பிகில் விமர்ச்சனம் – 3/5

Reviews
0
(0)

அட்லீ இயக்கத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ’பிகில்’ படத்திற்காக கூட்டணி அமைத்திருக்கிறார் விஜய்.

கதைப்படி,

அப்பா ராயப்பன்(விஜய்) வட சென்னையில் மிகப்பெரும் தாதா. அப்பகுதி மக்களுக்காக பிரச்சனை என்றால் முதலில் குரல் கொடுப்பவர் ராயப்பன் தான். இவரது மகன் தான் மைக்கேல்(விஜய்).

தன்னோடு இந்த ரவுடித்தனம் ஒழிய வேண்டும் என்று மகனை விளையாட்டில் இறக்கி, மிகப்பெரும் கால்பந்து விளையாட்டு வீரராக கொண்டு வருகிறார்.

ஒரு கட்டத்தில், அப்பா ராயப்பன் எதிரிகளால் வீழ்த்தப்பட கால்பந்து ஆட்டத்தை ஓரங்கட்டி வைக்கிறார் மைக்கேல். அப்பாவின் ஆசைக்காக மகளிர் கால்பந்து அணியை உருவாக்குகிறார் மைக்கேல். எதிர்பாராதவிதமாக அந்த அணிக்கு மைக்கேலே பயிற்சியாளராக வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது.

அதன் பின் நடக்கும் பிரச்சனைகள் தான் படத்தின் மீதிக் கதை..

ராயப்பன், மைக்கேல் என இரண்டு கதாபாத்திரத்தில் தனது மிரட்டல் நடிப்பை கொடுத்திருக்கிறார் விஜய். ராயப்பன் கதாபாத்திரத்திற்கு திரையரங்குகளில் விசில் சத்தம் விண்ணைப் பிளக்கிறது. இந்த கதாபாத்திரம் இன்னும் கொஞ்ச நேரம் வரக்கூடாது என்று ஏங்க வைத்துவிட்டார் விஜய்.

நடனம், ஆக்‌ஷன், காமெடி, ரொமான்ஸ் என அனைத்திலும் வழக்கம்போல் அசத்தலான நடிப்பையே கொடுத்திருக்கிறார் விஜய். மொத்த படத்தையும் தனி ஒருவனாக தூக்கிச் செல்கிறார் விஜய்.

மைக்கேல் விஜய்க்கும் நயன்தாராவுக்குமான காதல் காட்சிகள் இருந்தாலும், சரியான ஹெமிஸ்ட்ரி இல்லாததால் வேலைக்கு ஆகாமல் சென்று விட்டது.

யோகிபாபுவின் நடிப்பு ஆங்காங்கே வெடிக்கும் சிரிப்பு சரவெடி. விவேக்கின் காமெடி எடுபடாமல் சென்று விட்டது. விஜய்யின் நண்பனாக வருன் கதிரின் நடிப்பு சூப்பர்.
வில்லன்களாக வந்த ஜாக்கி ஷெராப் மற்றும் டேனியல் பாலாஜி மிரட்டல் தான்.

மற்றபடி, ஆனந்தராஜ், தீனா, இந்துஜா, அம்ரிதா, ரெபா மோனிகா, வர்ஷா பல்லமா, இந்திரஜா ஷங்கர், தேவதர்ஷினி என அனைவரும் கதைக்கு ஏற்ற கதாபாத்திரங்களாக வந்து செல்கின்றனர்.

ஆங்காங்கே சில காட்சிகள் மிரட்டலாக எட்டி பார்த்தாலும், திரைக்கதை அமைத்த விதத்தில் அட்லீ தோல்வியைத் தான் தழுவியிருக்கிறார்.

ஏ ஆர் ரகுமானின் பாடல்கள் மற்றும் பின்னனி இசை மிரட்டல் ரகம் தான். இரண்டாம் பாதியில் இருந்த ஒரு வேகத்தை முதல் பாதியிலும் கொடுத்திருக்கலாம்.

ஜி கே விஷ்ணுவின் ஒளிப்பதிவில் ஒவ்வொரு சீனும் கலர் புல் தான். ராயப்பனின் காட்சிகள் அனைத்தும் அதகளமான ஒளிப்பதிவு தான். ரூபன் கத்திரியை இன்னும் கொஞ்சம் ஷார்ப்பாக (எடிட்டிங்) இறக்கியிருக்கலாம்.

தெறி, மெர்சல் வெற்றியைக் கொடுத்த இக்கூட்டணி பிகிலில் கொஞ்சம் தவறவிட்டுவிட்டது என்று தான் கூற வேண்டும்.

நீளத்தையும் சற்று குறைத்திருந்தால் இன்னும் படுவேக ஜெட்’ஆக இந்த பிகில் பட்டையை கிளப்பியிருக்கும்.

பிகில் – சவுண்டு கம்மி, ஆட்டம் வெறித்தனம்…

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.