full screen background image
Search
Friday 8 November 2024
  • :
  • :
Latest Update

ஹாலிவுட்டில் ஒரு பா.இரஞ்சித்!!

காலா டீஸர் வெளியான நிமிடத்தில் இருந்து, அதற்கான விமர்சனங்களும் வைரல் ஆகிக்கொண்டிருக்கிறது. ஒரு டீஸரில் இத்தனை குறியீடுகள் கண்டுபிடிக்கப்பட்டு பட்டியல் போடுவது எல்லாம் பா.இரஞ்சித் படங்களுக்கு மட்டும் தான் நிகழும். அதில் முக்கியமான கருப்பு வண்ணத்தைக்கொண்டாடுவது. காலா டீஸர் வெளியாக சில நாட்களுக்குள்ளேயே தயாரிப்பாளராக பா.இரஞ்சித்தின் முதல் திரைப்படம், பரியேறும் பெருமாளின் முதல் பாடல் வெளியாகி… அதுவும் கருப்பின் கொண்டாட்டமாகவே அமைந்திருக்கிறது. பாடலின் துவக்கமே “கருப்பி கருப்பி என் கருப்பி” என்று தான் தொடங்குகிறது.

திரைப்படங்கள் கலையின் ஒரு வடிவமாக இருந்த போதிலும் பெரும்பாலும் அவை எடுப்பார் கைப்பிள்ளை தான். திரைப்படத்துறையில் கொஞ்சமாக அறிவும் வெற்றி பெறுவதற்கான தந்திரமும் வாய்ப்பும் உள்ளவர்கள் என்ன நினைக்கிறார்களோ, அவை தான் திரைப்படங்களாக உருவாக்கப்படுகின்றன. உலக அளவில் இது பொதுவான விதிதான். இந்த விதிக்கு உட்பட்டுத்தான் திரைப்படத்துறை இயங்குகிறது என்றாலும் அவ்வப்போது சில மாற்று முயற்சிகள் நடக்கும். மாற்று பார்வைகள் கொண்ட திரைப்படங்கள் வெளிவரும். அப்படிப்பட்ட மாற்று பார்வை கொண்ட படங்கள் கூட வழக்கமான பாணி படம் எடுப்பவர்கள், வழக்கமான கருத்துகளையும் கலாச்சாரத்தையும் முன் வைப்பவர்களால் அரை குறையாகவே எடுக்கப்படும்.

உள்ளது உள்ளபடி உண்மைக்கு மிக நெருக்கத்தில் அதை அனுபவித்தவர்களின் பார்வையாக இல்லாமல், பொதுப்புத்தியில் பதிய வைக்கப்பட்ட பிம்பங்களில் இருந்து அந்த மாற்று சினிமாக்கள் உருவாகும். ஏன் இது தொடர்கதையாகவே இருக்கிறது என்றால் அந்த வாழ்வியலை வாழ்ந்தவர்கள், அனுபவித்தவர்கள் திரைப்படங்களில் அதை ஒரிஜினலாக சித்தரிக்க முடியாத நிலைமை தான் இத்தனை வருடமாக நீடித்தது. அப்படிப்பட்டவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்காமலிருப்பதற்கு சமூக கட்டமைப்புகள் காரணமாக இருந்தன. இந்த நிலைமை உலகம் முழுவதுமாக வேறு வேறு வடிவங்களாக இருந்திருக்கிறது. ஆனால் இப்போது உலகமெங்கும் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால்… பூர்வீக சென்னை வாழ் மக்களின் கதை, அல்லது சென்னை என்கிற பெருநகருக்குள்ளேயேயும் வெளியேயும் உள்ள கிராமங்கள் தன்மை கொண்ட பகுதிகளில் வாழும் மக்களின் கதையை… காலங்காலமாக ஒரே பாணியில் திரும்ப திரும்ப சொல்வார்கள். அய்யே இன்னாமே’வில் ஆரம்பித்து அழுக்கு உடை, வறுமையான கதாபத்திரங்கள் என இந்த பொதுப்பார்வை சினிமாக்கள் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லும்.

இந்த நிலையில் பா.இரஞ்சித் என்கிற ஒரு இளைஞன்… கவின்கலைக்கல்லூரி மாணவர் சினிமாத்துறைக்குள் வருகிறார்.

