படமாகிறது மற்றொரு விளையாட்டு வீராங்கனையின் வாழ்க்கை

News
பிரபல இந்திய பேட்மிடன் வீராங்கனை சாய்னா நேவால். 2012-ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்திருந்தார். மேலும் பல்வேறு பதக்கங்களையும் வென்றிருக்கிறார். இந்தியாவின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, அர்ஜுனா, ராஜீவ் காந்தி கேல் ரத்னா உள்ளிட்ட விருதுகளையும் பெற்றுள்ளார்.

அவரது வாழ்க்கை வரலாற்றை எடுக்க கடந்த 2012 முதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், அவரது வாழ்க்கை வரலாற்றை பாலிவுட்டின் பிரபல இயக்குநர் அமோல் குப்தே படமாக எடுக்க உள்ளார். சாய்னா நேவால் மற்றும் பாட்மின்டன் குறித்த ஆய்வில் தீவிரமாக இறங்கியுள்ள குப்தே, இப்படத்தில் சாய்னா நேவாலாக பிரபல பாலிவுட் நடிகை ஷரத்தா கபூரை ஒப்பந்தம் செய்துள்ளார். இப்படத்தை பூஷன் குமார் தயாரிக்க உள்ளார்.

இதுகுறித்து ஷரத்தா கபூரிடம் கேட்ட போது, அவரும் அதனை உறுதிப்படுத்தி உள்ளார். பள்ளிகளில் பேட்மிடன் விளையாடிய அனுபவம் தனக்கு இருப்பதாகக் கூறிய ஷரத்தா, உலகின் நம்பர் 1 வீராங்கனையான சாய்னா கதாபாத்திரத்தில் நடிப்பது எனக்குக் கிடைத்த அதிர்ஷ்டம். அதற்காகத் தான் தீவிரமாக தயாராகி வருவதாகவும் கூறினார்.

ஆசிய சேம்பியன்ஷிப் போட்டியில் பிசியாக விளையாடி வரும் சாய்னாவிடம் இந்த தகவல் குறித்துக் கேட்ட போது, “இது எனக்கு செய்தி. இந்த படம் பற்றி எனக்கு தெரியும். ஆனால் ஷரத்தா கபூர் நடிப்பது குறித்து தற்போதே அறிந்து கொண்டேன்.” என்றார். மேலும், “ஷரத்தா ஒரு திறமை மிக்க நடிகை. எனது நெருங்கிய தோழியான ஷரத்தா கதாபாத்திரத்திற்கு ஏற்றாற்போல் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.” என்றார்.