காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு வகையான போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஐ.பி.எல். போட்டிகளை தமிழகத்தில் நடத்தக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து நேற்று போராட்டம் நடத்தப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்ட இயக்குனர்கள் பாரதிராஜா, அமீர் மற்றும் வைரமுத்து, நாம் தமிழர் கட்சிதலைவர் சீமான், எம்.எல்.ஏ.க்கள் கருணாஸ், தமிமுன் அன்சாரி உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
இந்த போராட்டத்தின் போது போலீசார், போராட்டக்காரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பினரும் காயமடைந்தனர். இதில் சுமார் 400-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து நடிகர் ரஜினிகாந்தும் டுவிட்டரில் கண்டனம் தெரிவிதத்துள்ளார்.
இந்நிலையில், சிலர் நேற்று நடந்ததை வன்முறை என்கின்றனர். அது வன்முறையல்ல, எதிர்வினை. அதனை மட்டும் பூதாகரமாக பேசுவது சரியல்ல. நாளை பிரதமர் வரும்போது கருப்புக் கொடி காட்டுவது உறுதி என்று கூறிய பாரதிராஜா, அடுத்த ஐபிஎல் போட்டியின் போதும் போராட்டம் நடைபெறும் என்றார். அந்த போராட்டம் வேறுவிதமாக இருக்கும். போலீசாரை தாக்கியது குறித்து பேசிய ரஜினி, போராட்டத்தில் என்னை கைது செய்ததது பற்றி பேசவில்லை. ரஜினி வாயை மட்டுமே அசைக்கிறார். அவருக்கு பின்னால் இருந்து யாரோ குரல் கொடுக்கின்றனர்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும் போது,
காவலர்களை நான் தாக்கியதாக கூறிவருகின்றனர். அதில் உண்மை இல்லை. காவலர்களை நான் தாக்கவில்லை, விலக்கியே விட்டேன். யாரையும் தாக்க வேண்டும் என்பது எங்களது நோக்கமல்ல. எங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது, போலீசார் தாக்கப்பட்டது வன்முறை என்று கூறும் ரஜினி, எங்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை ஏன் வன்முறையாக கூறவில்லை.
இயக்குநர் அமீர் பேசும் போது, போராட்டக்களத்திற்கு வந்தால்தான் அங்கு என்ன நடந்தது, காவலர்கள் யார் என்பது பற்றி ரஜினிக்கு தெரியவரும். அதிகாரத்திற்கு ஆதரவாகவே ரஜினியின் ‘ட்விட்டர்’ கருத்து இருக்கறது என்று கண்டனம் தெரிவித்தார்.