எங்கள் வாழ்க்கை என்பது நீங்கள் சித்தரிப்பதல்ல, இதோ நான் தருகிறேன் என்று “அட்டகத்தி” என்ற படத்தின் மூலமாக அசலான சென்னை மக்களின் வாழ்க்கையை பதிவு செய்கிறார். அதனைத்தொடர்ந்து “மெட்ராஸ்” என்ற படத்திலும் அசலாகப் பதிவு செய்கிறார். கிட்டத்தட்ட 100 வருட தமிழ் சினிமாவின் பொதுப்புத்தி சித்தரிப்புகளை மறுத்து பொய்யாக்கி அசல் முகங்களை அசலாகப் பதிவு செய்கிறார், பா.இரஞ்சித்.

எனக்கு ரையான் கூக்ளரை(Ryan Coogler) பார்த்தபோது ஹாலிவுட்டின் பா.இரஞ்சித் என்று தான் சொல்லத் தோன்றியது. பிப்ரவரி மாதம் உலகமெங்கும் வெளியாகி வசூலில் சாதனை படைத்துக்கொண்டிருக்கும் பிளாக் பேந்தர் படத்தின் இயக்குநர் தான், இந்த ரையான் கூக்ளர். நீங்கள் பா.இரஞ்சித்தை கோலிவுட்டின் ரையான் கூக்ளர் என்றாலும் தவறில்லை. பிளாக் பேந்தர், ஃபேன்டஸி வகைப் படமாக இருந்தாலும் அதை புரட்சிப் படமாகவே பார்க்கத் தோன்றுகிறது எனக்கு.

பிளாக் பேந்தரை புரட்சிப்படமாக பார்க்கத்தோன்றுவதற்கும், ரையான் கூக்ளரையும் இரஞ்சித்தையும் ஒரே மாதிரி பார்க்கத் தோன்றுவதற்கும் என்ன காரணம்?

காரணங்கள் நிறைய இருக்கிறது என்றாலும், முதல் காரணம், கருப்பு.

இவர்கள் இருவரோடும், இவர்கள் படங்களிலும் நிறைந்துள்ள கருப்பு வண்ணம் தான் முக்கிய காரணம். கருப்பு வண்ணம் என்பது வெறும் வண்ணம் அல்ல, அது விடுதலையின் வண்ணம். ஆதி மனித இனத்தின் வண்ணம். பிளாக் பேந்தர் என்று ரையான் கூக்ளர் தன் படத்திற்குப் பெயர் வைப்பதும், காலா என்று இரஞ்சித் தன் படத்திற்குப் பெயர் வைத்ததும் இயல்பாய் நிகழ்ந்த்து அல்ல. அது அவர்களின் அரசியல் புரிதல். அந்த அரசியல் புரிதல் தான் அவர்கள் இருவரையும் ஒரே புள்ளியில் இணைக்கிறது.

அப்படி என்னதான் இவர்கள் இருவரும் கருப்பை வைத்து அரசியல் செய்கிறார்கள் என்றால்… ஓரமாக தள்ளப்பட்ட ஒதுக்கி வைக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களை முதன்மைப்படுத்துகிறார்கள், முன்னிலைப்படுத்துகிறார்கள். அது அவ்வளவு எளிதானதல்ல. பிளாக் பேந்தர் படத்தின் முன்னணி கதாபாத்திரங்கள் அனைவருமே நம் சொந்தக்காரர்கள் போலவே இருப்பார்கள். கதைநாயகன், கதைநாயகி, கதைநாயகனின் தங்கை, கதை நாயகனின் நண்பன்… என அந்த நடிகர்களையும் அவர்களின் கதாபாத்திரங்களையும் பார்க்கும்போது நீங்கள் அதை உணர முடியும். அச்சு அசலாக மிக இயல்பான மக்களே கதாபாத்திரங்களாக இருப்பார்கள். கதாநாயகனுக்கென்று திணிக்கப்படும் வண்ணம், உடை, மொழி, இனப்பின்னணி என்று சகல இலக்கணங்களையும் உடைத்து வாழ்க்கையில் இருந்து அந்நியப்படாத கதாபாத்திரங்களாக இருப்பார்கள். எவையெல்லாம் சிறுமைப்படுத்தப்பட்டு ஒதுக்கப்பட்டதோ அவற்றை எல்லாம் முதன்மைப்படுத்தி, யாரெல்லாம் ஒடுக்கப்பட்டார்களோ அவர்களை எல்லாம் முதன்மைப்படுத்தி கதைகளை திரைப்படங்களை உருவாக்குவதில் இருவரும் ஒரே பாதையில் பயணிக்கிறார்கள்.

