full screen background image
Search
Friday 22 November 2024
  • :
  • :
Latest Update

ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தின் இசை வெளியீடு

ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தின் இசை வெளியீடு

*’ஆஸ்கார் அற்புதன்’ எம். எம். கீரவாணி இசையில் உருவான ‘சந்திரமுகி 2’ பாடல்கள் வெளியீடு*

*ராகவா லாரன்ஸ் அறக்கட்டளைக்கு ஒரு கோடி ரூபாய் நன்கொடை கொடுத்த ‘லைக்கா’ சுபாஷ்கரன்*

*சந்திரமுகி 2 இசை வெளியீட்டு விழாவில் வியக்க வைத்த லைக்கா சுபாஷ்கரன்*

*லைக்காவின் ‘சந்திரமுகி 2’ படத்தின் இசை வெளியீடு*

லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில் முன்னணி நட்சத்திர நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் தயாராகி வரும் ‘சந்திரமுகி 2’ எனும் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்ட லைக்கா சுபாஷ்கரன் ராகவா லாரன்ஸ் ராகவா லாரன்ஸின் அறக்கட்டளைக்கு ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கினார்.

இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் 65 ஆவது படமாக தயாராகி வரும் திரைப்படம் ‘சந்திரமுகி 2’ இதில் ராகவா லாரன்ஸ், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், ‘வைகைப்புயல்’ வடிவேலு, மகிமா நம்பியார், லட்சுமிமேனன், சிருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி மரியா, சுரேஷ் மேனன், சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருதினை வென்ற இசையமைப்பாளர் எம் எம் கீரவாணி இசையமைத்திருக்கிறார் தோட்டா தரணி கலை இயக்கத்தை கவனிக்க படத்தொகுப்பு பணிகளை ஆண்டனி மேற்கொண்டிருக்கிறார். ஆக்சன் காமெடி ஹாரர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லைக்கா புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது. ஜி.கே.எம் தமிழ் குமரன் தலைமை பொறுப்பு வகிக்க, இப்படத்தின் வெளியீட்டுப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 15ம் தேதியன்று வெளியாகவிருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை புறநகரில் அமைந்திருக்கும் தனியார் பொறியியல் கல்லூரியின் கலையரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவில் பட குழுவினருடன் தயாரிப்பாளர் லைக்கா சுபாஷ்கரன், திருமதி பிரேமா சுபாஷ்கரன், சுபாஷ்கரனின் தாயார் ஞானாம்பிகை ஆகியோரும் கலந்து கொண்டனர். பாடல்கள், நடனம் என கோலாகலமாக இவ்விழா நடைபெற்றது.

பாடலாசிரியர் மதன் கார்க்கி பேசுகையில், ” இப்படத்தின் பாடல்களை உருவாக்குவதற்காக மைசூரில் இசையமைப்பாளர் கீரவாணியுடன் தங்கினேன். ஒவ்வொரு பாடல் உருவான விதமும் சுவராசியமாகவும், மறக்க இயலாததாகவும் இருந்தது. அவருடைய அறைக்குச் சென்று கம்போசிங் தொடங்கலாமா? என கேட்டபோது, முதலில் என்னுடன் செஸ் விளையாடுங்கள் என்றார். இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு, அவருடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அதன் பிறகு பாடல்களை குறுகிய கால அவகாசத்தில் உருவாக்கினார். அவருடைய மெல்லிசை பாடல்களுக்கு நான் மிகப்பெரிய ரசிகன்.

அவர் என்னிடமும், இயக்குநர் வாசு சாரிடமும் ஒரு விசயத்தை தெளிவுப்படுத்தினார். சந்திரமுகி 2 படத்தின் தமிழ் பதிப்பிற்கு சைதன்ய பிரசாத்தும், தெலுங்கு பதிப்பிற்கு மதன் கார்க்கியும் பாடல்கள் எழுதட்டும் என்றார். தெலுங்கு பதிப்பிற்கான தமிழ் பாடல்களை நான் எழுதினேன். தமிழ் பதிப்பிற்கான தெலுங்கு பாடல்களை சைதன்ய பிரசாத் எழுதினார். இது எனக்கு மிகப்பெரும் மகிழ்ச்சியாக இருந்தது. பாடலாசிரியர் சைதன்ய பிரசாத்துடன் இணைந்து நான் பல படங்களில் பணியாற்றி இருக்கிறேன்.

இயக்குநர் பி. வாசுவை மனதார பாராட்டுகிறேன். ஏனெனில் சந்திரமுகி படத்தின் முதல் பாகத்திற்கும், இரண்டாம் பாகத்திற்கும் வடிவேலுவைத் தவிர வேறு எந்த தொடர்பும் இல்லை. ஆனால் மிகவும் புத்திசாலித்தனமாக கதையையும், திரைக்கதையும் அமைத்து சந்திரமுகி 2 வை உருவாக்கி இருக்கிறார்.

கதையோட்டத்தின் சூழலுக்கு ஏற்ற வகையில் பாடல்கள் வெளியாவதில்லை என ஏராளமானவர்கள் ஆதங்கப்படுகிறார்கள். இந்தத் திரைப்படத்தில் எனக்கு அமைந்த ஒவ்வொரு பாடல்களும் அருமையான மெலோடி . அழகான சூழல். ஐந்து பாடல்களை எழுதி இருக்கிறேன். அனைத்துப் பாடல்களும் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என உறுதியாக நம்புகிறேன்” என்றார்.

நடிகை மகிமா நம்பியார் பேசுகையில், ” சந்தோஷமாக உணர்கிறேன். இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்ததற்காக இயக்குநர் பி. வாசுவிற்கும், லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளரான சுபாஷ்கரனுக்கும், மாஸ்டர் ராகவா லாரன்சுக்கும் நன்றி. படப்பிடிப்பு தளத்தில் வடிவேலு அண்ணா உள்ளிட்ட அனைவருடனும் பணியாற்றியது மறக்க இயலாத அனுபவம். ராகவா லாரன்ஸை பற்றி புகழ்ந்து பேசுவது அவருக்கு பிடிக்காது. இருந்தாலும் சிலவற்றை சொல்ல வேண்டும். அவர் அடிக்கடி சொல்லும் வார்த்தை ‘சர்வீஸ் இஸ் காட்’. சர்வீஸ் செய்பவர்கள் இறைவன் தானே..! நான் நிஜ வாழ்க்கையில் சந்தித்த ஹீரோ.. கடவுள்.. மாஸ்டர் ராகவா லாரன்ஸ் சார் தான். இப்போது நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். ” என்றார்.

