திரையுலகில் போதை பொருட்கள் தாராளமாக புழங்குவதாக புகார்கள் எழுந்துள்ளன. தடை செய்யப்பட்ட எம்.டி.எம்.ஏ. போதை மாத்திரைகளை பயன்படுத்தியதாக பிரபல கன்னட நடிகை ராகிணி திவேதி கைது செய்யப்பட்டு உள்ளார். இந்தி பட உலகையும் போதை பொருள் விவகாரம் உலுக்கி வருகிறது. இந்தி நடிகை ரியா சக்கரவர்த்திக்கு போதை பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ரியாவின் சகோதரர் கைதாகி உள்ளார்.
இந்த நிலையில் சுமிதா என்ற பெயரில் படங்களில் நடித்து வரும் கன்னட நடிகை நிவேதிதா கஞ்சாவுக்கு ஆதரவாக பேசி சர்ச்சையில் சிக்கி உள்ளார். இவர் தமிழில் கிஷோருடன் போர்க்களம், நடிகர் அபிஷேக் இயக்கிய கதை, பெப்சி விஜயன் இயக்கிய மார்க்கண்டேயன், சித்திரம் பேசுதடி 2-ம் பாகம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
அவர் கூறும்போது, “துளசியைப்போல் கஞ்சா மருத்துவ குணம் கொண்டது. இதனை தடை செய்வதற்கு முன்பு பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தி வந்தனர். இதை தடை செய்ததற்கு பின்னால் பெரிய சதி இருக்கிறது. 40 நாடுகளில் கஞ்சாவை சட்டப்பூர்வமாக பயன்படுத்துகிறார்கள். எனவே இதனை சட்டப்பூர்வமாக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். இதையடுத்து சமூக வலைத்தளங்களில் சுமிதாவுக்கு எதிராக பலரும் கண்டன பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள். அவரை கைது செய்ய வேண்டும் என்றும் வற்புறுத்தி உள்ளனர்.