‘வெற்றி வேந்தன்’ மனோ, நடிகர் ‘ஓவியா’ காண்டீபன், மாணவன் மனோஜ், மகேஸ்வரி, நடிகர் கார்த்தி, நடிகை அதீதி, நடிகை சௌம்யா, நடிகை உஷா ரவீந்தர் ஆகியோருக்கு நன்றி!” எனக் குறிப்பிட்டுள்ளார்.