நடிகை சுபிக்ஷா கிருஷ்ணன் பேசுகையில்,” சந்திரமுகி படத்தின் முதல் பாகத்திற்கு நான் மிகப்பெரிய ரசிகை. நிறைய நேர்காணல்களில் உங்களின் கனவு கதாபாத்திரம் என்ன? என கேட்கும் போது, சந்திரமுகியாக நடிக்க வேண்டும் என என் விருப்பத்தை தெரிவித்திருக்கிறேன். மனதில் எதைப்பற்றி உண்மையாக நினைத்துக்கொண்டிருக்கிறோமோ..! அது ஒரு காலத்தில் நடந்து விடும் என்பார்கள். அதனால் தான் நான் இந்த மேடையில் உங்கள் முன் நின்று கொண்டிருக்கிறேன்.

திரையுலகில் முதுகில் தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்துபவர்கள் குறைவு. தட்டிப் பறிப்பவர்கள் தான் அதிகம். உற்சாகப்படுத்துபவர்களில்.. மிகவும் குறைவானவர்களில் மாஸ்டர் ராகவா லாரன்சும் ஒருவர். படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றும்போது ஃபிட்னஸ் குறித்தும்… மோட்டிவேஷனல் குறித்தும்… கரியர் குறித்தும்…நடனம் குறித்தும்.. ஏராளமான பயனுள்ள தகவலை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

‘ஸ்வகதாஞ்சலி..’ பாடலில் கங்கணா மேடத்தின் அர்ப்பணிப்புடன் கூடிய ஈடுபாட்டை பார்த்து வியந்தேன். உங்களிடமிருந்து நிறைய விசயங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என தோன்றியது. அவருடன் சக நடிகையாக பணியாற்றியதை பெருமிதமாக கருதுகிறேன். நிறைய தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

திரை உலகில் 45 ஆண்டுகளை நிறைவு செய்த ராதிகாம்மாவுடன் இணைந்து பணியாற்றியதும் மறக்க இயலாத அனுபவம்.

வடிவேலுவை சினிமாவில் பார்த்திருக்கிறேன். டிவியில் பார்த்திருக்கிறேன். ஆனால் ஒருபோதும் அவருடன் இணைந்து பணியாற்றுவேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை. உங்களுடைய காமெடியை நேரலையாக உடனிருந்து பார்க்கும் போது கிடைத்த மகிழ்ச்சியான அனுபவத்தை வார்த்தைகளால் விவரிக்க இயலாது.

அனைவரிடம் இணைந்து பணியாற்றியது என் கனவு நனவானது போல் உணர்கிறேன். அனைவருக்கும் நன்றி” என்றார்.

நடிகை சிருஷ்டி டாங்கே பேசுகையில், ” சந்திரமுகி படத்தின் முதல் பாகத்திற்கு மக்கள் கொடுத்த ஆதரவும், வரவேற்பும்.. சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்திற்கும் அளிக்க வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்.
இயக்குநர் பி. வாசு சார் என்னை பார்த்தவுடன், ஓகே நீ பிரியா கதாபாத்திரத்தில் நடி என்றார். அப்போதிலிருந்து ஆறு மாதம் வரை தொடர்ந்த இந்த சந்திரமுகியின் பயணம் என் வாழ்க்கையில் எப்போது மறக்க இயலாத வகையில் அமைந்தது. இந்த தருணத்தை நான் இப்போதும் கொண்டாடுவேன்.
வடிவேலு சாரை படப்பிடிப்பு தளத்தில் முதன்முதலாக பார்த்தபோது அவரிடம் சென்று நான் உங்களுடைய மிகப் பெரிய ரசிகை என்றேன். நான் சென்னைக்கு வந்து தமிழ் கற்றுக்கொண்டது அவருடைய படங்களை வீடியோவில் பார்த்து தான்.

கங்கணா ரனாவத் என்னுடைய ரோல் மாடல். நீங்கள் நடித்திருக்கும் படத்தில் நானும் நடித்திருப்பதை அதிர்ஷ்டமாகவும், பாக்கியமாகவும் கருதுகிறேன்.” என்றார்.

கலை இயக்குநர் தோட்டா தரணி பேசுகையில், ” நான் நிறைய படங்களில் பணியாற்றிருக்கிறேன். அதனால் இது ஒன்றும் புதிதல்ல. வாசு சாரை எனக்கு நீண்ட நாட்களாக தெரியும். அவர்தான் இந்த படைப்புக்கு கேப்டன். அவர் சொல்லும் விசயங்களை தான் நாங்கள் உருவாக்கித் தருகிறோம். அதை நான் மட்டும் தனித்து செய்வதில்லை. என்னுடைய மகள், என்னுடைய சகோதரர் மற்றும் என் உதவியாளர்கள் என ஏராளமான திறமையானவர்கள் எங்களுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார்கள். ” என்றார்.

ஒளிப்பதிவாளர் ஆர் டி ராஜசேகர் பேசுகையில், ” பி வாசு சாருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என 20 ஆண்டுகளுக்கு முன் அவருடைய அலுவலகத்துக்கு சென்று அவரை சந்தித்து வாய்ப்பு கேட்டிருக்கிறேன். அப்போது உறுதியாக இணைந்து பணியாற்றுவோம் என்றார். ஆனால் அவருடன் இணைந்து பணியாற்றுவதற்கு 20 ஆண்டுகளாகியிருக்கிறது. இந்த வாய்ப்பை வழங்கியதற்காக இயக்குநர் வாசுவிற்கு நன்றி.

