சென்னையில் தனது நண்பர்களுடன் இணைந்து கார் திருட்டு தொழில் செய்து வருகிறார் நட்டி. இவருக்கு மதுரையில் தாதாவான சரத் லோகித்ஸ்வா வைத்திருக்கும் 10 சொகுசு கார்களை கடத்தி வரும்படி உத்தரவு வருகிறது. இதையடுத்து அந்த கார்களை கடத்துவதற்காக, தனது குழுவுடன் மதுரை செல்கிறார் நட்டி.
இறுதியில் நட்டி 10 கார்களை திருடினாரா? சரத் லோகித்ஸ்வாவிடம் மாட்டினாரா? கார் திருட்டு தொழிலில் நட்டி ஈடுபட்டதற்கான காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
‘சதுரங்க வேட்டை’ படத்திற்கு பிறகு நட்டி மீண்டும் ஒரு வித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்து நடித்திருக்கிறார். ஏற்ற கதைக்களம் என்பதால் சிறப்பாகவே செய்திருக்கிறார். குறிப்பாக இவர் பேசும் வசனங்கள் ரசிக்கும்படி இருக்கிறது.
கதாநாயகியாக நடித்திருக்கும் ரூஹி சிங்கிற்கு அதிகளவில் நடிக்க வாய்ப்பு அமையவில்லை என்றாலும், காட்சிக்கு பக்கபலமாக தேவையான இடங்களில் சிறப்பாக நடித்திருக்கிறார். அர்ஜுனன், முனிஸ்காந்த் ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.
சரத் லோகித்ஸ்வா, மிரட்டல் வில்லனாக நடித்திருக்கிறார். நட்டிக்கு எதிராக அவரது பேச்சும், நடிப்பும் ரசிக்கும்படி இருக்கிறது. அதுல் குல்கர்னி குறைவான காட்சிகளில் மட்டுமே வந்து செல்கிறார். பத்து நிமிடம் மட்டுமே வந்தாலும் ரசிகர்களை அதிகம் கவர்ந்திருக்கிறார் சாம்ஸ். இவர் வரும் காட்சிகளில் தியேட்டரில் சிரிப்பு மழை.
இயக்குநர் தாஜ் ஒரு வித்தியாசமான கதையை சிறப்பாக இயக்கியிருக்கிறார். நட்டியிடம் திறமையாக வேலை வாங்கியிருக்கிறார். வசனங்கள் படத்திற்கு கூடுதல் பலம். பல காட்சிகள் ரசிக்கும்படி உள்ளது. படத்தில் பல கார்கள் உபயோகப்படுத்தி, கலர்புல்லாக காண்பித்திருக்கிறார்கள். படத்தின் திரைக்கதையை தோய்வடைய செய்யாமல் கொண்டு சென்றது சிறப்பு.
ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். ஆனால், பின்னணியில் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார். மகேஷ் முத்துச்சாமியின் ஒளிப்பதிவில் காட்சிகள் தெளிவாக இருக்கிறது.
சினிமாவின் பார்வையில் ‘போங்கு’ சிறப்பான கேங்கு.