full screen background image
Search
Sunday 24 November 2024
  • :
  • :

திரையுலக நலனுக்காக பேரணி !… மக்கள் நலனுக்காக ?….

ஒரு பக்கம் ஸ்டெர்லைட்.. ஒரு பக்கம் காவேரி.. என தமிழ்நாடே தகித்துக் கொண்டிருக்க, தமிழ்த் திரையுலகமோ 4-ஆம் தேதி கோட்டையை நோக்கி பேரணி செல்லவிருப்பதாய் அறிவித்திருக்கிறது.

உண்மையிலேயே சினிமா இப்போது மிகவும் மோசமான காலகட்டத்தில் சிக்கி மூச்சுத் திணறிக் கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட “மோனோபோலி” சாம்ராஜ்யத்தைக் கட்டமைத்து விட்டது “கியூப்”. அவர்களை மீறி எந்தப் படத்தையும் திரையிட முடியாது என்கிற சூழல். அதனால் தான் வழக்கமாக விஷாலுடன் முட்டிக்கொண்டு நிற்கும் தயாரிப்பாளர்கள் கூட இந்த விசயத்தில் அவருக்கு ஆதரவாக நிற்கிறார்கள்.

நடிகர் நடிகையர் சம்பளப் பிரச்சினை, கியூப் கட்டணம், இரட்டை வரி, திரையரங்கில் கணக்குக் காட்டப்படாத டிக்கட்டுகள், தமிழ் ராக்கர்ஸ், ரிலீஸ் குளறுபடிகள், சென்சார் காலக் கெடு, தமிழ் ராக்கர்ஸ் திருட்டுத் தொல்லை என் ஒரு தயாரிப்பாளர் சந்திக்கிற பிரச்சினைகளையும், சுமைகளையும் சொல்லி மாளாது. இவ்வளவையும் தாண்டித் தான் எந்த படமானாலும் ஒரு தயாரிப்பாளரால் முழுமை பெற்று வெளியே வருகிறது.

ஒரு தயாரிப்பாளர் பாதிக்கப்படும் போது, அந்த படத்துடன் தொடர்புடைய பலரும் பாதிக்கப்படுகிறார்கள். அந்தப் பலருக்குள், அவர்களுடைய குடும்பமும் அடங்கிப் போகிறது. சினிமாவை நம்பியும் பல அடுப்புகள் எரிந்து கொண்டிருக்கிறது. இது எல்லாம் ஏற்புடையது தான், நியாயம் தான்.

ஆனால் முழுக்க முழுக்க மக்களை மட்டுமே நம்பி, ஒரு குடும்பம் பொழுதுபோக்கிற்காக செலவு செய்கிற குறிப்பிட்ட தொகையை மட்டுமே நம்பி இவ்வளவு பெரிய பணம் முதலீடு செய்கிற இந்த ஒட்டுமொத்த சினிமாத்துறையும் இந்த மக்களுக்கு என்ன செய்திருக்கிறது?? எந்த மக்கள் பிரச்சினைக்கு ஒட்டு மொத்தமாய் திரண்டிருக்கிறது??

தங்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் ஒன்று கூடும் இந்தத் திரையுலகத்திற்கு, தங்களை வாழ வைக்கும் தெய்வங்களாகிய தமிழக மக்கள் வாடிக்கிடக்கும் போது அவர்களுக்காக திரண்டு நிற்க எது தடையாக இருக்கிறது??

கடந்த 47 நாட்களாக தூத்துக்குடி கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. தூத்துக்குடி மக்கள் மட்டுமல்லாது தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் இளைஞர்களும், அமைப்புகளும் அங்கே முகாமிட்டு போராடிக் கொண்டிருக்கிறார்கள். இன்று வரையில் அரசோ, அரசு அதிகாரிகளோ அந்த மக்களுடன் எந்த விதமான பேச்சுவார்த்தையையும் முன்னெடுக்கவில்லை.

காவிரி விவகாரமோ இதை விட மோசம். ஹைட்ரோகார்பன், மீத்தேன், ஷேல் கேஸ் என அடுத்தடுத்த திட்டங்களால் முழுக்க முழுக்க அழிக்கப்பட்ட பகுதியாக மாறிவரும் காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு பேரிடியாக அமைந்திருக்கிறது. கடந்த ஆண்டு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பைக் குப்பையில் கடாசிய மத்திய அரசு, இந்த ஆண்டு மறுபடியும் உச்சநீதி மன்றத் தீர்ப்பை மதிக்காமல் கடைசி நாள் வரை மௌனம் காத்து நம்ப வைத்துக் கழுத்தறுத்திருக்கிறது.

