full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

பிருந்தாவனம் – விமர்சனம்

தனது மகனை இழந்த சோகத்தில் தவிக்கும் எம்.எஸ்.பாஸ்கர், ரோட்டில் ஆதரவின்றி திரியும் சிறுவர்களை அழைத்து ஆசிரமங்களில் சேர்த்து விடுகிறார். அவ்வாறாக சேர்த்துவிடப்படும் சிறுவர்களில் ஒருவர் தான் அருள்நிதி. தனது சிறுவயதிலிருந்தே காது கேட்காத, பேச முடியாத அருள்நிதி ஊட்டியில் ஒரு ஆசிரமத்தில் வளர்ந்து வருகிறார். குறிப்பிட்ட வயதை அடைந்த பின்னர், தனது நண்பன் செந்திலுடன் இணைந்து முடிதிருத்தும் தொழிலில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார்.

சூப்பர் மார்க்கெட் வைத்திருக்கும் தலைவாசல் விஜய்யின் மகளான நாயகி தான்யா, சிறுவயதிலிருந்தே அருள்நிதியுடன் பழகி வருகிறாள். ஆனால், ஒருமனதாக அருள்நிதியை காதலித்து வருகிறார் தான்யா. ஆசிரமத்தில் தனிமையில் வளர்ந்த அருள்நிதிக்கு நடிகர் விவேக்கின் காமெடி தான் உறுதுணையாக இருந்துள்ளது.

ஒருநாள் நடிகர் விவேக்கை நேரில் சந்திக்கும் வாய்ப்பு அருள்நிதிக்கு கிடைக்கிறது. மேலும் விவேக்கிற்கு அருள்நிதி செய்யும் உதவி மூலம் இருவருக்கும் இடையே நட்பு ஏற்படுகிறது. இதையடுத்து அருள்நிதி – விவேக் – செந்தில் – தான்யா உள்ளிட்டோர் அடிக்கடி சந்திக்கின்றனர்.

தான்யாவிடம் அருள்நிதி மேல் வைத்துள்ள காதலை வெளிப்படுத்தச் சொல்லி விவேக் ஊக்கப்படுத்துகிறார். விவேக்கின் பேச்சைக் கேட்டு தான்யா, தனது காதலை அருள்நிதியிடம் வெளிப்படுத்துகிறாள். தனக்கு வாய் பேச முடியாது, காது கேட்காது, தான்யாவின் காதலுக்கு அவளது அப்பா ஒத்துக்கொள்ள மாட்டார் என்று சில காணங்களை கூறும் அருள்நிதி, தான்யாவிடம் கோபமாக பேசி காதலை ஏற்க மறுக்கிறார்.

இந்நிலையில், அருள்நிதிக்கு பேச்சு வரும் என்ற உண்மை அனைவருக்கும் தெரிய வருகிறது. இவ்வளவு நாளாக நடித்ததாகக் கூறி அருள்நிதி மீது தான்யா, செந்தில் ஆகியோர் சண்டைப் போட்டு பிரிகின்றனர்.

இறுதியில் தன்னால் பேசமுடியும் என்பதை அருள்நிதி மறைக்க காரணம் என்ன? அவரது வாழ்க்கையில் இருக்கும் மர்மம் என்ன? அருள்நிதி – தான்யா இருவரும் இணைந்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

காது கேட்காத, வாய் பேச முடியாத இளைஞனாக அருள்நிதி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த கதாபாத்திரம் அவருக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறது. அதற்காக அருள்நிதி கடுமையாக உழைத்திருக்கிறார் என்பதை படத்தை பார்க்கும் போதே தெரிகிறது. கவலை தெரியாத இளைஞனாக படம் முழுக்க சிரித்துக் கொண்டே இருக்கிறார்.

மொழி படத்தில் ஜோதிகா காது கேட்காத, வாய் பேச முடியாத பெண்ணாக நடித்திருந்தார். அதில் அவரது கதாபாத்திரம் தனித்துவமாக இருக்கும். அதேபோல வாய்பேச முடியாத ஒரு ஆண் என்ன செய்வான். தனது கருத்தக்களை எப்படி வெளிப்படுத்தான் என்பதை சிறப்பாக வெளிப்படுத்திய அருள்நிதிக்கு பாராட்டுக்கள்.

விவேக் இப்படத்தில் ஒரு நடிகராகவே வாழ்ந்திருக்கிறார். தனது நட்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விவேக், வாய் பேச முடியாத ஒரு இளைஞனுடன் நட்பு பாராட்டுவதும், அவனை மகிழ்விப்பதிலும், அவனது வாழ்க்கையில் பங்கு கொள்வதிலும் தனது முதிர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக வெகு நாட்களுக்கு பிறகு அவரது காமெடிகள் ரசிக்க வைக்கிறது.

தான்யா ஒரு துணிச்சலான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். தைரியமான பெண்ணாக படம் முழுக்க ரசிக்க வைக்கிறார். அருள்நிதியுடனேயே பயணம் செய்யும் செந்தில் தனது பங்குங்கு காமெடிக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார்.

சமீப காலமாக தனது முதிர்ந்த நடிப்பால் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வரும் எம்.எஸ்.பாஸ்கர், இப்படத்திலும் அனைவரையும் கவர்ந்திருக்கிறார். வாழ்ந்து முடித்த ஒருவனின் வாழ்க்கையில் அவர் சந்திக்கும் நிகழ்வுகள், அவரது கண்னோட்டத்தில் அது எப்படி பார்க்கப்படுகிறது என்பதை யதார்த்தமாக கூறியிருக்கிறார். குறிப்பாக இவர் பேசும் வசனங்கள் எளிமையாக இருந்தாலும், அதில் பல்வேறு அர்த்தங்கள் பொதிந்து கிடக்கிறது என்பது படத்தை பார்க்கும் போதே தெரிகிறது.

தனக்கே உரிய பாணியில் வித்தியாசமான வழியில் செல்லும் இயக்குநர் ராதா மோகன், இப்படத்தையும் பூக்களை தொட்டுச் செல்லும் தென்றல் போல ரசிக்க வைத்திருக்கிறார். அன்பு, பாசம், ஏக்கம் என அனைத்தையும் ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ளும் இடமாக பிருந்தாவனத்தை இயக்கியிருக்கிறார். வசனங்கள் ரசிக்கும்படி இருக்கிறது.

எம்.எஸ்.விவேக் ஆனந்தின் ஒளிப்பதிவில் பிருந்தாவனம் அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. விஷால் சந்திரசேகரின் பின்னணி இசையும், பாடல்களும் படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது.

சினிமாவின் பார்வையில் `பிருந்தாவனம்’ அழகான பூந்தோட்டம்.