வழக்கம் போல ஒரு பிரச்சினையைக் கைவிட்டு விட்டு அடுத்த பிரச்சனைக்கு தாவுதல் போல இல்லாமல், இந்த முறை காவிரிக்காக பல நாட்களாக போராட்டங்களை நடத்தி வருகிறது அதிமுக, பாஜக தவிர்த்த ஒட்டுமொத்த தமிழகமும்.
தற்போது, காவிரிப் பிரச்னை உச்ச நிலையை அடைந்துள்ள நிலையில், மத்திய அரசு “காவிரி மேலாண்மை வாரியம்” அமைப்பதற்கான எந்த அறிகுறியும் இதுவரை தெரியவில்லை. ஆனால், “காவிரி மேலாண்மை வாரிய”த்துக்குப் பதிலாக, அதிகாரம் இல்லாத ஓர் அமைப்பு உருவாக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது. கர்நாடகாவின் விருப்பத்தின்படி இது அமைக்கப்பட இருப்பதால், இனி தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் வருவதற்கான சாத்தியங்கள் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சில நாட்களுக்கு முன்பு பெ.மணியரசன், சீமான், வேல்முருகன், தனியரசு, தமிமுன் அன்சாரி உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள், திரைப்படத்துரையினர், விவசாய சங்கத்தினர், தமிழ்த் தேசிய அமைப்பினர் முன்னெடுத்த ஐபிஎல்-லுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. அதனால், ஐபிஎல் போட்டிகள் தமிழகத்தில் இருந்து மாற்றப்பட்டது. அது மட்டுமல்லாமல், நெய்வேலி அனல்மின் நிலையம் முன்பு ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட முற்றுகைப் போராட்டமும் நடைபெற்றது.
திமுக செயல் தலைவர் ஸ்டாலினும் “காவிரி உரிமை மீட்புப் பயணம்” என்றொரு தமிழகம் தழுவிய நடைபயணத்தை மேற்கொண்டார். அவரோடு விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகள், மதிமுக உட்பட பல கட்சிகள் இந்த நடைபயணாத்தில் கலந்து கொண்டார்கள்.
இந்நிலையில், வருகிற 27-ம் தேதி, கல்லணையில் மாமன்னன் கரிகால் சோழன் சிலை முன்பு காவிரி உரிமையை மீட்பதற்கான உறுதியேற்பு ஒன்றுகூடல் நடத்த, “காவிரி உரிமை மீட்புக் குழுவினர்” அழைப்பு விடுத்துள்ளார்கள். தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இதில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்பிறகு, தமிழ்நாட்டில் காவிரிக்கான போராட்டங்கள் முழுவீச்சில் நடைபெறும் எனச் சொல்லப்படுகிறது. இதன் முதல்கட்ட போராட்டமாக, தஞ்சை-புதுக்கோட்டை சாலையில் உள்ள இந்திய விமானப்படைத் தளம் முற்றுகைப் போராட்டம் நடைபெற உள்ளது.
வருகிற மே மாதம் 12-ஆம் தேதி கர்நாடகத் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், மே 5-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் காவிரி வழக்கு விசாரணைக்கு வர இருப்பது குறிப்பிடத் தக்கது.