full screen background image
Search
Thursday 7 November 2024
  • :
  • :
Latest Update

சினிமா துறையில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு

 
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு தென்னிந்திய மொழிகளையும் முன்னிலைப்படுத்தி பாரத் நிதி என்ற அமைப்பு தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையுடன் இணைந்து நடத்தும் ‘இந்திய பொழுதுபோக்கு துறை: உலகளாவிய தலைமையாக உருவாக்கம்’ என்ற தலைப்பில் ஒரு கான்ஃபெரன்ஸை வரும் ஜனவரி 6ஆம் தேதி சென்னை ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலில் நடத்த இருக்கிறது. அது குறித்து விழா அமைப்பாளர்கள் பத்திரிக்கையாளர்களை சந்தித்து விளக்கி பேசினர். 
 
இந்த மாதிரி ஒரு கான்ஃபெரன்ஸ் முதன்முறையாக தென்னிந்திய சினிமாவில் நடத்தப்பட இருக்கிறது. இதில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம், மத்திய, மாநில அமைச்சர்கள் பங்கேற்கிறார்கள். ஒவ்வொரு மொழி சினிமா துறைக்கும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. பைரஸி மிக முக்கியமான பிரச்சினை. அதேபோல இந்தி சினிமாவுக்கு இருப்பதை போல ஓவர்சீஸ் மார்க்கெட் தென்னிந்திய படங்களுக்கு இல்லை. தமிழ் படங்கள் 25 நாடுகளிலும், தெலுங்கு 5 நாடுகளிலும், மலையாளம் 4 நாடுகளிலும், கன்னடம் 1 அல்லது 2 வெளிநாடுகளில் தான் வெளியாகின்றன. அந்த மார்க்கெட்டை விரிவாக்குவது பற்றியும் விவாதிக்கப்படும். ஆரம்பத்தில் ஐடிபிஐ வங்கி நெகடிவ் ரைட்ஸை மட்டுமே வைத்து சினிமா தயாரிப்புக்கு கடன் கொடுத்து, 100% அதை திரும்ப பெற்றது. பின் சில தவறான அணுகுமுறைகளால் அது நின்று விட்டது. அதை மீண்டும் பெற வழி செய்ய முயற்சி செய்வோம். வெள்ளை அறிக்கை தயார் செய்து ஸ்மிரிதி இரானி மூலமாக பிரதமர்  மோடியிடம் கொண்டு செல்ல இருக்கிறோம் என்றார் ஆனந்தா எல். சுரேஷ்.
 
பாரத் நிதி என்பது டெல்லியில் அமைந்துள்ள பொது கொள்கைகள் வாதிடும் ஒரு நிறுவனம். இந்தியாவில் பல்வேறு நகரங்களில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் இயங்கி வருகிறது. அரசியல்வாதிகள், கொள்கை உருவாக்குபவர்கள் உட்பட பல விஷயங்களுக்காக நாட்டின் வளர்ச்சியில் இயங்கி வருகிறோம். முதல் முறையாக  சினிமா துறையில் உள்ள பிரச்சினைகளில் கவனத்தை செலுத்தி அதன் பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்ல முயற்சிக்கிறோம். ஐடியாக்களை உருவாக்கி வளர்ச்சியில் கொண்டு செல்ல முயற்சிக்கும் ஐடியா தான் இந்த கான்ஃபெரன்ஸ் என்றார் பாரத்நிதி அனூப்.
 
50 வருட, 75 வருட, 100 வருட சினிமா விழாக்கள் சென்னையில் தான் நடந்தது. தென்னிந்திய வர்த்தக சபை தான் அதை நடத்தியது. தென்னிந்திய சினிமாவுக்கு சென்னை தான் தலைமையகமாக இருந்து வருகிறது. தென்னிந்திய சினிமாவுக்கு தற்போது நிறைய பிரச்சினைகள் உள்ளன. அவற்றை அரசிடம் சொல்ல ஒரு பிரதிநிதி  வேண்டும். அதற்கு தான் இந்த கான்ஃபெரன்ஸ். பாரத் நிதி அமைப்பு தானாக உதவ முன்வந்தது. எங்களுக்கு அரசும் உதவ வேண்டும். அமைச்சர்கள் வந்து எங்கள் கஷ்டங்களை கேட்க வேண்டும், அதனால் அவர்களையும் இந்த கான்ஃபெரன்ஸுக்கு அழைத்திருக்கிறோம். பாரத்நிதி எங்களுக்கும், அரசுக்கும் இடையே பாலமாக இருப்பார்கள். சென்சார், விலங்கு நலத்துறை வாரியம், ஜிஎஸ்டி போன்ற பிரச்சினைகளையும் பேச இருக்கிறோம். 
 
இந்தியாவில் ஆண்டுக்கு 1800 படங்கள் வெளியாகின்றன. அதில் 65% படங்கள் தென்னிந்தியாவில் உருவாகும் படங்கள். இந்த கான்ஃபெரன்ஸால் பெரிய மாற்றம் உருவாகும். நம் சினிமாவுக்கு உலகளாவிய வர்த்தகம் உண்டு. ஆனால் அதை நாம் இன்னும்  அடையவில்லை. அதை எப்படி அடைவது என்பதை பற்றியும் விவாதிக்க இருக்கிறோம். 4 மாநிலங்களையும் சேர்ந்த அனைத்து துறை பேச்சாளர்கள் கலந்து கொண்டு, பிரச்சினைகளுக்கு தீர்வு காண விவாதிக்கிறார்கள். சுஷ்மா சுவராஜ் அவர்கள் முயற்சியால் சினிமாவுக்கு தொழில் அங்கீகாரம் வழங்கப்பட்டு, முன்பு கொடுக்கப்பட்ட வங்கி கடன்கள் தற்போது நிறுத்தப்பட்டு விட்டது. அதை பற்றிய விவாதமும் இருக்கும் என்றார் ரவி கொட்டாரக்கரா.
 
உலகிலேயே இந்தியாவில் தான் அதிக சினிமாக்கள் தயாரானாலும் மற்ற நாடுகளை காட்டிலும் திரையரங்குகள் குறைவு. சீனாவில் 35000 திரையரங்குகள் உள்ளன, இந்தியாவில் வெறும் 9000 திரையரங்குகள் மட்டுமே உள்ளன. அதையும் அரசிடம் சுட்டிக் காட்டுவோம். சினிமாவுக்கு உள்ளாட்சி வரி அதிகம் என்ற பிரச்சினையையும் எடுத்து சொல்வோம் என்றார் காட்ரகட்டா பிரசாத்.