ப்ளூ ஸ்டார் திரைவிமர்சனம்

cinema news movie review

ப்ளூ ஸ்டார் திரைவிமர்சனம்

ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன், சாந்தனு, பிரித்வி பாண்டியராஜன், கீர்த்தி பாண்டியன் உள்ளிட்டோர் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் ப்ளூ ஸ்டார். இப்படத்தின் கதை அரக்கோணம் அருகே உள்ள ஒரு ஊரில் வசித்து வரும் இரண்டு அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி பற்றியதுதான். விளையாட்டில் உள்ள அரசியலை பற்றி பேசுகிறது படம். இயக்குனர் பா.ரஞ்சித் இப்படத்தை வெளியிட்டுள்ளார். அசோக் செல்வன் காலனி பகுதியில் வசித்து வருபவர். தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்த இவரும் இவரது தம்பியான பிரித்வியும் ப்ளூ ஸ்டார் கிரிக்கெட் அணிக்கு விளையாடி வருகின்றனர். அதே ஊரில் உள்ள ஊர் அணியான ஆல்ஃபா அணிக்கு சாந்தனு கேப்டனாக இருக்கிறார்.‌ சில வருடங்களுக்கு முன் நடந்த கிரிக்கெட் போட்டியில் ஏற்பட்ட சண்டையால் இந்த இரு அணிகளும் ஒருவரை ஒருவர் எதிர்த்து விளையாடக் கூடாது என்பது ஊர்க் கட்டுப்பாடு. ஆனால் ஆல்ஃபா அணியை எதிர்த்து விளையாடி வெற்றிபெற வேண்டும் என்பது அசோக் செல்வனின் ஆசை. அதன்படி ஒருநாள் ஊரில் அனுமதி வாங்கி போட்டி நடக்கிறது. அதில் கிளப் அணி வீரர்களை வைத்து வெற்றி பெறுகிறது சாந்தனு அணி. ஆனால் கிளப் அணி வீரர்கள் சாந்தனு‌ அணியை கேவலமாக பார்க்கின்றனர். ஒரு நாள் கிளப்புக்கு சென்ற சாந்தனுவை இங்கே வர வேண்டும் என்றால் ஒரு தகுதி இருக்கனும் என்று அடித்து விரட்டுகிறார்கள். ஊருக்குள் நாம்தான் உயர்ந்தவர் என்று நினைக்கும் சாந்தனுவுக்கு இது பேரதிர்ச்சியை கொடுக்கிறது. நமக்கு மேலும் ஒருத்தன் இருந்து நம்மை இழிவாக பார்க்கிறான் என்பதை நினைத்து கலங்குகிறார். பின்னர் அந்த கிளப் அணியை வெல்ல வேண்டும் என்று அசோக் செல்வன் மற்றும் சாந்தனு இரு அணிகளும் ஒன்றிணைந்து களமிறங்குகின்றனர். இறுதியில் அவர்களை வென்றார்களா? இல்லையா என்பதை அரசியல் கலந்து சொல்லியுள்ளார் இயக்குனர் ஜெயக்குமார்.

நடிகர் அசோக் செல்வனுக்கு இது பெயர் சொல்லும் படம். அவருக்கு மட்டுமல்ல சாந்தனு, பிரித்வி என சின்ன சின்ன வேடங்களில் நடித்த அனைவருக்கும் இது முக்கியமான படமாக இருக்கும். காதல், கோபம், அவமானம் என அத்தனை உணர்வுகளையும் சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளார் அசோக் செல்வன். இவருக்கும் கீர்த்தி பாண்டியனுக்கும் இடையேயான காதல் நன்றாக ஒர்க் அவுட் ஆகியுள்ளது. அசோக் செல்வனின் அப்பாவாக இளங்கோ குமரவேல் அம்மாவாக லிஸ்ஸி இமானுவேலாக நடித்த பகவதி பெருமாள் கிளப் அணியின் வீரர்களாக நடித்தவர்கள் என அனைவருமே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். சாந்தனுவுக்கு இது நல்லதொரு படமாக அமைந்துள்ளது. பிரித்வி பாண்டியராஜன் காமெடி கலந்த வேடத்தில் நடித்து ரசிக்க வைத்துள்ளார்.

ஊருக்குள் நான் பெரியவன் நீ சிறியவன் என வாழ்ந்து வந்தாலும் நீங்கள் எல்லாமே என் காலுக்கு கீழதான் என நினைக்கும் ஒரு கூட்டம் இங்கு உண்டு என்பதை விளையாட்டு மூலம் உணர்த்தியுள்ளார் இயக்குனர். தமிழ் பிரபா மற்றும் இயக்குனர் ஜெயக்குமாரின் வசனங்கள் படத்துக்கு பலம். முதல் பாதி காதல், கிரிக்கெட் என நன்றாக செல்கிறது. இரண்டாம் பாதி முழுக்க முழுக்க கிரிக்கெட்டாக இருந்தாலும் பரபரப்பு குறையவில்லை. கோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல்கள் அருமை. பின்னணி இசை நன்று. ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் படத்தின் மீது ஒன்ற வைக்கிறது.‌ இரண்டாம் பாதியில் தாராளமாக கத்தரி வைக்கலாம். மொத்தத்தில் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து ஒரு அழகான அரசியல் கதை சொல்லியுள்ளார் இயக்குனர் ஜெயக்குமார். ப்ளூ ஸ்டார் – வெற்றி