இரஞ்சித்துக்கும் ரையான் கூக்ளருக்கும் இடையிலான இன்னொரு ஒற்றுமை, பெண் கதாபாத்திரங்களுக்கு அவர்கள் இருவரும் கொடுக்கும் முக்கியத்துவம்.

கபாலியில் கதைநாயகனின் மனைவி, முக்கியமான அறிவுரைகள் சொல்லி வழிநடத்தும் குருவாகவும், மகள் ஆபத்தில் இருந்து காப்பாற்றும் திறமையும் வீரமும் கொண்டவராகவும் சித்திரித்திருப்பார் இரஞ்சித். பிளாக் பேந்தரில் கதைநாயகனுக்கு சற்றும் சளைக்காத வீரமும் புத்திசாலித்தனமும் கொண்ட காதலி, ராஜாவாக இருக்கும் அண்ணனுக்கு பக்கபலமாக நாட்டு பாதுகாப்பு, மருத்துவம், தொழில்நுட்பத்தில் மிகச்சிறந்தவராக விளங்கும் தங்கை, உயிரையும் கொடுப்பதற்கு யோசிக்காத மெய்க்காவலர் என பெண் கதாபாத்திரங்களை வடிவமைத்திருப்பார் ரையான் கூக்ளர். தங்கையாக நடித்திருக்கும் லெடிசியா ரைட்(Letitia Wright), காதலியாக நடித்திருக்கும் லுபிடா நயாங்கோ(Lupita Nyong’o) போன்ற நடிகர்களை எல்லாம் புத்திசாலிகளாக வீர்ர்களாக காட்டுவதற்கு உலக சினிமாவும் நமது உள்ளூர் சினிமாவும் ரொம்பவே யோசிக்கும். ஹாலிவுட் அதில் கொஞ்சம் மாறிவிட்டது என்றாலும் நம்ம ஊர் இன்னும் அதே நிலையில் தான் இருக்கிறது. மாறாத இப்படிப்பட்ட விசயங்களை மாற்றுகிறார்கள் ரையன் கூக்ளரும் இரஞ்சித்தும். இவர்கள் இருவருக்குமான ஒற்றுமை பற்றி நான் இங்கே குறிப்பிட்டிருப்பது ஒரு சில விசயங்கள் மட்டுமே. இன்னும் பலப்பல இருக்கும். இருக்கிறது. அதை நம்மை விட அவர்கள் இருவரும் நன்றாக அறிவார்கள்.

ஒரு பேன்டஸி படத்திற்குள் தன் அரசியலையும் பேசும் ரையான் கூக்ளர் போலவே தன் பா.இரஞ்சித்தும் தன் படங்களில் அரசியல் பேசுகிறார். அந்த வகையில் ரையான் வழியில் விரைவில் பா.இரஞ்சித் ஒரு ஃபேன்டஸி திரைப்படம் இயக்குவார் என்று நம்புகிறேன். ஏனெனில் ரஜினிகாந்திடம் முதல்முறையாக கதை சொல்லச் சென்ற இரஞ்சித், சொன்ன இரண்டு கதைகளில் ஒன்று கபாலி, இன்னொன்று ஒரு சயின்ஸ் பிக்சன் படத்திற்கான கதை, என்று வாசித்த ஞாபகம். ஆக காலாவிற்கு அடுத்த பா.இரஞ்சித்தின் திரைப்படம் பேன்டசி திரைப்படமாகவும் இருக்கலாம் என்று அனுமானிக்கிறேன். ஏனெனில் பிளாக் பேந்தர் படத்தைப்பற்றிய பா.இரஞ்சித்தின் ட்வீட், ஃபேன்டஸி படங்களின் மீதான இரஞ்சித்தின் விருப்பத்தையும் காட்டுகிறது.

I loved #BlackPanther,

I could connect with #BlackPanther,

I am provoked by #BlackPanther.

I want to be a #BlackPanther.

YES! I am #BlackPanther

எனவே புரட்சியும் ஃபேன்டஸியும் பிரமாண்டமுமான ஒரு இந்திய சினிமாவிற்கான எதிர்பார்ப்புடன் இந்த கட்டுரையை முடிக்கிறேன். அந்த திரைப்படத்திற்கு முன் ஒருவேளை ரையான் கூக்ளரும் பா.இரஞ்சித்தும் சந்தித்தாலும் கூட ஆச்சர்யமில்லை தான்.

– முருகன் மந்திரம்