காவிரி நதிநீர் வழக்கை விசாரித்து வந்த சுப்ரீம் கோர்ட் கடந்த மாதம் 16-ந்தேதி தீர்ப்பு வழங்கியது. தமிழகத்திற்கு தண்ணீரின் அளவை குறைத்தது. காவிரி நதி யாருக்கும் சொந்தம் இல்லை என்றும் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் கர்நாடகத்துக்கு கூடுதலாக 14.75 டி.எம்.சி. தண்ணீர் எடுக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டனர்.
தமிழகத்திற்கு தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டதற்கு விவசாயிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்து வந்த நிலையில், காவிரி பிரச்சினை தொடர்பாக தமிழக அரசு கடந்த மாதம் 22-ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தியது. முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில், காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்க வேண்டும் என்று வலியுறுத்த பிரதமரை சந்திப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடகத்தில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. எனவே, கர்நாடக மாநிலத்திலும் முதல் மந்திரி சித்தராமையா அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட முடிவு செய்தார். அதன்படி, வரும் 7-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என இன்று அறிவித்துள்ளார். இதற்காக அனைத்துக் கட்சி தலைவர்களுக்கும் தனித்தனியாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.