அவருடன் பணியாற்றும் போது படப்பிடிப்பு தளத்தில் எப்போதாவது ஒருமுறையாவது காட்சிக்காக எழுதப்பட்டிருக்கும் பேப்பரை பார்ப்பார் என எதிர்பார்த்தேன். ஆனால் ஒரு முறை கூட பேப்பரை பார்க்கவில்லை. எப்போதாவது ஒரு சந்தேகம் கேட்டால்…. உடனடியாக அது குறித்த விளக்கத்தை விரிவாக சொல்வார். அவர் இப்படத்தின் கதையை எவ்வளவு நாள் எழுதி இருப்பார்… எவ்வளவு நாள் யோசித்திருப்பார்.. என்பதெல்லாம் எனக்கு தெரியாது. எப்போது கேட்டாலும் பேப்பரை பார்க்காமல் தன் நினைவில் இருந்து எல்லா விசயத்தையும் துல்லியமாக சொல்வார்.

அதன் பிறகு படத்தின் நாயகனான ராகவா மாஸ்டரை சொல்ல வேண்டும். ஒரு முறை அவரிடம் நாளைக்கு குதிரையேற்றக் காட்சி இருக்கிறது. நினைவிருக்கிறதா? என்றேன். நினைவிருக்கிறது என்றார். ஏதேனும் பயிற்சியை எடுத்திருக்கிறீர்களா? என கேட்டேன். ஓரளவிற்கு என சொல்லிவிட்டார். ஆனால் மூன்று கேமராவை வைத்து அந்த காட்சியை படமாக்கும் போது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார். குதிரையேற்ற காட்சியில் நேர்த்தியாக நடித்தார். நடனத்தைப் போல் குதிரையேற்ற சவாரியையும் இயல்பாக கற்றுக்கொண்டு நடித்தவர் மாஸ்டர் ராகவா. இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் அழகாக நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் மிகச் சிறப்பாக வந்திருக்கிறது.

‘அழகன்’ படத்திலிருந்து இசையமைப்பாளர் கீரவாணியின் ரசிகன் நான். உங்களுடைய பாடலை படமாக்க கிடைத்த வாய்ப்பிற்கு நன்றி. ” என்றார்.

இசையமைப்பாளர் எம். எம். கீரவாணி பேசுகையில், ” இயக்குநர் பி. வாசுவிற்கும், லைக்கா சுபாஷ்கரனுக்கும் முதலில் நன்றி. மீண்டும் என்னை தமிழ்நாட்டிற்கு வரவழைத்து, தமிழ் படத்திற்கு இசையமைக்க வாய்ப்பு அளித்ததற்காக நன்றி. சந்திரமுகி படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய ஹிட். அதற்கு என்னுடைய நண்பர் வித்யாசாகர் இசையமைத்திருந்தார்.

இந்தப் படத்தில் பணியாற்றிய பிறகுதான் இயக்குநர் வாசு சார் மிக நல்ல பாடகர் என்பது தெரிய வந்தது. மிகவும் தாமதமாக தெரிந்து கொண்டேன். அதனால் அடுத்த படத்தில் உங்களை பாட வைக்க திட்டமிட்டிருக்கிறேன். என்னுடைய இசையில் நீங்கள் பாட வேண்டும். என்னுடைய அடுத்த பின்னணி பாடகர் நீங்கள் தான்.

இந்த திரைப்படத்தை முதல் முறை அனைவருக்காகவும் பார்ப்பீர்கள். இரண்டாவது மற்றும் மூன்றாவது முறை.. படத்தில் நடித்திருக்கும் வடிவேலுவிற்காகவே… வடிவேலுவின் நடிப்பிற்காகவே அனைவரும் பார்ப்பார்கள்.

சந்திரமுகி படத்தின் ஐந்து பாடல்கள் இடம்பெற்றிருக்கிறது. இரண்டு பாடல்களை உருவாக்கிய பிறகு, இயக்குநர் வாசுவிடம் சந்திரமுகியாக நடிப்பது யார்? என்று கேட்டபோது, இன்னும் உறுதியாகத் தெரியவில்லை என்றார். இறுதியாக சந்திரமுகியாக நடிக்க கங்கனா ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார் என்று நீங்கள் சொன்னவுடன் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.

இந்தத் திரைப்படம் செப்டம்பர் 15 ஆம் தேதி அன்று வெளியாக வேண்டும் என தயாரிப்பு நிறுவனம் உறுதியாக தெரிவித்தது. பொதுவாக பின்னணி இசையை ஒரே ஒரு தொழில்நுட்பக் கலைஞரை மட்டும் பிரதானமாக வைத்து பணியாற்றுவோம். ஆனால் இந்த படத்திற்காக ஏழு திறமையான புரோகிராமர்களை வரவழைத்து இப்படத்தின் பின்னணி இசையை அமைத்தோம். தரம் குறையாமலும் விரைவாகவும் உருவாக்கி இருக்கும் பின்னணி இசை எப்படி இருக்கிறது? என்று ரசிகர்களாகிய நீங்கள் தான் படத்தை பார்த்துவிட்டு சொல்ல வேண்டும்.

சந்திரமுகி முதல் பாகத்தில் பிரபலமான வசனம் ஒன்று உண்டு ‘லக லக லக லக லக’. இந்த வசனத்தை பேசியவர் சூப்பர் ஸ்டார் ரஜினி சார். அவர் ஒரு முறை சொன்னால் நூறு முறை சொன்னது போல்… ஆனால் சந்திரமுகி 2 படத்தில் நீங்கள் கேட்கப் போவது ‘லைக்கா லைக்கா லைக்கா லைக்கா லைக்கா.” என்றார்.

‘வைகைப்புயல்’ வடிவேல் பேசுகையில், ” ரசிகர்களாகிய உங்களையெல்லாம் பார்க்கும் போது மனதில் இருக்கும் வேதனைகளும், கஷ்டங்களும் பஞ்சாகப் பறந்து போகும். உங்களைப் பார்ப்பது தான் எங்களுக்கு சந்தோஷம். உங்களை சந்தோஷப்படுத்துவது தான் எங்களுக்கு சந்தோஷம். ரசிகர்களாகிய நீங்கள் இல்லை என்றால் கலைஞர்களாகிய நாங்கள் இல்லை.

