ஜனாதிபதி தேர்தலில் அனைத்து கட்சிகளிடமும் பேசி ஒருமித்த கருத்து ஏற்படுத்தவும், தங்களுக்கு ஆதரவு திரட்டவும் பா.ஜ.க.வில் அருண்ஜெட்லி, ராஜ்நாத்சிங், வெங்கையா நாயுடு ஆகிய 3 பேரை கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த மூவர் குழுவினர் காங்கிரஸ் தலைவர் சோனியா உள்பட அனைவரிடமும் பேச்சு நடத்தினார்கள்.
மாநில கட்சித் தலைவர்களையும் தொடர்பு கொண்டு பேசினார்கள். இந்த ஆலோசனைகள் அனைத்தும் நேற்றுடன் முடிவடைந்தன.
இந்நிலையில், ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக பா.ஜ.க. ஆட்சி மன்ற குழு கூட்டம் இன்று புதுடெல்லியில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க. தலைவர் அமித்ஷா, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக பீகார் மாநில ஆளுநராக உள்ள ராம்நாத் கோவிந்தை வேட்பாளராக அறிவித்தார்.
மேலும், துணை ஜனாதிபதி பெயர் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று அமித்ஷா கூறினார்.
வழக்கறிஞரான ராம்நாத் கோவிந்த், உ.பியில் இருந்து மாநிலங்களவைக்கு இருமுறை தேர்வு செய்யப்பட்டவர். கட்சியில் நீண்ட காலமாக பணியாற்றி வந்தவர். தலித் சமுதாயத்தில் பிறந்து உயர்ந்த இடத்துக்கு சென்றவர்.