இதனால் கொதித்துப் போயிருக்கும் தமிழக விவசாயிகள் டெல்லியில் முகாமிட்டு போராடிக் கொண்டிருக்கிறார்கள். அரசியல் கட்சிகளோ இப்போது தான் தூங்கி எழுந்து போராட்டத்திற்கு நல்ல நாள் பார்த்து, நல்ல நேரம் பார்த்து தேதி குறித்திருக்கிறார்கள்.

இந்த சூழலில் தான் தயாரிப்பாளர் சங்கமும், திரையுலகின் நலனுக்காக கோட்டை நோக்கி பேரணி என்று அறிவித்திருக்கிறது. சினிமா கஷ்டமான காலகட்டத்தில் இருக்கிறது. சினிமா தயாரிப்பாளர்கள், சினிமா தொழிலாளர்கள் நலிந்து போயிருக்கிறார்கள்.. இவை எல்லாமே உண்மைதான், நியாயம் தான்.

ஆனால், மக்கள் அதை விடவும் மோசமான காலகட்டத்தில் இருக்கிறார்கள். கிட்டத்தட்ட சாவின் விளிம்பில் நிற்கிறார்கள். மக்களெல்லாம் மாண்ட பின் யாருக்காக சினிமா எடுக்க வேண்டும்? மக்கள் இல்லாமல் சினிமா எப்படி வாழும்?? இதையெல்லாம் ஒரு நிமிடம் யோசித்திருக்கலாம் அல்லவா?

ஏற்கனவே சினிமாக்காரர்கள் என்றாலே மக்களுக்கு அந்நியமானவர்கள் என்ற எண்ணம் நிலவுகிறது. இப்போது அதனை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக ஒட்டுமொத்த தமிழகமும் ஒரு மாபெரும் உரிமைப் போருக்காக தயாராகும் இந்த நேரத்தில், கோட்டை நோக்கி பேரணி என தயாரிப்பாளர் சங்கம் அறிவித்திருக்கிறது. ஒரு மாத கால ஸ்டிரைக் என்பது உள்ளபடியே மிகப்பெரிய காலகட்டம், பெரிய முயற்சி. எனவே, முன் வைத்த காலை பின் வைக்க முடியாத ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தயாரிப்பாளர் சங்கம் இருப்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் மக்கள் புரிந்து கொள்வார்களா? என்பது பெரிய கேள்விக்குறி!

ஏற்கனவே, மக்கள் பிரச்சினைகளைத் திசை திருப்பும் ஊடகங்களை புறக்கணியுங்கள் என்று சமூக வலைதளங்களில் வாயிலாக தகவல் பரப்பப்பட்டு ஒரு பிரபல நாளிதழ் ஒரே நாளில் மிகப்பெரிய சரிவை சந்தித்திருக்கிறது. சில தொலைக்காட்சி நிருபர்களைக் கூட போராட்டக்களத்திற்குள் அனுமதிக்காமல் திருப்பி அனுப்பியதும் நடந்தேறியிருக்கிறது. இந்த புறக்கணித்தல் என்பது நாளை சினிமாவிற்கும் நடக்காது என்பதற்கு எந்த உத்திராவதமும் இல்லை.

மக்களை புரிந்துகொண்டு, மக்களுக்கிருக்கும் தலையாய பிரச்சினைகளை புரிந்து கொண்டு நடப்பது அரசியல்வாதிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்பதல்ல. சினிமாக்காரர்களுக்கும் பொருந்தும். காரணம் இருவருமே மக்களை நம்பியே இருக்கிறீர்கள். மக்களே உங்களது எஜமானர்கள். இப்போது கூட ஒன்றும் கெட்டுப்போகவில்லை. 4ஆம் தேதி, அதே பேரணியில் காவிரிக்காகவும் உங்கள் குரல்கள் ஒலித்தால்.. நிச்சயம் மக்களும் உங்களது பிரச்சனைகளுக்கு காது கொடுப்பார்கள், மதிப்பார்கள்.