இதற்கு முதல் படம் மாமன்னன் மிகப்பெரிய வெற்றி படம். அதன் பிறகு அதைவிட பெரிய வெற்றி படம் சந்திரமுகி 2. இந்த ரெண்டு படத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. அந்தப் படத்துல பார்த்த வடிவேலு இந்த படத்தில் இருக்க மாட்டாரு. இந்த படத்துல பார்க்க போற வடிவேலு வேற..

முதல்ல ஒரு விசயத்தை சொல்லிடுறேன். கொஞ்ச நாளைக்கு முன்னாடி என்ன வரவிடாம கதவை பூட்டு போட்டு சாவிய தூக்கிட்டு போயிட்டாங்க. உனக்கு சினிமாவில் நடிக்கிறதுக்கு தகுதியே இல்லன்னாங்க. அதுக்கு என்ன காரணம்கிறது எல்லாருக்கும் தெரியும். அந்தக் கதவை உடைத்து புது சாவிய கொடுத்து வாழ்க்கையை தொடங்கி வைத்தவர் எங்க அண்ணன் சுபாஷ்கரன். நான் குலதெய்வமா கும்பிடுவது அய்யனாரு, கருப்பன். அந்த ரெண்டு தெய்வத்துக்கு பிறகு தெய்வமா நான் அண்ணன் சுபாஷ்காரன தான் வணங்குறேன். யாரு என்ன சொன்னாலும்.. என்ன மறுபடியும் சினிமால நடிக்க வைத்தவர் அண்ணன் சுபாஷ்கரன் தான். இதற்கு அன்புத்தம்பி தமிழ் குமரன் ரொம்ப உதவியா இருந்தாரு.

மாமன்னன் படத்த முடித்த பிறகு பெரிய டைரக்டரரான பி. வாசு சார் என்னை கூப்பிட்டார். அவர் படத்துல நிறைய கேரக்டர்ல நடிச்சிருக்கேன். அவருக்கு இப்போ 70 வயசு ஆகுது. வயசு தான் 70 ஆவது தவிர 35 வயசு மாதிரி இருக்காரு.

என்னை ஒரு ஹோட்டலுக்கு வரவழைச்சி, சந்திரமுகி 2 படத்தின் கதையை மூன்று மணி நேரம் சொன்னார். பொதுவா வாசு சார் யாரிடமும் கதை சொல்ல மாட்டார். ஒன்லி லைனை மட்டும்தான் சொல்வார்.

இதுவரைக்கும் அவர் அப்படி என்னிடம் கதை சொன்னதேயில்லை. அந்தக் கதையைக் கேட்டு அப்படி ஆடிப் போய்விட்டேன்.

அப்புறம் இதனை நான் தமிழ் குமரனிடம் சொல்ல.. அவர் சுபாஷ்கரனிடம் சொல்ல.. சுபாஷ்கரன் இதற்காகவே லண்டனிலிருந்து சென்னைக்கு வந்து கதையை கேட்டு ஓகே சொல்லி தொடங்கப்பட்ட படம் தான் சந்திரமுகி 2.

சந்திரமுகி முதல் பாகத்தில் வந்த முருகேசனாகத்தான் இந்த இரண்டாம் பாகத்திலும் நடித்திருக்கிறேன். இந்த முருகேசன் என்ன பாடு படுகிறார் என்பதனை படத்தில் பார்த்து ரசிக்கலாம். குரூப்பு மாறிடுச்சு.‌

இந்தப் படத்தில் நடித்ததற்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அனைவரும் கூட்டாக இணைந்து கஷ்டப்பட்டு உழைச்சிருக்காங்க. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி படம். அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டும். வாழ்த்துக்கள். இந்தப் படம் வெளியான பிறகு படத்தைப் பற்றிய சுவாரசியமான பல விசயங்களை வெற்றி விழாவில் சொல்றேன் ” என்றார்.

நடிகர் சக்திவேல் பேசுகையில், ” இந்தப் படத்தில் நான் பணியாற்றவில்லை. சந்திரமுகியின் ஆட்டத்தையே நம்மால் தாங்க முடியாது. தற்போது அவருடன் காஞ்சனாவும் கூட சேர்ந்திருக்கிறார். சந்திரமுகியும், காஞ்சனாவும் சேர்ந்தால் என்ன ஆகும்..? இதுதான் இந்தப் படத்தின் மீது எனக்கான மிகப் பெரிய நம்பிக்கை.

அப்பாவிடம் யாராவது சின்ன கோடு போட்டால் அவர் பெரிய ரோடே போடுவார். அப்படி போட்ட ரோடு தான் சந்திரமுகி. இது இரண்டாவது ரோடு. ரெண்டு ரோடுக்கும் இடையில் ஒரு பிரிட்ஜ் இருக்கிறது. அது நம் வடிவேலு அண்ணன். அடுத்த பாகத்திற்கும் அவர்தான் பிரிட்ஜ். சந்திரமுகி படத்தின் முதல் பாகம் எப்படி இயக்குநர் பி. வாசு படமாகவும்.. ரஜினி சார் படமாகவும்.. ஜோ மேடத்தின் படமாகவும்… வடிவேலின் படமாகவும்.. இருந்ததோ, அதேபோல் சந்திரமுகி 2 அப்பாவின் படமாகவும்.. மாஸ்டர் ராகவாவின் படமாகவும்.. கங்கனாவின் படமாகவும்.. அண்ணன் வடிவேலுவின் படமாகவும் இருக்கும்.

தலைவருக்குப் பிறகு தர்மத்தின் தலைவன் என்பது மாஸ்டருக்கு மட்டும் தான் பொருத்தமாக இருக்கும். தர்மத்தின் தலைவன் படத்தை நீங்கள் மீண்டும் நடிக்க வேண்டும். அதில் உங்கள் தம்பியாக நான் நடிக்க வேண்டும் என்ற எனது ஆசையை இங்கு தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தில் பணியாற்றிய நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.” என்றார்.

