விக்ரமின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கொட்டிவாக்கம் YMCA ஆண்கள் மேல்நிலை பள்ளி கலையரங்கில், தென்சென்னை விக்ரம் ரசிகர்கள் நற்பணி மன்றத்தின் சார்பில் இரத்த தான முகாம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ‘ஸ்கெட்ச்’ படத்தின் தயாரிப்பாளர் பார்த்திபன் மற்றும் இயக்குநர் விஜய் சந்தர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். இவர்களுடன் நடிகர் விக்ரமின் அகில இந்திய தலைமை ரசிகர் மன்றத்தின் தமிழக தலைவர் எம்.சூரிய நாராயணன் மற்றும் பொருளாளர் வி.கலையழகன் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இவ்விழாவில் விக்ரம் ரசிகர்களுக்காக, இயக்குநர் DR உதயா இயக்கத்தில், சரண் குமார் இசையமைப்பில் உருவான ‘ஏனோ உந்தன் ரசிகன் நானோ’ என்ற இசை ஆல்பம் வெளியிடப்பட்டது.
பின்னர் ரத்த தான முகாமைத் தொடங்கி வைத்து பேசிய இயக்குநர் விஜய் சந்தர், ‘சீயான் விக்ரம் ‘ஸ்கெட்ச்’ போட்டு நடிப்பதைப் போல், அவரது ரசிகர்களும் ‘ஸ்கெட்ச்’ போட்டு நற்பணியில் ஈடுபட்டு வருவது வரவேற்கத்தக்கது. அவரது நடிப்பில் உருவாகி வரும் ‘ஸ்கெட்ச்’ அவரது ரசிகர்களுக்கு பிடித்த படமாகவும் இருக்கும்’ என்றார்.
தயாரிப்பாளர் பார்த்திபன் பேசும் போது, ‘விக்ரம் சிறந்த நடிகர் என்ற அடையாளத்தைக் கடந்து சிறந்த பண்பாளர். அவரது பிறந்த நாளில் நடைபெறும் இந்த ரத்த தான முகாமில் கலந்து கொண்டதை அவர் எனக்களித்த கௌரவமாக கருதுகிறேன்.
ரசிகர்களை தங்களுடைய வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தாமல், சமூக முன்னேற்றத்திற்காக பாடுபட அறிவுறுத்தி வழிநடத்திச் செல்லும் சீயான் விக்ரம் அவர்களுக்கு என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.’ என்றார்.
பின்னர் தென் சென்னை மாவட்ட விக்ரம் ரசிகர் மன்றத்தின் சார்பில் விரிவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரத்த தான முகாமில் திரளான ரசிகர்களும், ரசிகைகளும் தங்களது பெயரை பதிவு செய்து கொண்டு, இரத்த தானம் செய்தனர்.