கொரோனாவிடமிருந்து தப்பி ஆன்லைனில் சிக்கும் குழந்தைகள் – இயக்குனர் பிரம்மா வேதனை

Press Meet
0
(0)

ஆன்லைன் கல்விமுறையை உடனே சீர் படுத்த வேண்டும் – இயக்குனர் பிரம்மா வேண்டுகோள்

 

 

 

 

 

 

 

தேசிய விருதை பெற்று பலருடைய கவனத்தை ஈர்த்த படம் ‘குற்றம் கடிதல்’. ஆசிரியர்களுக்கே பாடம் நடத்தியிருக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இப்படத்தை பிரம்மா இயக்கி இருந்தார். இன்றைய சூழலில் நம் கல்வி துறைக்கே மிகவும் பயனுள்ளதான கருத்தை இப்படத்தில் பதிவு செய்திருந்தார். தற்போது இயக்குனர் பிரம்மா ஆன்லைன் கல்விமுறையை உடனே சீர் படுத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, ‘கொரோனா காலத்தில் ஆன்லைன் வகுப்புகளினால் குழந்தைகளுக்கு உடல் மன சமூக ரீதியான சிக்கல்கள் உருவாகியுள்ளன. மேனிலை மாணவருக்கு எட்டு மணி நேரம், 6-9 மாணவருக்கு ஆறு மணி நேரம், சனிக்கிழமை பரீட்சைகள் என நர்சரி வாண்டுகள் கூட ஆன்லைனுக்கு விதிவிலக்கல்ல.. தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் கல்வி நிறுவனம் (NIMHANS) குழந்தைகள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மின்னணு காணொளிகளைப் பார்க்கக் கூடாதென்கிறது. போன் – லாப்டாப்களினால் கிட்டப்பார்வை கோளாறுகள் உருவாகும் என்று கண் சிகிச்சை மையங்களும் அவற்றின் கதிர்வீச்சுகளினால் மண்டைக்கூட்டில் உள்ள எலும்புதசைகள் பாதிக்கப்பட்டு புற்றுநோய் வரக்கூடும் என்றும் அமெரிக்க குழந்தை வளர்ப்பு கல்வியகமும் எச்சரிக்கின்றன. மேலும் படைப்புத்திறன் குறைதல், பழகும் சிக்கல்கள், தூக்கமின்மை, கவனக்குறைபாடு, உடல் எடை அதிகரிப்பு என பட்டியல் நீள்கிறது.

 

 

 

 

 

 

 

இணையத்தொடர்பு இல்லாத, லாக் டவுனிற்கு கிராமங்களில் தஞ்சம் புகுந்துவிட்ட, நெட் பேக் கட்ட வசதியில்லாத குழந்தைகள் மீண்டும் பள்ளிக்கு வரும் போது மூன்று மாதங்களாய் விடுபட்ட பாடத்தை யார் எடுப்பார்கள்? கேரள தலித் மாணவிக்கு அடுத்து இங்கும் ஆன்லைன் வகுப்புக்கு இணைய வழியின்றி தற்கொலை செய்ய வேண்டுமா? இது இந்திய அரசியலைப்பு article 14ன் படி, பாகுபாடற்ற கல்விக்கான அடிப்படை உரிமையை உலுக்கும் குற்றம் அல்லவா? இது மொபைல் மற்றும் செயலிகளின் வணிகமா அல்லது கல்வி எனும் பெரும் வணிகத்தின் புது பரிணாமமா?

பத்தாம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்த அதே துணிவு தமிழக அரசுக்கு இதிலும் வேண்டும். பள்ளிகளைப் பணித்து ஆன்லைன் கல்விமுறையை உடனே சீர் படுத்த வேண்டும். இமெயில் மூலம் வீட்டுப்பாடம், ஆன்லைன் ரேடியோ பாடம், என பல ஆலோசனைகள் இருந்தாலும் குறைந்த பட்சம் மின் திரையை பார்க்கும் நேரத்தை 1 – 2 மணி நேரமாக குறைத்தே ஆக வேண்டும். ஐ.பி.எஸ், விமானி, பொறியாளர், கலைஞர்களாக ஆகக்கூடிய குழந்தைகளின் கண்பார்வையையும் படைப்பாற்றலையும் பெற்றோர்கள் பாதுகாக்க வேண்டும். அவர்கள் கொரோனாவிடமிருந்து தப்பி ஆன்லைன் என்னும் பிசாசிடம் சிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.