100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்த சீயான் விக்ரமின் ‘தங்கலான்’
*உலகளவில் 100 கோடி ரூபாய் வசூலை கடந்த ‘தங்கலான்’*
ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸ் தயாரிப்பாளர் கே. ஈ. ஞான வேல் ராஜா தயாரிப்பில், பா. ரஞ்சித் இயக்கத்தில் ‘சீயான்’ விக்ரம் நடிப்பில் வெளியான ‘தங்கலான்’ திரைப்படம் உலகளவில் நூறு கோடி ரூபாய் வசூலைக் கடந்து புதிய சாதனையை படைத்து வருகிறது.
இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவான ‘தங்கலான்’ திரைப்படத்தில் சீயான் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, டேனியல் கால்டாகிரோன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கோலார் தங்க வயல் பின்னணியில் உருவான இந்த திரைப்படம் கடந்த நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஒடுக்கப்பட்ட மக்களின் யதார்த்த வாழ்வியலையும், ஆதிக்கத்திற்கு கட்டுப்பட்டு உரிமைகளுக்காக போராடிய அவர்களின் போராட்ட வாழ்வியலை மாய யதார்த்தம் மற்றும் புதுமையான திரை மொழியால் உருவாக்கப்பட்டிருந்தது. இதில் சீயான் விக்ரமின் அர்ப்பணிப்புடன் கூடிய கடின உழைப்பை கண்களை இமைக்க மறந்து, அகல விரித்து.. கண்டு ரசித்து, வியந்து பாராட்டாதவர்களே இல்லை எனலாம். இது அவருடைய ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினருக்கும் புதிய அனுபவத்தை அளித்தது.
இந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று திரையரங்குகளில் வெளியான ‘தங்கலான்’ ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப பாக்ஸ் ஆபீசில் வெற்றி பெற்ற திரைப்படமாகவும் சாதனை படைத்தது. இந்த திரைப்படம் இதுவரை உலகளாவிய அளவில் பாக்ஸ் ஆபீசில் 100 கோடி ரூபாயை கடந்து புதிய வசூல் சாதனையை நோக்கி பயணத்தை தொடர்கிறது.
சீயான் விக்ரமின் ‘தங்கலான்’ திரையரங்குகளில் வெளியான முதல் நாளில் உலகளவில் 26 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இது சீயான் விக்ரமின் திரையுலக பயணத்தில் அவருடைய திரைப்படங்களுக்கு கிடைத்த சிறந்த முதல் நாள் வசூலாக அமைந்தது.
‘தங்கலான்’ தமிழகத்தில் மட்டும் இல்லாமல் ஆந்திரா – தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் வெற்றி பெற்றது. இந்தத் தருணத்தில் இந்தத் திரைப்படம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 6ம் தேதி முதல் வட இந்திய நகரங்களில் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது. இதனால் இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.