full screen background image
Search
Friday 22 November 2024
  • :
  • :
Latest Update

விழிப்புணர்வு படத்திற்கு சான்றிதழ் தர மறுத்த தணிக்கைக் குழு?

எக்ஸட்ரா எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் வி. மதியழகன், ஆர். ரம்யா தயாரித்திருக்கும் ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’ படத்திற்கு சென்ஸார் மறுக்கப்பட்டிருக்கிறது.

இப்படத்தில் ‘திலகர்’ படத்தில் நடித்த துருவா ஹீரோவாகவும், ஐஸ்வர்யா தத்தாவும், அஞ்சனாவும் நாயகிகளாக நடித்துள்ளனர். ஒருவர் .

இவர்களுடன் ஜேடி சக்ரவர்த்தி, சரண்யா பொன்வண்ணன், ராதாரவி, நாகிநேடு, மனோபாலா, அருள்தாஸ், ‘மைம்’ கோபி, ‘சதுரங்க வேட்டை’ புகழ் வளவன், ‘நான் மகான் அல்ல’ ராம் ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படம் இன்று சென்ஸார் அதிகாரிகளால் தணிக்கை செய்ய பார்க்கப்பட்டது.

இதுகுறித்து பேசிய இயக்குநர் ராகேஷ், “ ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’ இன்று சமூகத்தில் நடக்கும் சிறுசிறு குற்றங்களை மையப்படுத்திய கதையாகும். ஒவ்வொரு நாளும் பெண்களையும், குழந்தைகளையும் அச்சுறுத்தும் சமூக விரோத சம்பவங்கள் நிறைய நடைபெற்றுக் கொண்டேயிருக்கிறது.

அதை செய்திகளாகப் படிக்கிறோம். தொலைக்காட்சிகளில் சிசிடிவியினால் பதிவு செய்யப்பட்ட வீடியோவாகப் பார்க்கிறோம். சமூக வலைதளங்களில் பரப்பி விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம். அங்கெல்லாம் சென்ஸார் தலையிடுவதில்லை.

அப்போதெல்லாம் அதனால் மக்களின் மனம் பாதிக்கப்படுகிறதா இல்லையா என யாரும் தடை விதிப்பதில்லை. ஆனால் அதையே மக்களுக்கும் பெண்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் படமாக எடுத்தால் பிரம்பை தூக்கிக்கொண்டு வந்துவிடுகிறது சென்ஸார்.

நான் சொல்லியிருக்கும் கதையை இங்கு நடக்கவில்லையென்றோ, அவை சமூக தளங்களில் வலம் வரவில்லையென்றோ சென்ஸார் அதிகாரிகளால் மறுக்கமுடியவில்லை. ஆனால் எந்த சான்றிதழும் தராமல் மறுக்க மட்டும் முடிந்திருக்கிறது.

இன்ன இன்னதான் படமாக்கப்பட வேண்டும் என்ற வழிகாட்டி முறையாவது சென்ஸார் போர்டால் முன்னாடியே தரப்பட்டிருந்தால் அப்படிப்பட்ட காட்சிகளையோ வசனங்களையோ படமாக்குவதைத் தவிர்க்கலாம். ஆனால் அப்படியொன்று இங்கு இல்லையே.

எடுத்த படத்தையே பார்க்க ஒருமாதம் இழுத்தடிக்கும் இவர்களிடம் ஸ்கிரிப்ட் கொடுத்து படிக்கச் சொல்லி ஓகே வாங்கி படம் பண்ணமுடியுமா? எடுத்த பின் நம் கருத்துச் சுதந்திரம் சிக்கி சின்னா பின்னமாகி துண்டு துக்கடாவாகி வெளிவருகிறது. இப்போது என் படத்திற்கு சென்ஸார் ‘யு/ஏ’ அல்லது ‘ஏ’ சான்றிதழாவது தாங்க என்று வாதாடி, அழுதும் கூட கேட்டுப் பார்த்துவிட்டேன். எந்த சான்றிதழும் தரவில்லை. ரிவைஸிங் கமிட்டிக்கு போங்க என்று சொல்லிவிட்டார்கள்.

பெண்களுக்கான, சிறுவர்களுக்கான விழிப்புணர்வு படம் இது.

சிகரெட் பிடிக்காதீர்கள் என்பதை சிகரெட் பிடிப்பது போல் காட்டித்தானே எச்சரிக்கிறார்கள்? அதுபோல சமூக விரோத சம்பவங்களைக் காட்டித்தான் என் படத்தில் எச்சரிக்கை செய்துள்ளேன். அதற்கு ரிவைஸிங் கமிட்டியா?

ஒரு நல்ல படம் இப்படி பாடாய்ப் படணுமா? சமீபத்தில் ‘தரமணி’ படத்திற்கும் இப்படியொரு கொடுமை நடந்திருக்கிறது. படைப்பாளிகளின் கருத்துச் சுதந்திரம் இந்த சினிமாவில் மட்டும் இவ்வளவு கடுமையாக தாக்கப்படுகிறது. இதற்கு வழிகாட்டும் முறையையாவது உருவாக்கித் தாருங்கள்.” என மிகுந்த மன வருத்தத்துடன் குறிப்பிட்டார்.

படத்தின் ஒளிப்பதிவை பிஜி முத்தையா கையாள, இசையை ‘மாலைப்பொழுதின் மயக்கத்திலே’, ‘உறுமீன்’ படத்தின் இசையமைப்பாளர் அச்சு மேற்கொள்கிறார், எடிட்டிங்கை ஷான் லோகேஷ் கவனிக்க, பாடல்களை பா.விஜய், மீனாட்சி சுந்தரம் எழுத, கலையை ரெம்போன் பால்ராஜ் (பாபநாசம், தனி ஒருவன்) செய்ய, சண்டைப் பயிற்சி செய்துள்ளார் விமல்.