இயக்குனர் பேரரசு எழுதிய ‘என்னை பிரமிக்க வைத்த பிரபலங்கள்’ என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
விழாவுக்கு பாரதிராஜா தலைமை தாங்கினார். புத்தகத்தை டி.ராஜேந்தர் வெளியிட இயக்குனர் கே.பாக்யராஜ் பெற்றுக் கொண்டார்.
விழாவில் பேசிய அவர், “முன்பு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படும். இறுதியில் தேசிய கீதம் பாடப்படும். ஜன கண மன பாடிவிட்டார்களா என்று நிகழ்ச்சி முடிந்ததை குறிப்பிடுவார்கள். இப்போது முதலில் ஜன கண மன பாடுகிறார்கள். தமிழில் பாடினால் போதாதா?
தமிழ் மொழிக்கு முதல் இடம் கொடுக்க வேண்டும். அதை காப்பாற்ற வேண்டும். தமிழ்நாட்டில் யாரும் அரசியல் செய்யலாம். ஆனால், தமிழன் வேறு எந்த மாநிலத்திலாவது ஆட்சி செய்ய முடியுமா? இதை தமிழர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.
தமிழர்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். எங்களுக்கு வயது ஆகி விட்டது. தமிழ் இளைஞர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். தமிழ்நாட்டை தமிழன் தான் ஆள வேண்டும். இதற்கான முயற்சியில் தமிழக இளைஞர்கள் இப்போதே ஈடுபட வேண்டும். அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.” என்றார்.
நிகழ்ச்சியில் விஷால், இயக்குனர் விக்ரமன், தொழில் அதிபர் சந்தோஷம், சுதா விஜயகுமார், டைமன்ட் பாபு, விஜய முரளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.