இயக்குநர் பி. வாசு பேசுகையில், ” நான் எப்போதும் மேலே பார்த்துக் கொண்டு நடக்க மாட்டேன். பின்னாடி பார்த்துக் கொண்டும் நடக்க மாட்டேன். மேலே பார்த்தால்.. இன்னும் இவ்வளவு தூரம் செல்ல வேண்டுமோ…! என்ற பயம் உண்டாகும். பின்னாடி பார்த்தால்… இவ்வளவு தூரம் ஏறி வந்திருக்கிறோம் என்ற திமிர் வந்துவிடும். அதனால் நான் எப்போதும் தலை குனிந்து.. தலை வணங்கி.. கீழே பார்த்துக்கொண்டு நடந்து கொண்டே இருப்பேன். எங்கே சென்று சேர வேண்டுமோ.. அங்கே சென்று சேர்வோம்.

இன்றைக்கு உள்ள திறமையான கலைஞர்கள் படைப்பாளிகள் ஆகியோரே காணும் போது இவர்களுடன் எப்படி போராட போகிறோம் என்றுதான் தோன்றுகிறது.

இந்த மாலை வேலையை இனிமையான தருணமாக மாற்றிய அனைவருக்கும் என்னுடைய நன்றி. லைக்கா என்றாலே பிரம்மாண்டம் தான் . இந்த பிரம்மாண்டத்திற்கு சிறிய உதாரணம் தான் இந்த இசை வெளியீட்டு விழா.

சுபாஷ்கரன் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த மிக பெரும் பொக்கிஷம். ஏனெனில் அனைத்து இயக்குநர்களையும், அவர்களின் கனவுகளையும் அவர் பிரம்மாண்டமாக சாத்தியப்படுத்துபவர். நல்ல மனதுடையவர்.

நான் எப்போதுமே ஓம் என்று எழுதி தான் எந்த காரியத்தையும் தொடங்குவேன். ஓம் என்ற எழுத்தில் வரும் புள்ளிதான் லைக்கா சிஇஓ தமிழ் குமரன். அந்த புள்ளி இல்லையென்றால் ஓம் இல்லை. அந்த புள்ளிதான் அனைத்தையும் அழகுபடுத்தி காட்டும். அதேபோல் தமிழ் குமரன் பலருக்கு வாய்ப்பளித்திருக்கிறார்.

ரஜினி சாரிடம் சந்திரமுகி 2 படத்தின் கதையை சொன்னேன். அவர் ராகவா லாரன்ஸை உடன்பிறந்த தம்பியாகவே பார்ப்பார். அனைத்தையும் கேட்ட பிறகு, ‘நான் வணங்கும் என் குருவை வேண்டிக்கொள்கிறேன். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும்’ என வாழ்த்தினார்.

அவரிடம், ‘ஒன்று இல்லை என்றால், இரண்டு இல்லை. அந்த ஒன்று நீங்கள் தான். தற்போது இரண்டு தயாராகி இருக்கிறது’ என்றேன். இப்படித்தான் இந்த படம் தொடங்கியது.

தமிழ் குமரனிடம் இப்படத்தின் இரண்டு வரி கதையைத்தான் சொன்னேன். உடனே சரி படத்தின் பணிகளை தொடங்கலாம் என்றார். அதன் பிறகு கதையை உருவாக்கி, வடிவேலுவிடம் சொன்னேன். நான் இதுவரை அவரிடம் முழு கதையையும் சொன்னதில்லை. ஏனெனில் முதல் பாகத்திற்கும் இரண்டாம் பாகத்திற்கும் இடையே உள்ள ஒரே தொடர்பு வடிவேலு மட்டும் தான். சந்திரமுகி படத்தின் வெற்றிக்கு வடிவேலுவும் ஒரு காரணம் என்பதால், அவர் சந்திரமுகி 2 படத்திலும் இருக்க வேண்டும் என விரும்பினேன்.

அவர் பிரச்சனையில் சிக்கிக் கொண்டிருக்கும் தருணத்திலேயே நான் இதில் நடிக்குமாறு கேட்டுக் கொண்டிருந்தேன். ஏனெனில் அவரைப் போன்ற திறமையான கலைஞர்கள் எல்லாம் வீட்டில் சும்மா உட்கார வைக்க கூடாது. அவர் வீட்டில் சும்மா உட்கார்ந்து இருந்தால்.. மக்களுக்கு நோய் வந்து விடும். அவர் மக்களை சிரிக்க வைத்தவர். அவரைப் பார்த்து நாம் சிரித்து சிரித்து நோயில்லாமல் வாழ்கிறோம். அந்த வகையில் பார்த்தால் அவர் ஒரு டாக்டர். கொரோனா காலகட்டத்தின் போது எத்தனை குடும்பங்களை அவர் சிரிக்க வைத்திருப்பார். அவரைப் போன்ற நடிகர்களை நமக்கு கிடைத்திருப்பது நாம் செய்த பெரும் பாக்கியம்.

ராதிகா என்னுடைய இயக்கத்தில் முதன்முறையாக இந்த படத்தில் நடித்திருக்கிறார். அந்த கதாபாத்திரத்திற்கு அவர் தான் பொருத்தமாக இருப்பார். இந்தப் படத்தில் இருக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் ஒரு சின்ன கதை இருக்கும். அனைவருக்கும் நடிப்பதற்கு வாய்ப்பும் கொடுத்திருக்கிறேன்.

நடிகர் விக்னேஷ், நடிகர் ரவி மரியா போன்றவர்களுக்கு எல்லாம் நான் வாய்ப்பளித்திருக்கிறேன். இப்படத்தின் மூலமாக அவர்கள் தொடவிருக்கும் உயரம் இன்னும் அதிகம்.

