ஒருவழியாக ஒட்டுமொத்த திரையுலகினரின் கூட்டு முயற்சிக்கும், காத்திருப்பிற்கும் பலன் கிடைத்திருக்கிறது.
“தமிழ் திரைத்துறை வரும் ஜூன் மாதம் முதல் முழுமையாக கணினி மையமாக்கப்படும். இனி முழு வெளிப்படைத்தன்மையோடு தமிழ் சினிமா இயங்கும்! தயாரிப்பாளர் சங்கமே டிக்கெட் விற்பனை இணையதளத்தை துவங்கும். அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அரசு நிர்ணயம் செய்துள்ள அதிகபட்ச டிக்கெட் விலைக்கு மேல் எங்கும் டிக்கெட் விற்கப்படாது. அது கண்காணிக்கப்படும்” என தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து அறிவித்து, கடந்த 16-ஆம் தேதி முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படப்பிடிப்புகள் வெள்ளிக்கிழமை (20-4-18) முதல் தொடங்கும் என பச்சைக்கொடி காட்டியிருக்கிறார்கள்.
இதனால், தமிழ்த் திரையுலகம் மீண்டும் உயிர்கொண்டிருக்கிறது. அதன் முன்னறிவிப்பாக, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துள்ள “மெர்க்குரி” திரைப்படம் வருகிற 20-ஆம் தேதி முதல் தமிழகமெங்கும் வெளியாக இருக்கிறது. அதனைத் தொடர்ந்து, எந்தெந்த படாங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டதோ அந்த வரிசையின் படி முறைப்படுத்தி வெளியிட முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
இதனால், ரஜினிகாந்த் நடித்துள்ள “காலா” திரைப்படம் அறிவித்தபடி ஏப்ரல்-27 ஆம் தேதி வெளியாக வாய்ப்பில்லை எனத் தெரிகிரது. கமல் ஹாசனின் “விஸ்வர்ரூபம்-2” திரைப்படம் வெளியீடு மே மாதத்தில் இருக்கலாம் எனத் தெரிகிறது. இவை அல்லாமல் விஷாலின் “இரும்புத்திரை”, ஜெயம் ரவியின் “டிக் டிக் டிக்” , “மிஸ்டர்.சந்திரமௌளி”, மோகினி”, “கரு”, “நரகாசூரன்”, “இருட்டு அறையில் முரட்டு குத்து”, “கஜினிகாந்த்”, “அசுரவதம்”, “பரியேறும் பெருமாள்”, “காளி”, “கன்னிராசி”, “ரங்கராட்டினம்”, “நரை”, “சீமத்துரை” என 30-க்கும் மேற்பட்ட படங்கள் வரிசைகட்டி நிற்கின்றன.
நல்லவேளையாக கோடை விடுமுறை நேரத்தில் ஸ்ட்ரைக் முடிந்து விட்டதால், எந்த படம் முதலில் வருவதென கடும் போட்டி நிலவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எப்படியோ இந்தக் கோடை சினிமா ரசிகர்களுக்கு நிச்சயம் கொண்டாட்டம் தான்.