full screen background image
Search
Wednesday 13 November 2024
  • :
  • :
Latest Update

சந்திரமுகி 2 திரை விமர்சனம்

சந்திரமுகி 2 திரை விமர்சனம்

கடந்த 2005ம் ஆண்டு பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, பிரபு, ஜோதிகா, வடிவேலு உள்ளிட்டோர் நடித்து வெளியாகி மிகப் பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் சந்திரமுகி. இதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை பி.வாசு இயக்கி தற்போது வெளியாகி உள்ளது. இதில் ராகவா லாரன்ஸ், வடிவேலு, ராதிகா உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். படத்தின் கதை என்ன என்று பார்க்கலாம்.

ராதிகா மிகப் பெரிய கோடீஸ்வரரி. இவரது மில்லில் எதிர்பாராத விபத்து ஏற்பட்டு தொழில் நஷ்டம் ஏற்படுகிறது. அதேபோல் அவரது மகள் காதல் திருமணம் செய்து கொள்கிறார் இதனால் அவர்களை ராதிகா உள்ளிட்ட ஒட்டுமொத்த குடும்பமும் வெறுக்கிறது. ஒரு எதிர்பாராத விபத்தில் ஓடிப்போன ராதிகாவின் மகள் மற்றும் மருமகன் இறந்துவிடுகின்றனர். அவர்களுக்கு குழந்தைகளுக்கு கார்டியனாக இருந்து பார்த்துக் கொள்கிறார் ராகவா லாரன்ஸ். இந்த நிலையில் குடும்பத்துடன் சென்று குலதெய்வ கோவிலில் பூஜை செய்தால் பிரச்சினை தீரும் என்று ராதிகாவின் குடும்ப ஜோசியர் சொல்ல, மேலும் ராகவாவிடம் இருக்கும் குழந்தைகளையும் அழைத்த செல்ல வேண்டும் என்கிறார். குடும்பத்துடன் சொந்த ஊர் செல்லும் ராதிகா அங்கு வடிவேலு பராமரிப்பில் இருக்கும் சந்திரமுகி பங்களாவில் தங்குகின்றனர். அதன்பிறகு அங்கு நிறைய அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கிறது. ஏன் இதெல்லாம் நடக்கிறது. இறுதியில் அனைவரும் தப்பித்தார்களா ? இவர்களுக்கும் சந்திரமுகிக்கும் என்ன தொடர்பு என்பதே கதை.

முதல் பாகம் என்ன மாதிரியான படம் என்று அனைவருக்கும் தெரியும் அதன் பேரையும் புகழையும் கெடுக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் இப்படத்தை பி.வாசு இயக்கியுள்ளார். முந்திய பாகத்தில் நடித்த நடிகர்களில் வடிவேலு மட்டுமே இதில் நடித்துள்ளார். ஆனால் அவராலும் இப்படத்தை காப்பாற்ற முடியவில்லை. ராகவா லாரன்ஸ் அறிமுக காட்சியே நம்மை கதிகலங்க வைக்கிறது. உடம்பை இருப்பாக்கிகடா கிரிகாலா என்று நம்மை நாமே தேற்றிக்கொள்ள வேண்டியதுதான்.

ராகவா லாரன்ஸ் உடம்பில் புகுந்த ரஜினிகாந்த் ஆவியை எப்படி போராடியும் வெளிய கொண்டு வரமுடியாமல் தவிக்கிறார். படத்தில் ஏகப்பட்ட நடிகர்கள் இருந்தாலும் யாருக்கும் எந்தவித அழுத்தமான காட்சிகளும் இல்லை. ஒரு கட்டத்தில் இது சுந்தர் சி படமா என்ற குழப்பம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. இது சந்திரமுகி 2 இல்லை அரண்மனை 4 என்று ரசிகர்கள் கலாய்ப்பதை கேட்க முடிகிறது. முதல் பாகத்தில் வந்த காட்சிகளை அப்படியே ஸ்கூப் பண்ணி எடுத்துவைத்துள்ளார். அதுவும் வேட்டையன் கதாபாத்திரத்தை இந்த அளவுக்கு கேவலப்படுத்த எப்படி இயக்குனர் உங்களுக்கு மனது வந்தது. கீரவாணி இசையில் பாடல்கள் மோசம். பின்னணி இசையில் படத்தை காப்பாற்ற அவர் எடுத்த முயற்சியும் வீணாகிவிட்டது. போதாக்குறைக்கு கிராபிக்ஸ் காட்சிகள் பல் இளிக்கிறது. அந்த பாம்பு பாவம் இந்த பாகத்திலும் வந்து சும்மா இருக்கும் வடிவேலுவை மிஞ்சுகிறது. காமெடி காட்சிகள் எப்படி நீ சிரிக்கிறனு நானும் பாக்குற என்ற நோக்கத்தில் எடுக்கப்பட்டுள்ளன. லட்சுமி மேனன் கதாபாத்திர வடிவமைப்பு பார்த்தபோதே தெரிந்து விடுகிறது என்ன நடக்கப்போகிறது என்று. கங்கனா ரனாவத் சந்திரமுகியாக வருகிறார். ஆனால் அவருக்கான ஸ்கோப் இல்லாததால் வருகிறார் அவ்வளவே.

மற்றபடி கேமரா, ஆர்ட் ஒர்க் எல்லாம் பரவாயில்லை ரகம்தான். இதுக்காயா இந்த பேச்சு பேசுன என்றுதான் இயக்குனரை பார்த்து கேட்க தோன்றுகிறது. பி ‌வாசுவுக்கு தமிழ் சினிமாவில் ஒரு நல்ல பெயர் இருக்கிறது. மீண்டும் இதுபோன்ற படங்களை எடுத்து அதனை கெடுத்துக்கொள்ள வேண்டாம் என்பதே ரசிகர்களின் ஒரே வேண்டுகோள். மொத்தத்தில் சந்திரமுகி 2 – தமிழ்ப்படம் 3. ரேட்டிங் 2/5.