அனைத்து கதாபாத்திரங்களுக்கும் பொருத்தமான நடிகரை தேர்வு செய்தாகிவிட்டது சந்திரமுகியை தவிர. சந்திரமுகி நடிக்கவிருப்பது யார்?என்ற கேள்வி எங்களுக்குள் தொடர்ந்து கொண்டே இருந்தது. இந்த நேரத்தில் கங்கனாவை வேறொரு விசயத்திற்காக சந்திக்க சென்றேன். அப்போது சந்திரமுகி குறித்து கேட்டார். பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று பதிலளித்தேன். சந்திரமுகியாக நடிப்பது யார்? என கேட்டார். இன்னும் யாரையும் உறுதிப்படுத்தவில்லை தேடிக் கொண்டிருக்கிறோம் என்றேன். ஆச்சரியமடைந்த அவர், ஏன் நான் அந்த பாத்திரத்தில் பொருத்தமாக இருக்க மாட்டேனா? நான் ஏன் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க கூடாது? என கேட்டார். அவர் இதுவரை யாரிடமும் சென்று வாய்ப்பு கேட்டதே இல்லை. அதைவிட சிறப்பம்சம் என்னவென்றால் அவர் முதல் நாள் படப்பிடிப்புக்கு வரும்போது அவர் என்ன கெட்டப்பில் நடிக்கப் போகிறார் என்று அவருக்குத் தெரியாது. இதன் பிறகு தான் அவருக்கு நான் கதையை முழுவதுமாகச் சொன்னேன்.

இவை எல்லாத்தையும் விட எனக்கு கிடைத்த சிறந்த வேட்டையன் ராகவா லாரன்ஸ். இந்தப் படத்தில் அவரை இரண்டு கோணங்களில் பார்க்கலாம். ஒன்று.. குடும்பம், பாசம், சிரிப்பு, சந்தோஷம் என்றிருக்கும். வேட்டையன் என்றால் வேட்டையன் மட்டும் இருக்க மாட்டான். அவனுள் இன்னொருத்தனும் இருக்கிறான். அது யார்? என்பது நீங்கள் படம் பார்க்கும்போது தெரியும்.

மாஸ்டர், ராஜா வேஷம் போட்டு நடிக்கும் போது அவர் பேசும் தமிழ் எப்படி இருக்கும்? என்பது எனக்கு சற்று சந்தேகமாக இருந்தது. ஏனெனில் அவர் ஜாலியாக.. ஸ்லாங்குடன் தமிழ் பேசுவார். “அவளை பார்த்ததற்கே… அவள் மீது உனக்கு ஆசை வந்துவிட்டது என்றால்.. அவளைத் தொட்டு.. என் விரல் பட்டு.. அவளை அணைத்து.. தூக்கி வந்த எனக்கு.. எப்படி இருக்கும்..? என்ற வசனத்தை அவர் எப்படி தமிழில் பேசுவார் என்று தயங்கினேன். ஆனால் அவர் அனைவரும் ஆச்சரியப்படும்படி பேசியிருக்கிறார். அதனை நீங்கள் படம் பார்க்கும்போது தெரியும்.

நான் எப்போதும் படத்தை தொடங்கும் போது கடவுளிடம் வேண்டுவேன். படம் வெளியாகும் போது திரையரங்கத்திற்கு சென்று மக்களான தெய்வங்களை வணங்குவேன்‌.

ஆஸ்கார் விருது வாங்கிய பிறகு அமைதியாக இரண்டாவது ரகுமானாக உட்கார்ந்திருக்கும் என்னுடைய இசையமைப்பாளர் கீரவாணிக்கும் வாழ்த்துக்கள்.

சந்திராயன் 3 விண்ணில் ஏவிய இந்திய விஞ்ஞானிகளுக்கு சந்திரமுகி 2 பட குழுவின் சார்பாக பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.”என்றார்.

நடிகை கங்கனா ரனாவத் பேசுகையில், ” அருமையான மாலை வேளை. பிரம்மாண்டமாகவும் அழகாகவும் நடைபெறும் இந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு, வண்ணமயமான அனுபவங்களை வழங்கியதற்காக அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னுடைய வாழ்க்கையில் நான் இதுவரை யாரிடமும் எந்த கதாபாத்திரத்தையும் நடிப்பதற்காக விரும்பி கேட்டதில்லை. இயக்குநரிடம் சந்திரமுகியாக நடிக்க நான் பொருத்தமாக இருப்பேனா? என கேட்டேன். சிறிது நேர யோசிப்பிற்குப் பிறகு அவர் சரி என்று ஒப்புக்கொண்டார்.

படப்பிடிப்பு தளத்தில் சந்திரமுகி எப்படி நடப்பார்.. என்பது குறித்தும் அவர் துல்லியமாக நடித்துக் காட்டினார். அதைப் பார்த்து நடந்தேன்.

இந்தப் படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ராகவா லாரன்ஸ் என்னை வியப்பில் ஆழ்த்தியவர். திரைப்படத்துறையில் நடன கலைஞராக அறிமுகமாகி, நடன உதவியாளராகவும், நடன இயக்குனராகவும்.. பிறகு நடிகராகவும்.. பிறகு இயக்குநராகவும் கடினமாக உழைத்து முன்னேறியவர். அவர் எப்போதும் கனிவாக நடந்து கொள்ளக் கூடியவர். மென்மையான இதயம் கொண்டவர். படப்பிடிப்பு தளத்தில் முதன்முறையாக சந்தித்தபோது கங்கனா மேடம் என்றார். அதன் பிறகு இரண்டாவது நாள் கங்கனா என்றார். மூன்றாவது நாள் ஹாய் கங்கு என அழைத்தார்.

நான் வடிவேலு சாரின் மிகப்பெரிய ரசிகை. அவருடன் இணைந்து பணியாற்றியது மறக்க இயலாது.

இந்தப் படத்தில் நான் மூன்று பாடலுக்கு நடனமாடியுள்ளேன். இதுவும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது.” என்றார்.

லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தமிழ் குமரன் பேசுகையில், ” ராகவா லாரன்ஸின் அறக்கட்டளைக்காக லைக்கா தயாரிப்பாளர் சுபாஸ்கரன் ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்குகிறார். ” என்றார்.

