தமிழ் சினிமாவில் அறம் பேசும் மற்றொரு படம் “பம்பர்” – திரை விமர்சனம்!
இந்த தமிழ் சினிமா பல நல்ல படங்களை கொடுத்துள்ளது. அந்த வகையில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் பம்பர். அதீத நேர்மை ஒருவனுக்கு என்ன கொடுக்கும் என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்லியுள்ளார் அறிமுக இயக்குனர் செல்வகுமார். படத்தின் கதைப்படி வெற்றி தூத்துக்குடியில் தனது கூட்டாளிகளுடன் சின்ன சின்ன திருட்டு, அதிரடிகள் செய்து வருபவர். காவல் நிலையத்தின் ரெகுலர் கஸ்டமர். ஒருநாள் நண்பர்களுடன் சபரிமலைக்கு செல்லும் அவர் அங்கு லாட்டரி வியாபாரம் செய்து வரும் ஹரிஷ் பேரடியிடம் ஒரு லாட்டரி வாங்குகிறார். அந்த லாட்டரியை அங்கேயே மறந்துபோட்டுவிட்டு ஊர் வந்துவிடுகிறார். அதை ஹரிஷ் பேரடி எடுத்து வைத்துள்ளார். இந்த நிலையில் அந்த லாட்டரிக்கு 10கோடி ரூபாய் முதல் பரிசு விழுகிறது. பணத்தை கைப்பற்ற ஹரிஷ் பேரடியின் குடும்பம் முயல, நேர்மையான ஹரிஷ் பேரடி அதை வெற்றியிடம் கொண்டு குடுக்க அவரை தேடி தூத்துக்குடி செல்கிறார். இறுதியில் வெற்றியை கண்டுபிடித்து லாட்டரியை கொடுத்தாரா? பணம் எப்படி மனிதர்களின் மனதுக்குள் புகுந்து ஆட்டுவிக்கிறது என்பதே பம்பர்.
வெற்றி, புலிப்பாண்டியாக வாழ்ந்துள்ளார் என்றே சொல்லலாம். மற்ற படங்களில் இருந்து சற்று நடிப்பில் ஒரு படி உயர்ந்துள்ளார். படம் விஷயத்தில் நான் யாரையும் நம்ப மாட்டேன் என்று நண்பர்களையே நம்பாத கதாபாத்திரம் இவருக்கு. பணம் இல்லாததால் அத்தை மகளே தன்னை காதலிக்காத போது பணம் எவ்வளவு முக்கியமானது என்பதை உணர முடியுகிறது. நண்பர்களாக தங்கதுரை, திலீப் ஆகியோரின் நடிப்பு அருமை. ஜிபி.முத்து சிரிக்க வைக்க முயல்கிறார். இப்படத்தின் ஆன்மா என்றால் அது ஹரிஷ் பேரடிதான். நேர்மையான இஸ்லாமியரை அப்படியே கண்முன் நிறுத்தியுள்ளார். அவரது மேக்கப் அட்டகாசம். நிச்சயம் இவருக்கு விருதுகள் வரலாம். தனது குடும்பத்தில் எத்தனை பிரச்சினைகள் இருந்தாலும் இந்த பணம் நம்முடையது அல்ல அதை உரியவரிடம் சேர்க்க வேண்டும் என்று நாயகனை தேடி அழையும் இடத்தில் கைதட்டல் பெறுகிறார். இத்தனை நாட்களாக நிறைய படங்களில் வில்லனாக அறியப்பட்ட இவருக்கு இது வாழ்நாள் கதாபாத்திரம். ஷிவானி அத்தை மகளாக வந்து போகிறார். போலீஸ் ஏட்டாக வரும் கவிதா பாரதி மாவட்டத்தில் ஒரு போலீஸ் எப்படி இருப்பான் என்பதை கண்முன் நிறுத்தியுள்ளார். அதேபோல் எஸ்பியாக வரும் அருவி மதன் அவரது நடிப்பும் நன்று.
படத்தின் மற்றொரு பலம் விரோத் ரத்தினசாமியின் கேமரா. தூத்துக்குடி, கேரளாவின் அழகை திரையில் பார்க்கும் போது கவர்கிறது. கோவிந்த் வசந்தா இசையில் பாடல்கள் இதம். கார்த்திக் நேத்தா சமகாலத்தில் அருமையான பாடல் வரிகளை கொடுத்து வருகிறார். இதிலும் ஐயப்பன் பாடல், மாமனிதன் பாடல் உள்பட அனைத்து பாடல்களும் ரசனை. ஹரிஷ் பேரடியின் மேக்கப்பில் பட்டணம் ரஷீத்தின் உழைப்பு தெரிகிறது.
இயக்குனர் செல்வகுமார் தமது முதல் படத்திலேயே நேர்மையும் உண்மையும் ஒரு மனிதனுக்கு எவ்வளவு முக்கியமானது என்பதை உணர்த்தியுள்ளார். கிளைமாக்ஸ் காட்சியில் ஹரிஷ் பேரடி பேசும் வசனங்கள் மனதை தைக்கின்றன. அதேபோல் கடைசியில் வெற்றியின் செயல் நேர்மைக்கு கிடைத்த பரிசு.
மொத்தத்தில் பம்பர் பரிசு ரசிகர்களுக்கு. ரேட்டிங் – 3.5/5