ர்.ஆர்.ஆர். படத்தில் இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் வகையிலான காட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இயக்குனர் ராஜமவுலிக்கு பா.ஜ.க. எச்சரிக்கை விடுத்துள்ளது.
தெலுங்கு திரையுலகின் பிரபல இயக்குனர் எஸ்.எஸ். ராஜமவுலி. இவரது படைப்பில் நடிகர்கள் பிரபாஸ், ராணா உள்ளிட்டோர் நடிப்பில் உருவான பாகுபலி திரைப்படம் பிரம்மாண்ட வெற்றி பெற்று, பெருமளவு வசூலை குவித்து சாதனை படைத்தது.
இவரது இயக்கத்தில் ஆர்.ஆர்.ஆர். என்ற படம் உருவாகி வருகிறது. இதில், பழங்குடியின மக்களின் தெய்வம் என போற்றப்படும் கொமரம் பீம் தலையில், தொப்பி வைத்திருப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன என கூறப்படுகிறது.
இதுபற்றி பா.ஜ.க.வின் தெலுங்கானா மாநில தலைவர் பண்டி சஞ்சய் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, ராஜமவுலியின் வெளிவரவிருக்கிற படத்தில் கொமரம் பீம் தலையில் தொப்பி வைத்திருப்பதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.
நிஜாம் மற்றும் ஓவைசி புகைப்படங்களில் பொட்டு வைப்பதற்கு இதுபோன்ற நபர்களுக்கு தைரியம் உண்டா? என கேள்வி எழுப்பினார்.
இந்த படம் பழங்குடியின மக்களின் உணர்வுகளை புண்படுத்துகிறது. நாங்கள் அவர்களை மதிக்கிறோம். இதுவே நம்முடைய பாரம்பரியம். இந்துக்களின் உணர்வுகள் புண்படுத்தப்பட்டால் அதுபோன்றவர்களை நாங்கள் விட்டு வைக்கமாட்டோம்.
நாங்கள் ஜூனியர் என்.டி.ஆர். மற்றும் ராம்சரண் அல்லது படத்தில் நடிக்கும் வேறு எந்த நடிகர்களுக்கும் எதிரானவர்கள் இல்லை. இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துவது என்பது சமீபத்திய நாட்களில் டிரெண்ட் ஆகி வருகிறது. இதனை நாம் அனைவரும் எதிர்ப்போம் என்று கூறியுள்ளார்.