ராகவா லாரன்ஸ் பேசுகையில், ” மிகவும் சந்தோஷம். என்னுடைய மாணவர்களை அனைத்து மேடைகளிலும் நடனமாட வைக்க வேண்டும் என விரும்புகிறேன். ஆனால் ஒரு சில நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்.. என்னிடம் உங்களுடைய மாணவர்கள் தொடர்ச்சியாக மேடை ஏறி நடனமாடும் வாய்ப்பை அளித்தாலும், ஒரே மாதிரியான நடனங்களைத் தானே ஆடுகிறார்கள் . இது பார்வையாளர்களுக்கு போரடிக்காதா? என கேட்பர். அவர்களிடத்தில் திரிஷா. நயன்தாரா.. நடனம் ஆடினாலும், அவர்களும் ஒரே நடனத்தை தானே ஆடுகிறார்கள். அதை மட்டும் திரும்பத் திரும்ப பார்க்கிறீர்களே.. அதனால் இதையும் திரும்பத் திரும்ப பார்க்கலாமே.! எனச் சொல்வேன்.

நான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் அவர்களுக்கு மேடை ஏறும் வாய்ப்பை வழங்குவதால் அவர்களுடைய குடும்பத்திற்கு வாழ்வாதாரம் கிடைக்கிறது. ஏனெனில் அவர்களுக்கு இந்த நடனத்தை தவிர வேறு எதுவும் தெரியாது. இவர்களுடைய நடனத்தில் கவர்ச்சி இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஒரு வலி இருக்கிறது. இவர்களுடைய ஆட்டத்தில் அழகு இருக்கிறதோ இல்லையோ.. கடவுள் இருக்கிறார். இதனால் இந்த குழுவினருக்கு வாய்ப்பளியுங்கள்.

என்னை நம்பி நிறைய குடும்பங்கள் இருக்கிறது. அதில் சிலரை தான் நீங்கள் இங்கு பார்க்கிறீர்கள்.. இந்தக் குழந்தைகளுக்கு அண்ணனாகவும், அப்பாவாகவும் என்னுடைய கடமையை செய்து கொண்டிருக்கிறேன்.

என்னுடைய மாணவர்களின் நிகழ்ச்சியை பார்த்த பிறகு சிலர் உதவி செய்வார்கள். ஆனால் நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருக்கும் போதே.. அதுவும் ஒரு கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கிய சுபாஷ்கரனுக்கு நன்றி. வாழ்கிறவன் மனிதன். வாழ வைப்பவன் கடவுள் என்று சொல்வார்கள். எங்கள் மாணவர்களை வாழ வைத்த சுபாஸ்கரன் எங்களுக்கு கடவுள்.

என்னுடைய அறக்கட்டளைக்கு யாரும் நிதி உதவி வழங்க வேண்டாம் என்று ஓராண்டிற்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தேன். ஏனெனில் நான் தற்போது நன்றாக சம்பாதித்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு கிடைக்கும் வருவாயில் அறக்கட்டளைக்கு தேவையான நலத்திட்ட பணிகளை செய்து கொண்டிருக்கிறேன். வேண்டாம் என்று சொல்லும் போது.. கடவுள் கொடுப்பார் என்று சொல்வார்கள். அது போல் தற்போது சுபாஷ்கரன் ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கி இருக்கிறார். அவருடைய மனம் பெரியது. இதன் மூலம் நிறைய பேரின் பசி தீர்க்கப்படும்.

இந்த மாணவர்கள் தங்குவதற்கும், நடன பயிற்சி மேற்கொள்வதற்கும் கட்டிடம் ஒன்றை கட்ட வேண்டும் என்று விரும்பினார்கள். நீங்கள் வழங்கும் அந்த நன்கொடையில் இந்த மாணவர்களுக்காக ஒரு இடத்தை வாங்கி, அவர்களுக்கான கட்டிடம் ஒன்றை கட்டி, அதற்கு உங்களின் தாயாரின் பெயரை சூட்டுவோம். இவை அனைத்தும் இன்னும் ஒரு வருடத்தில் நிறைவேறும் என உறுதியளிக்கிறேன்.

சந்திரமுகி படத்தின் கதையை முதலில் தமிழ்குமரன் கேட்டார். அதன் பிறகு தமிழ் குமரன் என்னை தொடர்பு கொண்டு சுபாஸ்கரன் சென்னைக்கு வருகிறார். அவர் ஒரு முறை சந்திக்கலாமா..? என கேட்டார். சரி என்று ஒப்புக்கொண்ட பிறகு, என்னுடைய மனதில் சுபாஷ்கரன் பெரிய தொழிலதிபர். ‘2.0’, ‘இந்தியன் 2’ என பிரம்மாண்டமான பட்ஜெட்டில் படங்களை தயாரித்து வரும் தயாரிப்பாளர்.. என கற்பனையாக ஒரு அணுகுமுறையை எதிர்பார்த்திருந்தேன். அவரை சந்திக்க அவரது அறைக்குள் நுழைந்ததும். அவர் ஆசையுடன் தம்பி என்று சொல்லிக் கொண்டே என்னை ஆரத் தழுவிக்கொண்டார். அவருடைய கட்டிப்பிடித்தலிலேயே அவருடைய அன்பை முழுவதுமாக உணர்ந்தேன். அந்தத் தருணத்தில் அங்கு வருகை தந்த மற்றவரிடம் அதே விருந்தோம்பலும், அன்பையும் செலுத்தினார். அப்போதுதான் எனக்கு ஒரு விசயம் புரிந்தது. அவர் வயது வித்தியாசம் எதுவுமின்றி அனைவரிடமும் அன்பு செலுத்துபவர்.

அப்போதுதான் எனக்கு வள்ளலார் சொன்னது.. பட்டினத்தார் சொன்னது.. நபிகள் நாயகம் சொன்னது.. ஜீசஸ் சொன்னது.. நினைவுக்கு வந்தது. இந்த உலகத்தை கட்டி போட வேண்டும் என்றால், அதனை அன்பால் மட்டும் தான் முடியும். இத்தகைய அன்பை சுபாஷ்கரனிடம் அன்றும் பார்த்தேன். இன்றும் பார்த்தேன். உங்களின் நட்பு கிடைத்தது மிக்க மகிழ்ச்சி. உங்களின் பிரம்மாண்டமான லைக்கா நிறுவனத்தில் நானும் நடித்ததை பாக்கியமாக கருதுகிறேன்.

