“போத” படத்தின் மூலம் கதாநாயகனாக அடியெடுத்து வைத்துள்ளார் ஆர்.எஸ்.விக்னேஷ்ரன் எனும் விக்கி. பல வருடங்களுக்கு முன் “எத்தனை மனிதர்கள்” உள்ளிட்ட ஒரு சில டி.வி. சீரியல்களில் தலை காட்டிய விக்கியின் தந்தை, குடும்ப சூழல் காரணமாக சினிமாவில் நடிராக ஜொலிக்க முடியாமல் போயிருக்கிறார். எனவே, தந்தையின் லட்சியத்தை, தனது குறிக்கோளாக ஏற்றுக்கொண்டு சிறு வயது முதலே நடிப்பின் மீது கவனம் செலுத்தி இருக்கிறார் விக்கி.
அதன் விளைவாக, பெசன்ட் நகரில் உள்ள “ஆக்டர்ஸ் ஸ்டுடியோ” என்கிற பிரைவேட் ஆக்டிங் ஸ்கூலில் சேர்ந்து பயிற்சி பெற்றுக்கொண்டே, வாய்ப்புகளுக்காக முயற்சி செய்திருக்கிறார்.
“வடகறி” , “அச்சமில்லை அச்சமில்லை” , “நிலா” உள்ளிட்ட திரைப்படங்களில் சின்னதும், பெரிதுமான ரோல்களில் நடித்த படியே கோடம்பாக்கத்தை வலம் வந்தவருக்கு நண்பர் கணேஷ் மூலமாக சுரேஷ் ஜி இயக்கத்தில் “போத” பட வாய்ப்பு கிட்டியிருக்கிறது . அதுவும் “ஆண் பாலியல் தொழிலாளி” வேடம். துணிச்சலாக அந்த வேடத்தை ஏற்றுக் கொண்டு நடித்து முடித்திருப்பவர், இவ்வாறு கூறுகிறார்,
“அது சும்மா ஒன்றிரண்டு சீன்களில் மட்டுமே வரும். மொத்த ஸ்க்ரிப்டிலும், சரி தப்பு எதுன்னு தெரியாமல் பொய், திருட்டு என பணத்தை சேஸ் பண்ணிப் போறது தான் என் கேரக்டர். படத்தில் ஹீரோயினே இல்லன்னாலும் காமெடியாக கதை சொல்லப்பட்டிருக்கும். கண்டிப்பா “போத” படத்தை குடும்பத்தோடு போய் பார்க்கலாம்” என உத்திரவாதத்தோடு முடித்தார் விக்கி.