காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பை நடைமுறைப்படுத்த புதிய திட்டத்தை வகுக்கும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதற்காக 6 வாரம் கெடு விதித்திருந்தது. எனவே, நடுவர் மன்ற தீர்ப்பில் உள்ளபடி காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரங்களுக்குள் மத்திய அரசு அமைக்க வேண்டும். ஆனால், மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்த விஷயத்தில் எந்த முடிவையும் எடுக்காமல் தொடர்ந்து மெளனம் காத்த மத்திய அரசு கடைசி நேரத்தில் தீர்ப்பில் உள்ள ஸ்கீம் (திட்டம்) குறித்து விளக்கம் கேட்க முடிவு செய்தது. தீர்ப்பில் உள்ள ஸ்கீம் என்றால் காவிரி மேலாண்மை வாரியமா? அல்லது குழுவா? என்பது குறித்து தெளிவான விளக்கம் அளிக்கக் கோரி இன்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், ‘காவிரி தீர்ப்பில் உள்ள ஸ்கீம் என்ற வார்த்தைக்கு காவிரி மேலாண்மை வாரியம் என தமிழக அரசும், புதுவை அரசும் விளக்கம் அளிக்கின்றன. வாரியம் இல்லை என கர்நாடகம் மற்றும் கேரள அரசுகள் கூறுகின்றன. எனவே இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும். மேலும் கர்நாடக மாநிலத்தில் தேர்தல் நடைபெற உள்ளதால் காவிரி தீர்ப்பை அமல்படுத்த 3 மாதம் காலம் அவகாசம் வழங்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசு சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.