இசையமைப்பாளர் கீரவாணி, இயக்குநர் வாசு மற்றும் நான், சந்திரமுகி 2 படத்தின் பாடலை கேட்பதற்காக காத்திருந்தோம். நான் அப்போது சந்திரமுகி 2 படத்தின் பாடல்களை வெற்றி பெற்றாக வேண்டும். அந்த வகையில் உழைக்க வேண்டும் என்ற ஆவலுடன் காத்திருக்கிறேன். ஆனால் கம்போசிங் தொடங்கும் முன் இயக்குநர் வாசுவும், இசையப்பாளர் கீரவாணியும் எதை எதையோ பேசிக் கொண்டிருக்கிறார்கள். பழைய எம்ஜிஆர் பாடல்கள் பாடிக் கொண்டிருக்கிறார்கள். டீ சாப்பிடுகிறார்கள். போண்டா சாப்பிடுகிறார்கள். நானும் சந்திரமுகி 2க்கான மெட்டை கேட்க ஆவலாக காத்திருந்தேன்.

சிறிது நேரம் கழித்து அவருக்கு அருகில் இருக்கிற கீபோர்டில் அமர்ந்து கைவிரல்களை அசைத்தார் ஒரு மெட்டு வந்தது. அதனை வாசு சார் கேட்டார். உடனே ஓகே சொன்னார். அதுதான் நீங்கள் கேட்ட குடும்ப பாடல். அவருடைய கம்போசிங் முழுவதும் சுகிசிவம் சொன்ன குட்டிக்கதை போல் இருந்தது. வேலைய விளையாட்டா பண்ணா ஈஸியா இருக்கும் என்கிறத இவங்க மூலம் எனக்குத் தெரிந்தது.

நான் திரைத்துறையில் நடன கலைஞராக பணியாற்றியபோது பி வாசு இயக்குநர். உதவி நடன இயக்குநராக நான் பணியாற்றிய போதும் அவர் இயக்குநர். நான் நடன இயக்குநராக பணியாற்றிய போதும் அவர் இயக்குநர். நான் வில்லனாக நடித்த போதும் அவர் இயக்குநர். அதன் பிறகு நான் இயக்குநராக மாறிய போதும்,, அவர் இயக்குநராக இருந்தார். நான் நடிகராக நடித்துக் கொண்டிருக்கும் போது அவர் இயக்குநராகவே இருக்கிறார். இந்த படத்தை நான் இயக்குவதற்காக திட்டமிட்டிருந்தேன். ஆனால் இந்த படத்தில் நான் ஹீரோவாக நடித்திருக்கிறேன். அவர் இயக்கிருக்கிறார். தொடர்ச்சியாக 40 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமான இயக்குநராக திரையுலகில் வலம் வந்து கொண்டிருக்கும் பி வாசுவின் இயக்கத்தில் நான் நடித்ததை பெருமிதமாக கருதுகிறேன். இந்த படத்தில் நான் வேட்டையனாக நடித்திருக்கிறேன். வேட்டையன் கதாபாத்திரத்திற்கு கிடைக்கும் புகழ் அனைத்தும் இயக்குநர் பி. வாசுவைத் தான் சாரும்.

என்னுடைய டென்ஷன் அனைத்தையும் குறைப்பவர் வடிவேலு அண்ணன். அவருடைய காமெடிகள் தான் என்னை என் டென்ஷனை குறைக்கும். அவரை இயக்குநர் பி வாசு சார் டாக்டர் என்று சொன்னது மிகச் சரி. அவருடன் இணைந்து பணியாற்றியது மறக்க இயலாத அனுபவம்.

சந்திரமுகியாக கங்கனா நடிக்கப் போகிறார் என வாசு சார் சொன்னவுடன், அவர் மிகவும் துணிச்சல் மிக்கவர். சமூக வலைதளங்களில் தீவிரமாக தனது கருத்தை பதிவு செய்பவர். வாழ்க்கையில் கஷ்டப்பட்டு முன்னேறியவர்.. என்பதால் எப்படி நடந்து கொள்வாரோ..! என்று எண்ணிக் கொண்டிருந்தேன். படப்பிடிப்பு தளத்தில் முதல் நாள் வருகை தரும் போது அவருடன் துப்பாக்கி ஏந்திய காவலர்களும் வந்தனர். அவர் ஒரு கலைஞர்தானே… எதற்கு அவருடன் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் வரவேண்டும்? என எண்ணினேன். இது தொடர்பாக வாசுசாரிடம் கேட்டபோது. ‘அவர் இப்படித்தான். அவருக்கு சில பாதுகாப்பு காரணங்களுக்காக ஆயுதம் எழுதிய காவலர்கள் உடன் வருவார்கள்’ என விளக்கம் சொன்னார். அப்போது அவரைப் பார்த்து வணக்கம் சொல்வதற்கு கூட பயமாக இருந்தது. அதன் பிறகு அவரிடம் என் எண்ணத்தை பகிர்ந்து கொண்டேன். அவர் உடனடியாக ஆயுதம் ஏந்திய காவலர்களிடம் பேசி அவர்களை சற்று தொலைவில் நிற்க வைத்தார். அதன் பிறகு கங்கனாவிடம் பழகத் தொடங்கி, கங்கனா என்றேன். அதன் பிறகு கங்கு என்றேன். படப்பிடிப்பு தளத்தில் அவரும் கலாட்டா செய்வார். மகிழ்ச்சியாக இருப்பார். உற்சாகத்துடன் இருப்பார். நான் பழகியதில் குழந்தை உள்ளம் கொண்ட நடிகை என கங்கனாவை சொல்லலாம் அவர் இந்த படத்தில் நடித்திருப்பது படத்திற்கு பலம். ” என்றார்.

இதனிடையே ராகவா லாரன்ஸின் ஆதரவுடன் இயங்கி வரும் மாற்றுத்திறனாளிகள் கொண்ட நடன குழுவினருடன் மேடையில் சம்மணமிட்டு அமர்ந்து, அவர்களுக்கு தன் ஆதரவையும், அன்பையும் லைக்கா சுபாஷ்கரன் தெரிவித்த போது அரங்கமே ஏழுந்து நின்று கரவொலி எழுப்பி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.